வெள்ளி, 6 மே, 2011

மொபைல் சேவகன்..!


கதிர் நீண்ட நேரமாக தான் விரும்பும் செய்தி எப்போது கிடைக்கும் என்ற ஆவலில் மொபைல் போனை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.  மாலை 3.30 மணியில் இருந்து  4.53 வரை ஒவ்வொரு நிமிடமும் மொபைல் சரியாக நேரத்தைக் காட்டுகிறதா என்று பார்த்துக் கிடந்தான் அவன்.

கிண்டி பார்க்கிற்கு ஒருவேளை வாய் இருந்திருந்தால் நிச்சயம் இவனின் இந்நிலையை பார்த்து சிரித்திருக்கும் அல்லது திட்டி துரத்தியாவது இருக்கும்.

புதிய எஸ்எம்எஸ் வந்திருப்பதாக மொபைல் அறிவித்த உடன் நிச்சயம் அது தான் எதிர்பார்க்கும் மெசேஜ் தான் ஆவலின் மிகுதியில் திறந்து பார்த்தான்.

அது அவனை மேலும் எரிச்சலூட்டியது.

"சிரிக்கும் சினேகா வால்பேப்பர்!!!
அவளைப் பெற கீழே சொடுக்கவும் ரூ.15 மட்டுமே".

என்று ஒரு இணைய முகவரியை காட்டியது திரை.
தன் காதலி எப்போது வருவாள், வருவதற்கு கால தாமதம் என்றால் ஒரு எஸ்எம்எஸ் ஆவது கொடுக்கலாமே என்று கோபத்தில் தகித்துக் கொண்டிருந்த அவனை இது மேலும் ஆத்திரமூட்டியது.

கதிர்,ஐஐடி யில் படிக்க ஆசைப்பட்டவன் ஆனால் நுழைவுத் தேர்வில் இரண்டு மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்க முடியாமல் சென்னையில் ஒரு அரைகுறை கல்லூரியில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்து வேலை கிடைக்கும் வேளைக்காக காத்திருக்கும் புதிய பட்டதாரி.
அந்த கல்லூரியில் இருந்து அவனுக்கு உருப்படியாக கிடைத்தது இரண்டு தான். ஒன்று,நிறைய நண்பர்கள்.இரண்டு,ஒரே ஒரு காதலி,ரீனா(?).

3.30 மணிக்கு வருகிறேன் என்றவள் இன்னமும் வந்த பாடில்லை,இவன் மொபைலும் அவள் எண் தொடர்பு கொள்ள இயலாத இடத்தில் இருப்பதாக சொல்கிறது.
 
நேரம் 4.56 ஐ கடந்து நொடிகளால் அடுத்த நிமிடத்தை நெருங்கி கொண்டிருந்த போது, ஒரு எஸ்எம்எஸ் வந்தது.

"ஆஸ்திரேலியாவில் எம்.எஸ் படிக்க வேண்டுமா நிறைய ஊக்கத் தொகையுடன்,
இலவச கலந்தாய்விற்கு வாருங்கள்.
மேலும் விவரங்களுக்கு : சுரேஷ்,989435xxxx"

ஏற்கனவே படித்த படிப்பிற்கே பித்து பிடித்து விட்டது இதில் ஆஸ்திரேலியா ஒரு கேடா என்று நொந்து கொண்டான் கதிர்.அவனால் வேறென்ன செய்ய முடியும், ஏழு முறை அரியர் வாங்கி கஷ்டப்பட்டு அல்லவா பொறியியல் படிப்பையே முடித்தான்.

அவன் முதன் முதலாக எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,அது அவன் ஊட்டியில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த ஐந்தாவது செமஸ்டரின் விடுமுறை சமயம். முடிவுகள் வந்து விட்டது என ஒரு நண்பன் சென்னையில் இருந்து அழைத்து சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தான்

நண்பர்களுள் ஒருவன் வைத்திருந்த ப்ளாக்பெர்ரி் மூலம் பல்கலைக்கழக தளத்தை இணையதளத்தில் தேர்வு முடிவுகளை சில முயற்சிகளுக்குள் பார்த்தனர். பெரும்பான்மையானோர் முடிவுகள் எதிரபார்த்த படியே சில அரியர்களுடனே வந்தது.கதிர் மட்டும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தான் பழைய அரியர்களையும் சேர்த்து. உடனே பார்ட்டி என்ற பெயரில் இவன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி காணாமல் போயிற்று.

மணி  5 ஐக் கடந்து மூன்று நிமிடங்கள் ஆகி இருந்த வேளையில் மீண்டும் ஒரு எஸ்எம்எஸ், இம்முறை என்ன என்று வெறுப்புடன் எடுத்தவனுக்கு மொபைலை தூக்கி போட்டு விடலாம் என்ற அளவிற்கு அந்த செய்தி இருந்தது.

"அக்ஷய திரிதியை ஆஃபர்
ஐந்து சவரன் நகை எடுத்தால்
இரண்டு நாள் கொடைக்கானல் சுற்றுலா "

என்று ஒரு நகைக்கடை விளம்பரத்தை அது காட்டியது.

ரீனா ஏன் இன்னும் வரவில்லை,ஒருவேளை எதாவது பிரச்னையாக இருக்குமோ என்று அவன் மனம் அவளைச் சுற்றியே இருந்தது. எதற்கும் அவள் தோழியிடம் போன் செய்து கேட்கலாம் என்று தோன்றவே தோழி எண்ணுக்கு டயல் செய்தான்.

"உங்களுக்கு இந்த பாட்டு பிடிச்சிருந்தா *9 ஐ அழுத்துங்க"
என்ற படி என்னமோ ஏதோ பாடலுடன் அழைப்பு சென்றது.
 சில நொடிகளில் அழைப்பை ஏற்ற தோழி,

"சொல்லு, கதிர் என்ன திடீர்னு போனெல்லாம் பண்ணியிருக்க"

"இல்லை,ரீனா இருக்காளான்னு கேட்கலான்னு.."

", அதுவா சங்கதி.. அவள் உங்களை பார்க்கத் தான் கிளம்பி வந்தா..
இன்னுமா வரல"

"இல்லை"

"அவள் செல்லுக்கு ட்ரை பண்ணீங்களா"

"நாட் ரீச்சப்ள் னு வருது"

"ஓகே,அவள் இங்க வந்தா உங்களுக்கு இன்பார்ம் பண்றேன், நீங்களும் வந்தா சொல்லுங்க"

"சரி" என்று இணைப்பை துண்டித்தான் கதிர்.

ரீனாவின் நினைவுகளால் அவனுக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது.
அடுத்த எஸ்எம்எஸ் வந்தது, இல்லை இல்லை எரிச்சல் வந்தது.

"டாக்டர்.காத்ரா கிளினிக்,அனைத்து சுக வீனங்களுக்கும்
24 மணி நேர சேவை, ஆழ்வார்பேட்டை,அசோக் நகர்,அண்ணா நகர்,கீழ்ப்பாக்கம்
உதவிக்கு : 1800 289 xxxx"

என்று மருத்துவ சேவை மையத்தின் விளம்பரம் அவன் செல்போன் திரையில் பளிச்சிட்டது. முன்பெல்லாம் வழுக்கை தலை உள்ளவருக்கு முடி வளர விளம்பரம்,இளைஞர்களுக்கு டேட்டிங் தள விளம்பரம்,வயதானால் எல்ஐசி விளம்பரம் என்று ஆட்களுக்கு தகுந்த வாறு விளம்பரம் அனுப்புவார்கள், இப்போது சூழ்நிலைக்கு ஏற்பவும் அனுப்ப ஆரம்பித்து விட்டார்களா என்ன? என்றெல்லாம் யோசிக்கும் அளவுக்கு அவனிடம் இப்போது பொறுமை இல்லை. 

இதற்கு மேலும் தாங்கிக்க முடியாமல் மொபைலை அணைத்து விட முடிவெடுத்த நேரத்தில் அந்த அழைப்பு வந்தது.

"மிஸ்டர்.கதிர்" என்று மெல்லிய பெண்ணின் குரல் ஒலித்தது.

"எஸ்,இட் இஸ்"

"உங்களுக்கு ரீனாவைத் தெரியுமா"

"எஸ் மேம், ஐ நோ ஹர்"

"நீங்க உடனே போரூர்ல இருக்க கே.எல் ஹாஸ்பிட்டல் வாங்க"

"என்னாச்சு மேம்"

"நேர்ல வாங்க"

மிகுந்த பதட்டத்துடன் தன் மோட்டார் பைக்கை கிளப்பினான்,கதிர்.
வழி நெடுகிலும் அவளுக்கு என்ன ஆயிருக்கும் என்று பதைத்துக் கொண்டே சென்றான்.

"ஒருவேளை விபத்து நடந்திருக்குமோ,அப்படி என்றால் உயிருக்கு ஏதும் ஆபத்து இருக்காதே?"

"வேறு எதாவது இருக்குமா, இல்லை அப்படி இருக்க வாய்ப்பில்லை நாம் தான் எந்த தப்பும் பண்ணலியே."

"யாராவது கடத்தி சென்று...." நினைக்கவே மனம் மறுக்கிறதே..

என பல்வேறு எண்ணங்களில் வேதனை ததும்ப போரூரை அடைந்து, மருத்துவமனையை தேடிச் சென்றான்.

அங்கு வரவேற்பு பெண்ணிடம் சென்று தனக்கு வந்த அழைப்பை பற்றிச் சொன்னதும்
"நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன், அதோ அந்த இரண்டாவது அறையில் போய்ப் பாருங்கள்"
வேகமாக ஓடிய இவனை ஒரு மாதிரி விநோதமாக பார்த்தாள் அவள்.

அறையை திறந்து பார்த்தால் ரீனா வெள்ளை சுடிதாரில் கால் மேல் கால் போட்டு சோபாவில் அழகாக அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள்.

"ரீனா, என்னாச்சு, உனக்கு ஒண்ணும் இல்லியே, நான் பயந்தே போயிட்டேன்"

"இல்லை பிளட் டொனேட் பண்ணனும்னு தோணிச்சி அதான்.."

"பிளட் டொனேசனா? அவ்வளவு தானா.. நான் என்னமோ ஏதோன்னு பதறி போயிட்டன்,
போன்லயே விஷயத்தை சொல்லி இருக்கலாமே, நான் பயப்படாம இருந்திருப்பேன் இல்ல"

"சொன்னா வருவியோ வரமாட்டியோன்னு டவுட் அதான், ஆனா நான் நல்லா தானே இருக்கேன் ஏன் இப்படி பண்ற, ஆமாம் இங்க வர சொல்லி மெசேஜ் பண்ணி எவ்வளவு நேரமாச்சு நீ இப்ப தான் வர"

"எனக்கு எந்த மெசேஜ்ஜும் வரலியே, நான் உன்ன கூப்பிட்டாலும் உன்னை தொடர்பு கொள்ள முடியாதுன்னு சொல்லிச்சே"

"என்னன்னே தெரியலே மூணு மணி நேரமா இதில நெட்வொர்க் வரவே இல்ல, ஆனா முன்னமே உனக்கு நான் மெசேஜ் அனுப்பினேனே, இங்க பாரு"
என்று தன் மொபைலை காட்டினாள் ரீனா.

மெசேஜ் சென்ட் டு கதிர்

"உடனே கே.எல் ஹொஸ்பிட்டலுக்கு வாடா."
என்று காட்டியது அவள் ஸ்லிம் நோக்கியா செல்போன் திரை.

மெசேஜ் அனுப்பியும் ஏன் வரவில்லை என்று நெட்வொர்க் காரனைக் கேட்டால் அவர்கள் நெட்வொர்க் பிசி சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்று சப்பைக் கட்டு கட்டுவான். இந்த பாழாய்ப்போன நெட்வொர்க்கை நொந்து கொள்வதை விட தேவையான நேரத்தில் தேவையற்ற செய்திகளை மட்டுமே கொடுக்கும் இந்த மொபைல் போனை எல்லாம் பேசாமல் தடை செய்து விட்டால் என்ன (தன் வாழ்வில் இருந்து) என்று கூட அவனுக்கு தோன்றியது.

ஆனால் அருகில் ஒருவன்
"சொல்லு செல்லம்,

என் பப்லூ நீ.."

என்று என்னவெல்லாமோ கொஞ்சிக் கொண்டிருந்ததை பார்த்ததும் ஒரு சில நேரங்களில் அதன் சேவை உதவியாகவும் இருக்கத் தானே செய்கிறது என்று மனதை தேற்றிக் கொண்டாலும் கொஞ்சம் மித மிஞ்சிய சேவையை தராமல் இருக்கலாமே என்றபடியே தன்  காதலி ரீனா உடன் இரத்த தானம் செய்ய பதிந்து காத்திருந்தான் கதிர்.

1 பின்னூட்டங்கள்:

  1. சென்னை பித்தன்6 மே, 2011 4:00 pm

    உபயோகமான அலைபேசியின் உபத்திரவங்களையும் நல்லா எடுத்துச் சொல்லும் கதை!

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...