சனி, 26 பிப்ரவரி, 2011

தமிழினில் எழுதுவதில் தான் எத்தனை சுகம், அதுவும் மொத்த பொறியியற் படிப்பும் ஆங்கிலத்தில் வதைக்க தமிழை விட மனமின்றி ஏதாவது எழுதி விடுவது என் வழக்கம்.
அப்படி ஏதோ கிறுக்கியது தான் இது..

என்னால் இயன்றது இவ்வளவு தான்.
-------------------------------------------

பொய் இருவாறு பிறக்கும்
மெய் பொய்க்கும் போது பிறக்கும் ;
பொய் மெய்க்கும் போதும் பிறக்கும்

பொய் மெய்யாவதும் இல்லை
மெய் பொய்யாவதும் இல்லை
மெய்யுள்ள இடத்தினிற் பொய் இருப்பதில்லை
பொய்யுள்ள இடத்தினிற் மெய் இருப்பதில்லை

பொய்யினில் இரு வகை உண்டு
ரசிக்க வைக்கும் பொய்;
நம்ப வைக்கும் பொய்

முன்னது நடிகனை படைக்கிறது
பின்னது அரசியல்வாதியை ஆக்குகிறது
முன்னது நம்மை மகிழ்விக்கும்
பின்னது நம் மகிழ்வை எடுக்கும்.

----

இதற்கு மேலும் என்னால் முடியவில்லை நீங்கள் முயன்று பார்க்கலாமே.



சனி, 5 பிப்ரவரி, 2011


நேற்று வரையிலும் எதிலும்
பற்று அற்று திரிந்த நான்
ஒழுங்காய் சொன்னது செய்யும்
ஒரு நல்ல கணினி..!

எங்கிருந்து என்னுள் வந்தாய்
எப்படி இப்படி பரவினாய்
ஏதும் பிடிபடவில்லை
புரியவும் விடவில்லை

தடுப்பான்களின் தடை தாண்டி
தானாய் என்னுள் புகுந்த
அழகு வைரஸ் நீ..!

உன்னை என்னிலிருந்து
ஒதுக்கவும் முடியவில்லை
அழிக்கவும் மனமில்லை; என்னை
அடிக்கடி அலற விடும்
அன்பு வைரஸ் நீ..!

என் நேரணுகு நினைவகம்
உன்னையே அதிகம்  சுமக்க
இன்ன பிற இயக்கங்கள் யாவும்
மந்தமாகி போனது

என் மனம் என்னும்
நிரந்தர நினைவகத்தின் மொத்த
தகவலையும் மெல்ல அழித்து
உன்னையே  பதிக்கிறாய்

உன்னை பார்த்தால்
பதில் சொல்லும் வைரஸ்
போன்று தெரியவில்லை
ஆனாலும் கேட்காமல் விட
மனம் கேட்கவில்லை

என்னை மெல்ல
ஆட் கொள்ளப் போகிறாயா
இல்லை மொத்தமாய்
ஆளையே கொல்ல போகிறாயா.. !

கிறுக்கம் ---மனோவி 


"விளையாட்டினை பொறுத்தவரை வலிமையே பெரும்பாலான சமயங்களில் வெற்றி பெறுகிறது"
 என்பதற்கு 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் சிறந்த உதாரணம்.
இதுவும் புருடன்சியல் கிண்ணம் என்றே அழைக்கப்பட்டது.  அசுர பலத்துடன் கிரிக்கெட் உலகையே தன் கைகளில் வைத்திருந்த மேற்கிந்திய தீவுகள் தான் தொடந்து கோப்பையை கைப்பற்றியது.

இதில் விளையாட தேர்வான அணிகளில் இம்முறை தென்னாப்பிரிக்கா இடம் பெறவில்லை. அந்நாட்டில் இருந்த இனஒதுக்க கொள்கையால் சிறப்பான ஆடுதிறன் இருந்தும் அவர்கள் விளையாட முடியாமல் போனது.
தென்னாப்பிரிக்க அணி இதிலிருந்து விதிப்பட மிக அதிக நாட்கள் தேவைப்பட்டது. அந்த அணி 1991 ல் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது.

1979 உலக கோப்பை முதல் சுற்றில் பங்கு கொண்ட அணிகளில் கனடாவும் இடம் பிடித்தது. கனடா மட்டும் இல்லையேல் இந்திய அணிக்கு கடைசி இடத்துக்கான போட்டியே இருந்து இருக்காது. அந்த அளவுக்கு இந்திய அணியரின் ஆட்டம் இந்த தொடரில் அமைந்து இருந்தது.

 முதல் சுற்று 

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இருந்த முதல் சுற்று போட்டிகளில்  இருந்த அணிகள்.

குழு ஏ 
  • இங்கிலாந்து, 
  • ஆத்திரேலியா, 
  • பாக்கித்தான், 
  • கனடா  
குழு பி
  • மேற்கிந்தியத் தீவுகள், 
  • இந்தியா, 
  • நியூசிலாந்து, 
  • இலங்கை. 
இதில் இங்கிலாந்து தான் ஆடிய மூன்று  ஆட்டங்களிலும் வெற்றி பெற்றும், மேற்கிந்திய தீவுகள் இரண்டில் வெற்றி பெற்றும் முதல் இடத்தை அந்தந்த குழுவில் பிடித்தன. இலங்கை தன் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்த உலக கோப்பை போட்டிகளில் தான் அதுவும் இந்தியாவிற்கு எதிராக.

கனடா அணி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததே குறைவான ஓட்டம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி 286 ஓட்டங்களை அதிகபட்சமாக பதிவு செய்தது.

அரை இறுதி போட்டி விவரம். 
  •  இங்கிலாந்து  vs நியூசிலாந்து, 
  • மேற்கிந்தியத் தீவுகள் vs பாக்கித்தான்.
இதில் எதிர்பார்ப்புகள் ஏதும் வீணடிக்கப்படாமல்  இங்கிலாந்தும் மேற்கிந்திய தீவும் வெற்றி பெற்றன. ஆனாலும் 9 ஓட்டங்களினால் மட்டுமே நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது வியப்புக்குரிய ஒன்று.

எது எப்படியோ நல்ல கிரிக்கெட் விருந்து கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இறுதி போட்டி 

இரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினர் 9 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றனர். இப்போட்டியிலும் 99 விக்கட்டுக்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்திருந்த மேற்கிந்திய அணியினருக்கு 5ம் விக்கட்டுக்கான இணைப்போட்டமாக விவ் ரிச்சர்ட்சும் கோலிங்கிங்கேயும் இணைந்துபெற்ற 139 ஓட்டங்கள் போட்டிற்கு புத்தூக்கத்தை வழங்கியது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தலைவர் மைக் பெயார்லி, ஜெப் போய்கொட் இருவர் ஆரம்பவிக்கட்டுக்காக 129 ஓட்டங்களைப் பெற்றனர். (இந்த ஓட்டங்கள் 38 ஓவர்களில் பெறப்பட்டன.) மீதான 22 பந்து ஓவர்களில் வெற்றிக்காக 158 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் முன்னிலையில் இங்கிலாந்து வீரர்களால் முகங்கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்தின் இறுதி 8 விக்கட்டுக்களும் 11 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஈற்றில் இங்கிலாந்து அணியினரால் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் ஜோயேல் கார்னர் 38 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.

இப்போட்டியில் 92 ஓட்டங்களினால் மேற்கிந்திய. அணியினர் வெற்றியீட்டினர். அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு உலகக்கிண்ண போட்டியிலும் வெற்றியீட்டிய மேற்கிந்திய அணிக்கு கிளைவ் லொயிட்டே தலைமை தாங்கினார்.

1975/ 1979ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இவரின் தலைமையின் கீழ் மேற்கிந்திய அணி எதிர்கொண்ட அனைத்துப் போட்டிகளுமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

அடுத்த பதிவில் :

  • தோல்வியை ஒத்தி போட முயன்று வெற்றி பெற்ற இந்தியா.
  • தடம் மாறிய கிரிக்கெட். 
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு