புதன், 27 ஏப்ரல், 2011

நிழலில்லா நிஜங்கள்..!

| | 6 comments
என் முதல் சிறுகதையை வெகுசிலரே படித்து அதிலும் மிக சிலரே "பரவாயில்லை" என்று சொல்லி இருந்தனர். இருந்தாலும் தொடர்ந்து எழுதினால் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு பிடிக்கிற மாதிரி எழுத தெரிந்து கொள்ள மாட்டோமா என்ற நப்பாசையில் தான் இந்த சிறுகதை..
                                             -----------------------------------

"ம்ம்.. அதுக்குள்ளே என்னம்மா?
இப்பதானே மணி 8 ஆகுது, இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே ம்மா"
தட்டி எழுப்பிய அம்மாவை கெஞ்சினான் கார்த்திக். இளம் வயது, ரெண்டு நாள் தாடி, கர்லிங் முடி, மாநிறம் என 2011 ன் தமிழ் மகன் அவன்.

அம்மா தொடர்ந்து அவனை எழுப்ப முயற்சித்து கொண்டே சொன்னாள்.
"அந்த ஆளு ஏற்கனவே ரெண்டு தடவை போன் பண்ணிட்டாரு டா..
சீக்கிரம் எழுந்து கெளம்புடா"

"யாரு அந்த வழுக்கை தலையனா?"

"டேய்.. எத்தன தடவ சொல்லி இருக்கன்..
பெரியவங்கள அப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு"

"அடப் போம்மா.. அவருக்கு வேற ஆளே கிடைக்க மாட்டாங்களா..
எதுக்கு எடுத்தாலும் என்னையவே கூப்பிட்டு உசிர எடுக்கிறார் மா"

"என்னவாச்சும் முக்கியமான சோலியா இருக்கும்டா. அதான் காலையிலேயே கூப்பிடுறார்"

"சரி.. நீ போய் காபி போடும்மா நான் வந்துர்றேன்"

மணி 8.20 ஐ கடந்து கொண்டிருந்தது.

"டேய்.. கார்த்திக் காபி போட்டு கால் மணிக்கு மேல ஆவுது டா. எந்திரிச்சு வாடா"

கார்த்திக் அந்த கடைசி நிமிடத்து தூக்கத்தை விட முடியாமல் எழுந்து சென்று பல் கூட துலக்காமல் காபி குடித்தான்.அதை பார்த்த அம்மா வழக்கமான சொற்களை உதிர்க்க தொடங்கினாள்.

"ஏண்டா ஏழு கழுதை வயசு ஆகுது. பல்ல கூட வெளக்கமா காபி குடிக்கிறியே டா. இப்படியே இருந்தா நாளைக்கு வரப்போரவ என்னை , 'ஏன் இப்படி உம்புள்ளைய லட்சணமா வளர்த்து வெச்சிருக்கே'ன்னு கேட்டா நான் என்னத்த சொல்ல.."
அவள் தொடர்ந்து கொண்டே இருக்கே எதையுமே காதில் வாங்காமல் கார்த்திக் குளிக்க சென்று விட்டான்.

குளித்து விட்டு வந்த அவன், தன் கைப்பேசியில் ஏழு முறை தவறிய அழைப்புகள் இருந்தததை பார்த்து எடுத்தான்.

"யார் இது?
புது நம்பரா இருக்கு.."

அந்த எண்ணுக்கு அழைத்தான்.

"ஹலோ.."

"கார்த்திக்.. நான் சண்முகதாசன் பேசறேன் பா"

கார்த்திக் மனதிற்குள்,
"அய்யய்யோ.. இந்த ஆளா, இவன் ஏன் அவன் நம்பர்ல இருந்து கூப்பிடமா.. "

"ஏம்பா.. என் நம்பர் னா தான் எடுக்க மாட்டேங்கிற புது நம்பர்ல இருந்து பண்ணாலும் எடுக்கமாட்டீங்கிறியே.."

"இல்லை சார். ஆபிஸ் கெளம்பி வந்துட்டு இருக்கன், அதான் போன கவனிக்கல,
சொல்லுங்க சார், எதாவது முக்கியமான விஷயமா?"

"ரொம்ப முக்கியமான விஷயம் எல்லாம் ஒண்ணுமில்ல,
நீ இன்னிக்கு ஆபிஸ்க்கு வர வேண்டாம்"

"சார்....  ரொம்ப தேங்க்ஸ் சார்.."

"அவசரப்படாதப்பா.. உனக்கு இன்னிக்கு வேற வேலை இருக்கு"

"என்ன சார்?"

"நம்ம கயல்விழி அண்ணனுக்கு இன்னிக்கு கல்யாணம் இல்லையா"

"அங்க போயிட்டு வரணுமா சார்?"

"சொல்றத முழுசா கேளுய்யா"

"சொல்லுங்க சார்"

"அதனால, அவ இன்னிக்கு வரல, சோ... அவ போய் பேட்டி எடுக்க வேண்டிய ஒருத்தர நீ போய் பேட்டி எடுக்கணும்"

"சார் இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது சார்..
எனக்கு இந்த கம்ப்யூட்டர் சமாச்சாரம் மட்டுந்தான் தெரியும்னு உங்களுக்கே தெரியும்"

"கார்த்திக்.. பத்திரிக்கையில வேலை செய்யறவன் இப்படி எல்லாம் சொல்லக் கூடாது,
நீ கண்டிப்பா இத செஞ்சி தான் ஆகணும். இந்த வார எடிஷன்ல அவர் பேட்டி வருது,
என்ன சரியா?"

"என்ன பண்றது.. சரின்னு சொல்லலைன்னா விட்ருவீங்களா என்ன?"

"அவர் யாரு என்ன விவரங்கிறத மெயில் பண்ணி இருக்கன்.. பாத்து போய்ட்டு வா"

"சரிங்க சார்.."
என்று ஒப்புக்கு சொல்லி விட்டு மனதிற்குள் அவரை கரித்துக் கொட்டத் தொடங்கினான்.
"அம்மா சாப்பாடு எடுத்து வைம்மா"
என்று சொல்லி விட்டு மடிக்கணினியில் தலையை விட்டு,
மின்னஞ்சலில் இருந்து அவன் எடிட்டர் அனுப்பியதை பார்த்து நொந்து போய் விட்டான், கார்த்திக்.

இருக்காதா பின்னே?
அவன் எதை மிக வெறுக்கின்றானோ அதைப் பற்றிய ஒருவரிடம் கேள்விகள் கேட்க வேண்டுமானால், அவன் என்ன செய்வான்.
ஒரு ஆன்மீகவாதியை கண்டு கேட்டு வரச் சொல்லி மின்னஞ்சல் வந்திருந்தது.

அது ஏனோ தெரியவில்லை, சிறு வயதில் இருந்தே கார்த்திக்கிற்கு கடவுளை பிடிக்கவில்லை.
தனது பெயர் முருகப் பெருமானை குறிப்பதை அறிந்து அதை மாற்றிக் கொள்ளவும் சில காலம் சிந்தித்தான். ஆனால் அவன் பெற்றோர் இட்ட பெயர் ஆதலின் அந்த எண்ணத்தைக் கைவிடல் ஆனான்.

"டேய்.. எந்த நேரம் பாத்தாலும் கம்ப்யூட்டர் தானா,
குளிச்சதும் நாங்க சாமிய கும்பிட்டா,
இவன் கம்ப்யூட்டர கும்பிட ஆரம்பிச்சிர்ரான்..
சீக்கிரம் வந்து சாப்புட்டுட்டு விடறா, எனக்கு நெறைய வேல கெடக்கு"

"இதோ வந்துட்டன்மா" என்றவாறு தனது மடிக்கணினியில் இருந்து அந்த ஆன்மீகவாதியின் முகவரியை குறித்துக் கொண்டு சாப்பிட வந்தான்.

உணவை முடித்து, பெரும் யோசனையுடனே வீட்டை விட்டு கிளம்பினான்.
தன் மனதில் நீண்ட நாட்களாக கடவுள் குறித்தும், அவர் பெயரால் நடக்கும் கூத்துகள் குறித்தும் இன்று கேட்டு விடுவது என்று முடிவெடுத்தான்.

தன் மோட்டார் வண்டியை ஸ்டார்ட்  செய்து பயணிக்க தொடங்கிய அவனுள் எண்ணங்கள் படரத் தொடங்கியது.

அந்த சாமியாரைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்விகளை அவன் மனம் தாயார் செய்தது.
அமரர் சுஜாதாவின் அந்த கேள்வியையே முதலாவது கேள்வியாக வைப்பதென முடிவெடுத்தான்.

"கடவுள் இருக்கின்றாரா?"

இதனை தொடர்ந்து அடுக்கடுக்காய் அவன் மனம் கேள்விகளை தயாரித்தது.

"கடவுள் இருக்கிறார் எனில் அவர் ஏன் எல்லா மனிதர்களையும் தன் பக்கம் இழுக்கவில்லை
என்னைப் போன்ற கடவுள் நம்பிக்கை அற்றவர்களை ஏன் படைக்க வேண்டும்"

"ஏன் ஒரே மதத்தை படைக்காமல், இப்படி வன்முறைகளை வளர்க்கும்படி மதங்களை வளர்த்து விட வேண்டும்?"

"பிரார்த்தனைகள் மூலம் எதையும் சாதிக்கலாம் என்றால், ஏன் 100 கோடி பேர் வேண்டியும் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைகிறது? மகான்கள் இறந்து போகிறார்கள்"

"சின்னஞ்சிறு குழந்தைகளை துன்புறுத்தும் பலரையும் காண்கிறோமே, அவர்களின் அந்த நிலைமைக்கு காரணம் யார், கடவுளா?"

"எல்லோரும் ஒரே கடவுளைத் தானே வணங்குகிறார்கள்,
ஏன் சிலரை வளம் பெற்றவராகவும்,சிலரை ஏழைகளாகவும்,
சிலரை நலம் உடையவராகவும், சிலரை நோயுற்றவராகவும் படைக்கிறான்?"

''தெய்வம் நின்று கொல்லும் என்கிறீர்களே,
இப்போதெல்லாம் தவறிழைத்தால் தவறியும் அவர்கள் தண்டனைக்கு உட்படுவதில்லையே ஏன்?"

"எல்லாமே அவரவர் கர்ம விதிப்படி தான் நடக்கும் என்றால், கடவுள் என்ற பாத்திரம் எதற்கு?"

"அறிவியலின் படி உலகம் தோன்றியது வரை ஆதாரம் இருக்கையில், மொத்தமாக இறைவன் தான் உலகை சிருஷ்டித்தார் என்று இன்னும் எத்தனை காலம் ஏமாற்றப் போகிறீர்கள்"

"சாமியே கிடையாது என்று நினைக்கையில் உங்களுக்குள்ளேயே பல போலி சாமியார்கள் இருக்கின்றனர், கடவுளே தான் இவர்களை வளர்க்கிறாரா?"

இன்னும் அடுக்கடுக்காய் அவன் மனம் கேள்விகளை தயார் செய்து வைத்து இருந்தது. மெல்ல அவன் வர வேண்டிய இடம் வந்து விட்டிருந்தது.
பைக்கை விட்டு கீழிறங்கி நடக்கலானான், என்னதான் கடவுளை இல்லை என்று சொன்னாலும், கோயில்களிலும் இது போன்ற ஆசிரமங்களிலும் கிடைக்கும் அமைதி நிச்சயம் மனிதனின் மனதை பாதிக்கக் கூடியது தான்.

'பக்த பீடம்' என்னும் வார்த்தைகளோடு, அவனை வரவேற்றது ஆசிரமம்.
தனக்கு முன்னர் இன்னும் சிலர் அவரை பேட்டி காண வந்து காத்து கிடப்பது அறிந்து, மீண்டும் ஒரு முறை எடிட்டரை நொந்து விட்டு அவர்களோடு சேர்ந்து இவனும் வரிசையில் காக்க தொடங்கினான்.

அவன் பக்கத்தில் இருந்தவரிடம் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?" என்று கேட்டான். பதிலே வரவில்லை, ஏதோ சைகையால் சொன்னார், இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அரை மணித்துளிகளுக்கு பின்னர் இவனுக்கு அழைப்பு வந்தது.

போய் பார்த்து ஒரு சம்பிரதாயமாக கையெடுத்து வணங்கி விட்டு
"எப்படி இருக்கிறீர்கள், சுவாமி"  என்று இவன் ஆரம்பிக்க, சாமியாரின் பக்கத்தில் இருந்தவர். ஏதோ சொல்ல முயல, அதற்குள் இவன் அடுத்து பேசத் தொடங்கினான்.

ஆனால், சில நொடிகளிலேயே அவனுக்கு இருந்த எல்லா வினாக்களுக்கும் விடை தெரிந்து விட்டது.
அந்த வினாக்கள் அனைத்துக்கும் ஒரு மெல்லிய புன்னகை தான் பதில்.
ஆம், சாமியார் வாய் பேச முடியாதவர்.அதனால் தான் அவரை சுற்றி உள்ளோரும் பெரும்பாலும் அவ்வாறே நடக்க விழைகின்றனர்.

இறுதியில் சைகையால் என்ன என்ன கேட்க முடியுமோ அவற்றை கேட்டு முடித்து விட்டு, வெளியில் வந்த கார்த்திக்கின் கைபேசி அழைத்தது,சண்முகநாதன் பேசினார்.

"ஹலோ.. சாரிப்பா ஒரு விஷயத்தை மெயில்ல சொல்ல மறந்துட்டன், அவர் வாய் பேச முடியாதவர் பா..."

இவனாகவே இணைப்பை துண்டித்ததும், கார்த்திக் மனம் புதிதாய் ஏதோ அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தது. இங்கு வரும் முன் கடவுள் விஷயத்தில் தெளிவாக"இல்லை" என்னும் முடிவோடு இருந்த அவன், இப்போது "இருக்கிறாரோ?" என்னும் நிலைக்கு அவனது விட்டான்.

"கடவுளே இல்லை என்னும் நான் ஏன் இவரை பேட்டி காண வேண்டும்?"

"ஏன் ஏன் வினாக்கள் அனைத்துக்குமே அந்த சிரிப்பு தான் பதிலாக வந்தது?"

எனுமாறு, இவன் நடந்தவற்றை சிந்திக்க தொடங்கினான்.அடுத்த சில வாரங்களில், கம்ப்யூட்டரோடு சேர்த்து கடவுளையும் நம்ப ஆரம்பித்தான்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவன் வைத்திருந்த கேள்விகளுக்கு வாய் பேச முடிந்த சாமியாராக இருந்திருந்தாலும் பதில் இதுவாக தான் இருக்க முடியும். "மௌனம்"

---

பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..

6 கருத்துகள்:

  1. Ramani27 ஏப்ரல், 2011 10:41 முற்பகல்

    நல்ல முயற்சி
    கேள்விகளும் சிறப்பான கேள்விகளே
    முடிவு இன்னும் விளக்கமாக இருந்திருக்களாமோ?
    (மௌனம் அவ்னுள் எழுப்பிய கேள்விகளும்
    அதற்குஅவனுள் சுயம்புவாகத் தோன்றிய பதில்களும்
    அவனுள் எதையோ விதைத்துப் போயிருக்கக் கூடும்)
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆதவா27 ஏப்ரல், 2011 11:28 முற்பகல்

    உங்கள் கதையைப் படித்தேன்.... முதலில் படிப்பதற்குத் தடையாக இருப்பதே உங்களது தளத்தின் பக்கம் தான்... மிகச்சிறிய அளவில் இருப்பதால் பத்திகள் அதிகம் பிரிவதாகக் காட்சியளிக்கிறது. கதை நன்றாக இருக்கிறது. இன்னும் முயற்சி செய்யலாம். சிலசமயம் விடையறியாத கேள்விகள் எப்பொழுதும் வேண்டும் என்று மனம் விரும்புகிறது.. கடவுளைப் பற்றிய வினாக்களில் அது அதிகமாகவே இருக்கிறது!! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  3. மனோவி27 ஏப்ரல், 2011 11:55 முற்பகல்

    மௌனம் என முடிக்க காரணம், ஒருவேளை கடவுள் பற்றி அவன் திடீரென நம்பி விட்ட படி அமைந்து விடக் கூடாது என்பது தான்.

    கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  4. மனோவி27 ஏப்ரல், 2011 11:57 முற்பகல்

    தள அமைப்பை நிச்சயம் மாற்ற வேண்டும்..
    ஆனால் இன்னும் கொஞ்ச நாளைக்கு தேர்வுகள் இருப்பதால் பின்னர் மாற்றிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்..

    தொடர்ந்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.. ஆதவா

    பதிலளிநீக்கு
  5. மனோவி3 மே, 2011 7:23 முற்பகல்

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. Ramani3 மே, 2011 7:23 முற்பகல்

    நல்ல முயற்சி
    கேள்விகளும் சிறப்பான கேள்விகளே
    முடிவு இன்னும் விளக்கமாக இருந்திருக்களாமோ?
    (மௌனம் அவ்னுள் எழுப்பிய கேள்விகளும்
    அதற்குஅவனுள் சுயம்புவாகத் தோன்றிய பதில்களும்
    அவனுள் எதையோ விதைத்துப் போயிருக்கக் கூடும்)
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...