சனி, 16 ஏப்ரல், 2011

வெற்று வரலாற்று கற்பனைகள்...! (1)

| | Leave a Comment
வரலாறு புராணம் இரண்டுமே நடந்து முடிந்து விட்ட சம்பவங்களின் தொகுப்பு தான். ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியது. புராணம் ஆதாரங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல் கடவுள் நம்பிக்கை, மன்னர்களை போற்றுவது என்றே பெரும்பாலும் இருக்கும்.

ஆனால் வரலாறு என்பது முழுக்க முழுக்க ஆதாரங்கள் தொடர்புடையது. சிறிதளவேனும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் வரலாற்றில் இடம் பிடிக்க முடியாது. ராஜராஜ சோழன் தஞ்சாவூர் திருக்கோயிலை கட்டியது வரலாறு, அதுவே அவன் கனவில் வந்து சிவபெருமான் கட்ட சொன்னது புராணம். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு,முன்னதற்கு ஆதாரமாக அந்த கோயில் இன்றும் கம்பீரத்துடன் நிற்கிறது. பின்னதற்கு பெரிதாக ஏதும் ஆதாரங்கள் இல்லை.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் உங்கள் தெருவிலுள்ள கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற வேண்டும் என நீங்கள் பிரார்த்தித்து அது நடந்தும் விடுகிறது எனில், இந்தியா வெற்றி பெற்றது வரலாறு,அதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கும். ஆனால் உங்கள் பிரார்த்தனை கடவுள் எல்லாமே வெறும் புராணத்துடன் நின்று கொண்டாக வேண்டியது தான்.

சரி, அப்படியானால் வரலாற்றில் சொல்லப்பட்டன எல்லாமே உண்மையா என்று பார்த்தால்,நீங்கள் எந்த அளவிற்கு வரலாற்றை அணுகி உள்ளீர்கள் என்பதை பொறுத்து தான் அந்த வரலாறு எந்த அளவிற்கு உண்மை என்பதை சொல்ல முடியும். என் போன்ற சிறுபிள்ளைத்தனமானவர்கள் யாரேனும் அவர்கள் விருப்பத்திற்கு என்னத்தையாவது எழுதி வைத்ததை எல்லாம் படித்து அது வரலாறு என்று நாம் நினைத்து கொண்டிருந்தால் அதற்கு வரலாறால் அதுவும் செய்ய முடியாது. வரலாறு என்றைக்கும் உண்மை தான் நாம் தான் அதனை வெவ்வேறு விதமாக அணுகுகிறோம்.

நடப்பது என்னவோ ஒரே தேர்தல் தான்,ஒரே நிகழ்வுகள் தான் ஆனால் பச்சை தொலைக்காட்சியில் ஒரு மாதிரியும் மஞ்சள் தொலைக்காட்சியில் ஒரு மாதிரியும் அவர்கள் விருப்பத்திற்கு இணங்க மாற்றிக் கொள்(ல்)கிறார்களே, அதெல்லாம் வரலாற்றில் இடம் பெற்றால் எப்படி உண்மையாக இருக்க முடியும்?

நாலே வரியில் தொடங்கலாம் என நினைத்து இவ்வளவு நீளமாக இழுத்து விட்டது வருத்தம் தான், சரி அந்த வெற்று வரலாற்று கற்பனைகள் என்று தலைப்பிட்டிருந்தேனே அது வேறொன்றுமில்லை நாம் பல ஆண்டுகளாக,தலைமுறைகளாக ஏன் நூற்றாண்டுகளாக கூட சில விஷயங்களை தப்பான கோணத்திலேயே பார்த்து கொண்டிருக்கிறோம். அவற்றுள் எனக்கு தெரிந்த சிலவற்றை பதிந்துள்ளேன். உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டப்படுத்துங்கள்.

20.ஏவாள் கெட்ட ஆப்பிளை சாப்பிட்டாள்.

 'தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவனுக்கு வேலை இல்லை' என்பார்கள். ஆனால் ஏவாள் சாப்பிட்ட அந்த மறைத்து வைக்கப்பட்ட சாப்பிடக்கூடாத ஆப்பிளால் தான் இன்றைக்கும் நாம் துன்பங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கிறோம் என்று பெரும்பாலோனோர் நினைக்கின்றனர். பைபிளை பார்த்தீர்கள் என்றால் அப்படி எந்த ஒரு இடத்திலும் சொல்லப்பட்டிருப்பதாக தெரியவில்லை "தோட்டத்தின் நடுவே இருந்த அந்த மரத்தின் பழம்"(Genesis 3:3) என்று தான் இருக்கிறது. ஏன் அது மாம்பழமாகவோ,இலந்தைப் பழமாகவோ கூட இருந்திருக்கலாம் இல்லையா?
  
19.நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்தது.

அடுத்ததும் ஆப்பிள் பற்றி தான், நாம் சிறு வயதில் படித்திருப்போம். மரத்தில் இருந்து நியூட்டன தலையில் ஆப்பிள் விழ அதனாலேயே அவர் புவி ஈர்ப்பு விசையை பற்றி கண்டு பிடித்தார் என்று. ஆனால் ஐசக் நியூட்டன் தான் சாகும் வரை அப்படி யாரிடமும் கூறவில்லை. வால்டர் என்பவர் ஒரு கட்டுரையில் விளையாட்டாக அப்படி எழுத நன்றாக இருக்கிறதே என்று எல்லோரும் மறுபிரசுரித்து அதை உண்மையாகவே மாற்றி விட்டனர்.

18.வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸை வரைந்தார்.

உலகின் மிகப் பிரபலமான கற்பனைக் கதாபாத்திரங்களில்  எப்போதும் மிக்கி மௌசிற்கு தனி இடம் உண்டு. ஆனால், மிக்கி மௌசிற்கு வடிவம் கொடுத்தது வால்ட் டிஸ்னி என்று நீங்கள் நினைத்திருந்தால் கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள், மிக்கி மௌசின் ஒலி (குரல்) தான் அவருடையது. ஒளி(வடிவம்) அவரது நண்பர் உப் இவேர்க்ஸ் உடையது. தனி ஆளாக வரைந்து முதல் படத்தை வெளியிட உதவினாரம் அவர், நாளொன்றுக்கு 700 சித்திரங்கள் வரைவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல இந்த கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் எல்லாம் வருவதற்கு முந்தைய அந்தக் காலத்தில்.

17.மேரி ஆண்ட்வாநெட் (பிரெஞ்சு மகாராணி) இனிப்பு ரொட்டிகளை சாப்பிடச் சொன்னாள்.

1776 இல் ஜாக்ஸ் ரவுசே என்பவர், தனது 25 ஆண்டுக்கு முந்தைய நிகழ்வு ஒன்றை எழுதும் போது "ஒரு பெரிய மகாராணி" மக்களுக்கு ரொட்டி துண்டுகள் கூட சாப்பிட கிடைப்பதில்லை என்ற போது "அப்படி என்றால் இனிப்பு ரொட்டிகளை(Cakes) கொடுங்கள்" என்று சொன்னாளாம். ஆனால் அப்போது  மேரி ஆண்ட்வாநெட் 11 வயது மட்டுமே உடையவள். பின்னாளில் பிரெஞ்சு புரட்சிக்காரர்கள் புரட்சியின் வேகத்தை அதிகரிக்க மக்கள் நலனில்,துயரத்தில் அக்கறை இல்லாமல் ராணியார் தான் இவ்வாறு  கூறியதாக கிளப்பி விட்டு விட்டார்கள்.


16."தி கிரேட் ட்ரெயின் ராப்பரி" தான் முதல் முழு நீளத் திரைப்படம்

பல ஹாலிவுட் ரசிகர்களும்  1903 இல வெளியான "தி கிரேட் ட்ரெயின் ராப்பரி" தான் முதல் முழு நீளத் திரைப்படம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். சினிமாவில் க்ளோஸ்-அப் காட்சிகள்,ஒழுங்கான கதை என பல விதத்திலும் இத்திரைப்படம் ஒரு மைல் கல் என்றாலும் முதல் முழு நீள திரைப்படம் , இப்படம் வந்து சில ஆண்டுகளுக்கு பிறகு வெளியான "தி ஸ்டோரி ஆப் தி கெல்லி கேங்" என்ற ஆஸ்திரேலிய திரைப்படம் தான்

அடுத்த பதிவில் : நெப்போலியன்,ஷேக்ஸ்பியர்,நீரோ மன்னன்..,

பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்.. 
  

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக