சனி, 16 ஏப்ரல், 2011

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றிப் பாதைக்கு திரும்பியது..!

| | Leave a Comment
மட்டை வீச்சு, பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக வெளிப்பட்ட சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது.பெங்களூர் ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் வகையில் விளையாடினாலும் பின்னர் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் தோல்வி அடைந்தது.


8 ஓவர்கள் வீசி 46 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த ரன்தீவ், அஸ்வின் ஆகியோரின் அபார பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்றது.

சென்னை சேப்பாகம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 183 ரன்கள் எடுத்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடினமாக இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி, திலகரத்னே தில்சானை முதல் பந்திலும், அதன் பிறகு அதிரடியாக ஆடி 14 ரன்களை 5ந்தே பந்துகளில் குவித்த யூசுஃப் பத்தானை 2வது ஓவரிலும் இழந்தது. நின்றாடி ரன்களை எடுக்க முயன்ற அகர்வால் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே அதன் வெற்றிக் கனவு சரிந்தது.

ஆனால் விராத் கோலியும், டி வில்லியர்ஸும் மிக அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தனர். 5 ஓவர்களில் இவர்கள் இருவரும் 52 ரன்களைக் குவித்தனர். 28 பந்துகளில் 4 பெளண்டரிகளுடனும், ஒரு சிக்கசருடனும் 35 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆட்டமிழந்தார்.

ஒரு முனையில் டி வில்லியர்ஸ் ரன்களைக் குவிக்க மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. 19வது ஓவரில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்க தோல்வி உறுதியானது. டி வில்லியர்ஸ் 44 பந்துகளை ஆடி 5 பெளண்டரிகளுடனும், 2 சிக்சர்களுடனும் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழிந்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் அணி எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக