புதன், 29 ஜூன், 2011

அட வாயை திறந்து பேசுங்களேன் என்று எதிர்கட்சிகள் மட்டுமல்ல சில ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே கேட்கும் அளவுக்கு தனது பிரதமர் பணியில் மிகவும் 'பிஸி'யாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங் ஒருவழியாக தனது மௌன விரதத்தை இன்று கலைந்தார்.


ஆனாலும் நம்ம ஊர் கமல்ஹாசன் ஸ்டைலில் , தான் பேசியதில் இருந்து எந்த வித தகவல்களும் திரட்ட முடியாதபடி, ஒரு முடிவுக்கு வர முடியாதபடி குழப்பமான பேச்சாகவே அது அமையும் என்பதை நிச்சயம் அவரை தனியாக சந்திக்க வந்த அந்த ஐந்து எடிட்டர்களும் கூட அறிந்திருக்க வாய்ப்ப்பில்லை.

அவரின் பேச்சின் முக்கிய அம்சமே லோக்பால் சட்டத்தின் கீழ் வருவதற்கு நான் தயார் என்று அறிவித்திருப்பது தான். ஆனால் அதிலும் ஒரு கிடுக்குப்பிடி போட்டுத் தான் சொல்லி இருக்கிறார் மனிதர். தான் எதன் கீழ் வேண்டுமானாலும் வருவதற்கு தயார், ஆனால் இறுதி முடிவை அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று சொல்லி தன்  கையில் அதிகாரம் இல்லை என்பதை அவரே நிரூபித்து உள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ஐந்து முக்கிய செய்தி தாள்களின் ஆசிரியர்களுக்கு அவர் பேட்டி அளித்தார், இல்லை பேசிக் குழப்பினார்.

ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா என்பது பற்றிக் கருத்து தெரிவித்த அவர், இளைஞர் ஒருவர் இந்திய பிரதமர் ஆவது மகிழ்ச்சி தான் ஆனால் இது குறித்து எந்த கருத்தும் கூறுவதற்கில்லை.
முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு முடிவு செய்யும் என்று கூறி விட்டார்.
காங்கிரஸ் எப்படி செயல்படும் என்பது நமக்கு தெரியாதா என்ன? உள்ளூர் கட்சி நிர்வாகிகளே மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவின் பேரில் தான் நியமனம் செய்யப்படுகிறார்கள். அப்புறம் இது மட்டும் எப்படி?

ராம்தேவ் தாக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமாக நடந்து விட்டது என்று சொல்லி அதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறி குழப்பி விடுகிறார்.

ஒரு விஷயத்தை மட்டும் குழப்பமின்றி சொல்ல அவருக்கு அறிவுருதப்பட்டிருக்குமோ?
அது
விரைவில் அமைச்சரவை மாற்றம்...
தயாநிதி மாறன் அவுட்??

நமக்கு எதுக்கு வேண்டாத சங்கதி?

ஞாயிறு, 19 ஜூன், 2011


இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வொசிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

ஹேக் உடன்பாட்டின் கீழ் வொசிங்டன் டிசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குடியியல் வழக்குகள் தொடர்பாகவே, சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக நட்டஈடு கோரி சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டம் மீறப்பட்டுள்ளது தொடர்பான சிறிலங்கா அதிபர் மகிந்த மகிந்த ராஜபக்ச மீது ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்செயல்களுக்காக, மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சிறிலங்கா அதிபரிடம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி, இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஹேக் உடன்பாட்டில் அமெரிக்காவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த உடன்பாட்டுக்கு அமைய, மகிந்த ராஜபக்சவுக்கான அழைப்பாணை சிறிலங்கா நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர் ரஜிஹர் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா, ரி.தவராஜா ஆகியோரின் உறவினர்களே இந்த வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மூவரும் நீதிக்குப் புறம்பான வகையில் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதாகவும், சிறிலங்காவின் முப்படைகளினதும் பிரதம தளபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்சவே இவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

ரஜிஹர் மனோகரனின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜாவின் மனைவி கலைச்செல்வி லவன், மற்றும் ரி.தேவராஜா குடும்பத்தினரின் உறவினரான ஜெயகுமார் ஐயாத்துரை ஆகியோர் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

ரஜிஹர் மனோகரன் என்ற மாணவன் திருகோணமலை நகரில் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களில் ஒருவராவார்.

ஆனந்தராஜா 2006 ஜூன் மாதம் மூதூரில் கொல்லப்பட்ட அக்சன் பெய்ம் உதவி நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேரில் ஒருவராவார்.

ரி.தேவராஜா குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இறுதிக்கட்டப் போரின் போது மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்த பதுங்கு குழியொன்றில் வீழ்ந்த எறிகணையினால் கொல்லப்பட்டனர்.

இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் அனுசரணையுடன் இந்த வழக்குகளை அமெரிக்காவின் முன்னாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பெய்ன் தாக்கல் செய்திருந்தார்.

செய்தி : நெருடல்.காம் 

வெள்ளி, 17 ஜூன், 2011

நான் சொல்ல வரும் நபர் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரும் சக்தி என கொஞ்ச நாளைக்கு முன்பு வரை சொல்லிக் கொண்டவர்.
திடீர் திடீர் என்று 'மக்கள்' மீது அன்பு பொங்க ஏதாவது போராட்டங்கள் நடத்துவது இவரின் வாடிக்கை. சில நேரங்களில் அவற்றை தன் கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்குமானால் ஓரளவு நிறைவேற்றி விடுவார்.(பின்னர் அது காணாமல் போவதை எல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாம்)

அப்படித்தான் இந்த முறையும் போராட்டம் நடத்துகிறார்.
அவர் என்னவோ நல்ல விஷயங்களை வலியுறுத்தி தான் போராட்டம் நடத்துகிறார்.(அந்த இடத்தை பார்த்தால் போராட்ட களம் போன்று தெரியவில்லை என்றாலும் தொலைக்காட்சியில் அதனை போராட்டம் என்று தான் அறிவித்து இருக்கிறார்கள் அடியேன் அதை பின்பற்றி தான் இதனை போராட்டம் என்றேன்.) 

தனியார்  பள்ளிகள் தங்கள் இஷ்டத்திற்கு கல்விக் கட்டணம் வசூலிக்கிறார்கள், அதனால் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது 99 ஆண்டுகள் அவற்றை குத்தகைக்கு ஏற்று நடத்த வேண்டும்.
இதெல்லாம் நடக்கிற காரியமா?
அது சரி இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்து விட்டு ஏன் திடீரென இப்படி குதிக்கிறார்..?

என் மண்டைக்கு ஒன்று மட்டும் விளங்கவே மாட்டேன் என்கிறது, பள்ளிகளில் நடக்கும் இந்த கட்டண கொள்ளையை மட்டும் ஆண்டுதோறும் பெயரளவில் எதிர்க்கும் இந்த அரசியல்வாதிகள் ஏன் பொறியியல் கல்லூரிகள் போன்ற மேற்படிப்பு நிலையங்கள் லட்சக் கணக்கில் பணம் பறிப்பதை கணக்கில் கொள்வதே இல்லை என்பது தான் அது.
எப்படி எதிர்ப்பார்கள் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகள் உடையது தானே, அவர்கள் நிர்ணயித்தது தான் கட்டணம் என்று அங்கு மட்டும் பிடுங்கி தின்கிறார்கள். ஆனால் பள்ளிகள் எல்லாம் அவர்களுக்கு பிடிப்பதில்லை ஏனென்றால் அவர்கள் ஆயிரங்களை விட லட்சங்களை பார்த்தே பழகியவர்கள்.

சரி, போராட்டங்களில் கேட்பவற்றை நியாயமாக கேட்க வேண்டாமா?
அரசே ஏற்று பள்ளிகளை நடத்தினால் பள்ளி நிறுவனர்கள் கதி என்ன ஆவது..
அப்படி ஒருவேளை அரசு ஏற்று நடத்தினால் என்ன நடக்கும் பழைய அரசு பள்ளிகளை என்ன செய்வது இழுத்து மூடி விடலாமா?
இரண்டுமே செயல்படட்டும் என்றால் , கல்வித்தரம் இரண்டுக்கும் வேறுபடுமே...

இதற்கெல்லாம் வழி ஏதும் பிறக்காதா என்று எண்ணும் ஏழை தமிழர்களுள் நானும் ஒருவன்
ஏதாவது மாற்றம் என்றால் இவைகள் நடந்தால் நடக்க வாய்ப்புண்டு..

1.அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி எங்கே ஒதுங்குகிறது என்பதை கண்டறிய வேண்டும்

2. முறையாக அந்த பணத்தை பள்ளிகளுக்கு செலவிட வேண்டும்

3. அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் திறமையானவர்களை கொண்டு (லஞ்சம் பெற்றுக் கொண்டு அல்ல )நிரப்பப்பட வேண்டும்

4. அனுபவம் அடிப்படையில் அல்லாமல் திறமையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

5. பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.

6. நிறைய பள்ளிகளை தொடங்கினேன் என்றில்லாமல் கொஞ்சமாய் சிறந்த பள்ளிகளை உருவாக்கிட முனைய வேண்டும்.

7. தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடக் காரணமே ஆங்கிலம் தான், அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆங்கில பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டு Spoken ENglish வகுப்புகள் சேர்க்கப்பட வேண்டும்.

8. அரசு பள்ளி இடங்களை ஆக்கிரமித்து உள்ளோரை அகற்றி விளையாட்டு திடல்களை
அமைக்க வேண்டும்.

9. திருத்தப்பட்ட சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்.

10. எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனம் மாற வேண்டும் அரசு பள்ளிகள் என்றால் தரம் இல்லாதவை என்ற எண்ணம் மறைய வேண்டும்.
தனியார் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் திறமையானவர்கள், அனுபவம் மிக்கவர்கள் ஆனால் நாம் தான் அவர்களை பயன் படுத்த தவறுகிறோம்.

எங்கே இதெல்லாம் நடக்க வேண்டு என்று ஏன் மனம் விழைந்தாலும்,
நான் என் செய்வேன்?

தலைப்பு விளக்கம் வேண்டாமென கருதுகிறேன்,
புரியாதவர்கள் மறுமொழி இடவும்..!! 

வியாழன், 16 ஜூன், 2011

ஆம்..
நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் இருக்குமேயானால்,
வேண்டாம் விட்டு விடுங்கள் என்பது தான் சிறந்த பதிலாக இருக்கக் கூடும்.


பிறகு,
உண்ணாவிரதம் என்றால் என்ன?
என்ற கேள்விக்கு தினமும் யாராவது செயல் விளக்கம் கொடுக்க முற்படுகிறார்கள்.
சிலர் கொடுத்த விளக்கம் புரியவில்லையா என்பதாய் அரசை சாடி விட்டு மீண்டும் விளக்கியே தீருவேன் என்று அடம பிடிக்கின்றனர்.

ஆமாம்,
கடந்த சில வாரங்களாக நடந்த இந்த அறப்போரால் நாட்டுக்கு நடந்த நன்மை தான் என்ன?
உண்மையாகவே ஊழலுக்கு எதிராக ஏதேனும் நடந்து விட்டதா?
கருப்பு பணத்தின் ஒரு சிறு பகுதியாவது திரும்ப பெறப பட்டதா?
சரி அதை விடுங்கள்.. யார் அந்த கருப்பு ஆடுகள் என்னும் விவரமாவது தெரிந்ததா?
என்னமோ ஷங்கர் பட ரேஞ்சுக்கு கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தால் நிறைவேறி விடுமா?
முதலில் அவரவர் எந்த அளவுக்கு நல்லவர் என்பதை நினைந்து பிறகு மற்றவரை குறை காண முற்படுங்கள்..

கருப்பு பணத்தை கொணரச் சொல்லும் தீரருக்கே ஆயிரக்கணக்கான கோடிகள் இருக்கிறதாம்..
நம்மை கண்டால் எப்படி தெரிகிறது இவர்களுக்கு?
எதை செய்தாலும் நம்பி விடுவார்கள் என்று முடிவு கட்டி விட்டார்களோ?
நடப்பவை எல்லாம்  பார்த்தால்...
நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் அழுகிறேன்..
என்னும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது,
ஏதோ அரசே இவர்களை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி பிறகு கலைப்பதாகவும் தோன்றுகிறது. ஆனால் உடல் நிலை மோசமாகும் வரையில் தொடர்கையில் நம்பலாம் என்ற உணர்வு மற்ற மாநிலத்தவருக்கு வேண்டுமானால் வரலாம்..
நாம் எத்தனை உண்ணாவிரதங்களை இது போன்று முன்னரே பார்த்திருக்கிறோம் அதனால் எளிதில் நம்ப முடியவில்லை..

ஆனாலும் நம்மால் எல்லாம் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தாலே உடல் நம்மை "சாப்பிட்டு தொலையேண்டா"என்று திட்டி தீர்க்கும்.
இவர்களை உடல் திட்டாதோ?
(அடேய் முட்டாள் அவர்கள் பெரிய மனிதர்கள் அவர்களுக்கு பசிக்காதுடா என்று யாரோ சொல்வது போலிருக்கிறது) 

சரி சொல்ல வந்ததை விட்டு விட்டேனே,
அந்த நல்லவர் விஷயம்...
எங்கே உங்களை பார்த்து நீங்களே கேளுங்கள்
"நான் நல்லவனா?"
இதற்கு என் பதில் நீங்கள் கூறும் அதே பதில் தான்
"நிச்சயமா இல்லை"

நாம் ஒவ்வொருவரும் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்,பெறும் பணக்காரர்கள் மோசடி செய்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் திருந்த மாட்டேன் என்கிறோம் பிறகு எப்பிடி அவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

இறுதியாக என் செய்வேன்? என்று இந்த கட்டுரையை வழக்கம் போல முடிக்காமல் முதல் முறையாக வேறு விதமாக முடிக்கலாம் என்று இருக்கிறேன்..

நீ விரும்பும் மாற்றங்கள் யாவும் உன்னிலிருந்தே தொடங்கட்டும்...

இதை முன்னரே யாரேனும் சொல்லி இருந்தால் யாரென மறுமொழி இடவும் 

புதன், 8 ஜூன், 2011

கொஞ்ச நாட்கள் முன்பு வரை நாளொன்றுக்கு இரண்டு பதிவுகள் வரை எழுதிய நான் ஏன் இப்படி ஒரு வாரம் ஆகியும் ஒரு பதிவு கூட எழுதவில்லை என்று யாரேனும் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன், ஒருவரும் கேட்கவில்லையே..
இதிலிருந்து எனக்கு புலப்படுவது என்னவென்றால் பதிவு எழுதுகிறேன் என்ற பெயரில் பெரிய அளவில் மொக்கை போட்டு இருக்கிறேன் என்பது தான்.
அதனால் இனிமேல் நான் பதிவு எழுதக் கூடாது என்று முடிவு எடுக்கலாம் என்று இருக்கிறேன்..

என்றெல்லாம் நான் கூறினால் மட்டும் நீங்கள் என்ன மனம் வருந்தி,
"வேண்டாம், உன் பதிவுகளை தொடரு நிச்சயம் ஒரு நாள் நல்ல பதிவுகள் உன்னிடமிருந்து பிறக்கும்"
என்று கூறப் போகிறீர்களா என்ன..

அய்யோ..
ரொம்ப பேசாதடா..
என்று யாரோ ஏன் பின்மண்டையில் அடிப்பது போல இருக்கிறது.

அதனால், பதிவுலகம் பக்கம் எட்டி பார்க்காததற்கு உண்மைக் காரணம் என்ன என்று சொல்லி விட்டு இந்த பதிவை முடித்து விட்டால் என்னுடைய அடுத்த மொக்கையும் பதிவேற்றம் அடையும்.

நமக்கு பொறியியல் படிப்பு வாழ்க்கை(Engineering Career) முடிந்து போயிற்று..
அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் அடியேனும் ஒருவன்..
வேலையும் கிடைத்த பாடில்லை..
TANCET போன்ற தேர்வுகள் எழுதி நாட்களை கடத்தினேன்..
இந்த நிலைமையில் பதிவு இட மனம் ஒத்துழைப்பதே கிடையாது..

இனிமேல் மீண்டும் என்னத்தையாவது பதிவேற்றம் செய்யும் கிறுக்கதனத்தை தொடர மாட்டேன் என  உறுதிபட பொய்யுரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

Doubt:
 ஆமாம் இந்த Google தாத்தாவிற்கு என்ன ஆச்சு,
இப்போதெல்லாம் நான் தேடுவது தொடர்பான விளம்பரங்களே (Consultancy Results While searching for a job) பெரும்பாலும் தேடுபொறி எந்திரத்தின் தரவரிசையில் (Search Engine rank) முதல் சில இடங்களை பிடித்து கடுப்பேற்றுகிறது.


வியாழன், 2 ஜூன், 2011



அடுக்கு மாடி கொண்ட
கட்டிடங்கள்
ஆயிரமாம்..

மெத்த படித்தவர்
தான்
மொத்த பேர்களுமாம்..

வந்தோர் எல்லார்
வாழ்வும்
வளம் பெறுமாம்..

கடைகளை எல்லாம்
பணப் பகடைகளாய்
மாற்றும் ஏமாற்றிகளாம்

எங்கும் எதுவும்
அதுவும்
எளிதென கிட்டுமாம்..

விடை இல்லா
வினாக்களும்
விளக்கம் பெறுமாம்..

அலை கடல் மட்டுமல்ல
அது போலவே
மக்களும் இங்குண்டாம்..

அரசு எந்திரமும்
இங்கேயாம்..
அதைக் கொடுக்கும்
கனவு தொழிற்சாலையும்
இங்கேயாம்...

என்ன இருந்தென்ன?
ஒரு மணி நேர மழையில்
மொத்தமாய் அத்தனையும்
கொத்தென
காணாமற் போயிட்டதே?

இது தான்
சென்னையா?



புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு