எதிர்பார்த்ததைப் போலவே நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் விஜய்யின் தந்தையும் சங்க நிர்வாகியுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
காவலன் படம் தொடர்பாக விஜய்க்கு பெரும் நெருக்கடி வந்த சமயத்தில் அ.தி.மு.க.விடம் தஞ்சமடைந்தார் விஜய். அவரது சார்பில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பலமுறை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இதனால் சட்டசபை தேர்தலில் விஜய்யும் அவரது தந்தையும் அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அது நடக்கவில்லை. மேலும் விஜய் நடத்திவரும் இயக்கத்திற்கும் ஜெயலலிதா சீட் ஏதும் தரவில்லை. இதனால் பிரசாரத்திற்குச் செல்லாமல் வெறும் குரல் மட்டுமே தருவது என விஜய் முடிவு செய்தார். அந்தக் குரலைக் கூட இதுவரை காணவில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அழைப்பையேற்று எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சி விரைந்தார். ஜெயலலிதாவை ஞாயிற்றுக்கிழமை காலை சங்கம் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவிக்கிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவதற்கு நாங்கள் கடுமையாக உழைப்போம். மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் தீவிரமாக உழைப்பார்கள் என்றார்.
நன்றி : OneIndia
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக