இறுதி போட்டிக்கு போவது யார்? - இன்று இலங்கை,நியூசிலாந்து போட்டி

on செவ்வாய், 29 மார்ச், 2011உலக கோப்பை கிரிக்கெட்டில் பைனலுக்கு செல்லும் வழியை தேடுகிறது நியூசிலாந்து.

உலக கோப்பை தொடர் துவங்கும் முன் இந்திய துணைக்கண்டத்தில் நடந்த பல்வேறு தொடர்களில் நியூசிலாந்து அணி மிக மோசமாக தோற்றது.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-4, இந்தியாவுக்கு எதிராக 0-5 என தொடர் தோல்விகளால் துவண்டு இருந்தது. பின் சொந்த மண்ணில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தோற்று வெறுப்பை சம்பாதித்தது. இந்நிலையில் அணியின் பயிற்சியாளராக, ஜான் ரைட் பொறுப்பேற்றார். பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்டு நியமிக்கப்பட்டார். இவர்கள் இணைந்து, எப்படியும் அணி அரையிறுதிக்கு கொண்டு செல்வோம் என்று சபதம் செய்தனர்.

இதற்கேற்ப, பத்தாவது உலக கோப்பை தொடரை, கென்யாவுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியுடன் துவக்கியது. பின் அடுத்தடுத்து சொதப்ப, பட்டியலில் நான்காவது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

ஆனால் காலிறுதியில் நியூசிலாந்து அணி, பி பிரிவில் முதலிடம் பிடித்த வலிமையான தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்ய நியூசிலாந்து 221 ரன்கள் மட்டும் எடுக்க, அவ்வளவு தான் தோல்வி உறுதி என்றனர். ஆனால் எதிர்பாராத திருப்பமாக, தென் ஆப்ரிக்க அணியை 172க்கு ஆல் அவுட் செய்து, ஆறாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது வெட்டோரி அணி.

இதற்கு முன், 1975, 1979, 1992, 1999 மற்றும் 2003 தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறிய போதும், ஒருமுறை கூட அதில் வெற்றி பெற்றதில்லை. இம்முறை லீக் போட்டியில் தோல்வியடைந்த இலங்கையை மீண்டும் அரையிறுதியில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மற்ற இடங்களில் விளையாடியதை விட, இந்திய துணைக்கண்டத்தில் அதிக போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் வெட்டோரி அணிக்கு உண்டு. இந்த அனுபவத்தை கொண்டு, இம்முறையாவது வெற்றி பெற்று, முதன் முறையாக பைனலுக்கு செல்லும் வழியை சரியாக கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காலிறுதியில் இங்கிலாந்தை இலங்கை வென்ற ஆடுகளத்தை (பிட்ச்) புதுப்பிக்காமல் அதிலேயே அரையிறுதி ஆட்டத்தை நடத்த இருப்பது குறித்து நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி ஆட்டம் இலங்கை - நியூசிலாந்து இடையே கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இலங்கை அணி இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 இந்த ஆட்டத்துக்குப்பின் ஆடுகளம் புதுப்பிக்கப்படாமல், அப்படியே அரையிறுதிக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து வெட்டோரி கூறியிருப்பது: பொதுவாக ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் ஆடுகளம் புதுப்பிக்கபடுவது வழக்கம். ஆனால் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டம் நடைபெறும் மைதானத்தின் ஆடுகளம் புதுப்பிக்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இந்த மைதானத்தில்தான் சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இலங்கை இங்கிலாந்தை வென்றுள்ளது என்றார்.

 அரையிறுதி ஆட்டம் குறித்துப் பேசிய அவர், உலகக் கோப்பையில் இதுவரை அரையிறுதிக்கு மேல் முன்னேறியதில்லை என்ற நிலையை மாற்றி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற உத்வேகத்துடன் இருக்கிறோம் என்றார் வெட்டோரி.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக