கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?
* * * * *
மாமனிதனின்
பிதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;
அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!
* * * * *
தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!
* * * * *
சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!
* * * * *
இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!
* * * * *
அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!
* * * * *
இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!
நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக