புதன், 13 ஏப்ரல், 2011

வால்தாட்டி அதிரடி சதம் : சூப்பர் கிங்க்ஸ் வீழ்ந்தது

| | Leave a Comment
52 பந்துகளில் சதமடித்த பால் வால்தாட்டியின் அபார ஆட்டத்தின் உதவியால், 188 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் வென்றது.

மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்கை நோக்கி பதிலாட்டம் ஆடிய பஞ்சாப் அணிக்கு பால் வால்தட்டி அட்டகாசமான தொடக்கத்தை அளித்தார். முதல் 5.5 ஒவர்களிலேயே ஆடம் கில்கிறிஸ்டுடன் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் எடுத்தார். ஆடம் கில்கிரிஸ்ட் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஆடவந்த ஷான் மார்ஸ் (12 ரன்கள்) உடன் இணைந்த வால்தாட்டி, 2வது விக்கெட்டிற்கு 4.6 ஓவர்களில் 39 ரன்களைக் குவித்தார். அடுத்த ஆடவந்த சன்னி சிங், 11 பந்துகளில் 20 ரன்களை எடுத்து அணியின் ரன் குவிப்பை துரிதப்படுத்தினார். நய்யார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு வால்தாட்டியின் ஆட்டம் உச்சகட்டத்திற்குச் சென்றது. விசப்பட்ட பந்துகளின் போக்கை அறிந்து, அவைகளை சிறப்பாக அடித்தாடி ரன்களை படு வேகமாகக் குவித்தார். தான் எதிர்கொண்ட 52வது பந்தை ஸ்லிப் திசையில் தட்டிவிட்டு மேலும் ஒரு பெளண்டரியுடன் சதத்தை எட்டினார்.

மறுமுனையில் தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆடினார். ஆட்டத்தின் இறுதி ஓவரின் முதல் பந்தை கார்த்திக் சிக்ஸர் அடிக்க 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை எட்டி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பால் வால்தாட்டி 63 பந்துகளில் 19 பெளண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் 120 ரன்கள் எடுத்த ஆட்டமிழக்காமல் வெற்றியுடன் திரும்பினார்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக