இன்று ஜெ.,கருணாநிதி,விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல்

on வியாழன், 24 மார்ச், 2011

பகுத்தறிவு,மூட நம்பிக்கை என்றெல்லாம் வாய் கிழிய பேசுகிறார்கள் அப்புறம் என்ன காரணத்திற்காக, எதனை நம்பி எல்லோரும் ஒரே ( நல்ல ) நாளில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

 திருவாரூரில் போட்டியிடும் கருணாநிதி காலை 11 மணிக்கு திருவாரூர் மாவட்ட உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இங்கிருந்து அவர் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்குகிறார..

வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பிறகு அன்று இரவு தஞ்சையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

ஜெயலலிதா தேர்தல் அறிக்கை:

 ஸ்ரீ ரங்கத்தில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில சீர்திருத்த ஆணையர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மாலை ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

 அதிமுக வேட்பாளர்கள் 160 பேரும் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் ஏற்கெனவே உத்தரவு வாங்கி உள்ளனர்.

விஜயகாந்த்:

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதற்காக அவர் வியாழக்கிழமை காலை சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து புறப்படுகிறார். முதலில் திருக்கோவிலூரில் பிரசாரம் செய்கிறார். பின்னர் ரிஷிவந்தியத்தில் பிரசாரத்தைத் தொடர்கிறார்.

முக்கிய தலைவர்கள் வியாழக்கிழமை முதல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குகின்றனர். இதனால் இனி வரும் நாள்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும். வேட்புமனு தாக்கலுக்கு வரும் சனிக்கிழமை கடைசி நாள்.

எனவே அடுத்த இரு நாள்களில் பிரதான கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக