வியாழன், 14 ஏப்ரல், 2011

நீங்கள் கையொப்பம் இட தெரிந்தவரா?

| | Leave a Comment
எனக்கு பெரும்பாலும் இந்த ஒரே நாளில் மாற்றம் என்பன போன்ற அதீத நிகழ்ச்சிகளில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அப்படி திடீரென எதாவது மாற்றம் ஒரே நாளில் நடக்கிறது என்றாலும் அது அன்றைய ஒரே நாளில் வந்து விட்டது கிடையாது. இந்தியா உலக கோப்பையை வென்றது ஒரு நாளில் தான், தேர்தல் நடந்தது ஒரு நாளில் தான் ஆனால் இதன் முடிவுகள் எப்படி அமைய போகின்றன என்பதை கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளே பின்புலமாக இருந்து நிர்மானிக்கின்றன.

ஐந்து ஆண்டுகளும் சும்மாவே இருந்து விட்டு திடீரென ஒரே நாளில் வாக்கு கேட்டு முதலமைச்சர் ஆவது எப்படி முடியாத காரியமோ, நான்கு ஆண்டுகளாக சுமாராக விளையாடி விட்டு உலக கோப்பையை ஒரு தொடரில் மட்டும் நன்றாக விளையாடி பெறுவது என்பது எவ்வளவு இயலாத காரியமோ அதே போலத்தான், இந்த புத்தாண்டு மாதிரியான நாட்களில் திடீரென மாற முயற்சிப்பதும்.

நான் சில நண்பர்களை பார்த்து இருக்கிறேன், ஆண்டின் தொடக்கத்தில் சிகரெட்டை விடுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு நாள் ஒரு சிகரெட், பின் சில நாட்களிலேயே பழைய ஃபார்ம் க்கு வந்து விடுவார்கள். இன்னும் சில பேர் இன்றிலிருந்து பொய் பேசுவதில்லை, சைட் அடிப்பதில்லை போன்ற விபரீதமான முடிவுகளை எடுத்து விட்டு சில மணி நேரத்தில் காலாவதி ஆகி விடுவதும் உண்டு.

சரி, ரொம்ப கதை கட்டாமல் விஷயத்துக்கு வருகிறேன்.
இன்று தமிழ் புத்தாண்டு என்று சில தொலைக்காட்சிகள் கொண்டாட, சில சித்திரை திருநாள் என்றும் இன்னும் சில தொலைக்காட்சிகள் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்றும் அறிவிக்கின்றன. இப்போதெல்லாம் டிவி யை பார்த்து தான் எந்த நாள் என்ன? என்று பெரும்பாலும் அறிய வேண்டி இருக்கிறது, இதுவே ஆங்கில புத்தாண்டு என்றால் ஆரவாரமாய் இருந்திருக்கும்.

சிலர் என்னய்யா, தை ஒண்ணு தான்யா தமிழ் புத்தாண்டு என்று சொல்வதும் உண்டு. ஆனால் எனக்கென்னவோ சித்திரை ஒன்று தான் நன்றாக படுகிறது, நான் இந்த புராண,இலக்கியங்களை எல்லாம் பிடித்து கொண்டு சொல்லவில்லை. ஏற்கனவே விழாக்கள் சூழ்ந்த மார்கழி,தை மாதங்களில் எதற்கு புத்தாண்டு வேறு? காய்ந்து போய் கிடக்கும் சித்திரை மாதத்தில் இருந்தால் எனா என்று தான் என் மனம் நினைக்கின்றது.

அய்யய்யோ, தலைப்பை மறந்து விட்டேனே, உங்களுக்கு கையொப்பம் இட தெரியுமா?

"என்னய்யா இது கேள்வி, அது தெரியலனா இவ்வளவு தூரம் உங்க பதிவை படிக்க முடியுமா?"

எந்த மொழியில் கையொப்பம் இடுகிறீர்கள், தமிழிலா ஆங்கிலத்திலா?

தமிழில் என்றால் பிடியுங்கள் வாழ்த்துக்களை வேறென்ன தர முடியும் என்னால்?
ஆனால் பெரும்பான்மையோரின் பதில் "ஆங்கிலத்தில்" என்று தான் இருக்கும்.
அதை எப்படி நீயே சொல்லலாம் என்றால், நம் சகோதரர்களை பற்றி நமக்கு தெரியாத என்ன?
நான் பயிலும் கல்லூரியில் தமிழில் கையொப்பம் இடும் எந்த மாணவனையும் நான் இதுவரை கண்டதில்லை. அதே நிலை தான் எங்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது தான் என்றாலும் பொது உண்மை அது தானே.

அரசாங்கத்தில் பணி புரியும் பலரும் தமிழில் கையொப்பம் இடுகின்றனர். ஒருவேளை அரசு ஆணையாக இருக்கலாம். சரி அது கிடக்கட்டும், நாமும் தமிழில் கையொப்பம் இட்டாலென்ன?

ஏற்கனவே ஆங்கிலத்தில் கையெழுத்திடுபவர்கள் அவ்வளவு எளிதில் தங்கள் கையொப்பத்தை மாற்ற இயலாது, Gazette ல் பதிய வேண்டும், வங்கியில் மாற்ற வேண்டும் என நடைமுறை சிக்கல்கள் உலுக்கி எடுக்கும். குறைந்தபட்சம் அதிகாரபூர்வமற்ற இடங்களிலாவது தமிழில் கையொப்பம் இடலாமே? அதுவமல்லாமல் பத்தாம் கீழ் படிக்கும் மாணாக்கர்களுக்கு தமிழினை பற்றி கூறி பற்றை உண்டாக்கி தமிழில் ஒப்பமிட செய்தால் உங்களுக்கு தமிழ்த்தாய்க்கு பரிகாரம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

நண்பர்களுக்கு கடிதம் எழுதும் போது போன்றவற்றில் தமிழில் ஒப்பம் இடலாமே?

எதுவுமே ஒரே நாளில் மாறாது என்றாய், இப்போது கையொப்பத்தை மாற்று என்கிறாய் என்றெல்லாம் கேட்காதீர்கள், நம்ம என்ன ஆட்சி கட்டிலை பிடிக்க போகின்றோமா  அல்லது உலக கோப்பையை வெல்ல போகின்றோமா ஆண்டு கணக்கில் எடுத்து கொள்வதற்கு? கையொப்பம் தானே ஒரு சில நாட்கள் முயற்சி செய்தால் வந்து விடப் போகிறது.

எல்லா செயலுக்கும் வேண்டிய உழைப்பு வேண்டுமானால் ஆண்டுக்கணக்கில் பிடிக்கலாம். ஆனால் முயற்சி நீங்கள் முடிவெடுக்கும் அந்த ஒரு கணத்தில் தான் தீர்மானிக்கப்படுகிறது.

நீ முதலில் தமிழில் கையொப்பம் இடுகிறாயா என்று யாரேனும் கேட்பின்,
நான் செய்யாத விஷயங்களை பிறரை செய்யும்படி எப்போதும் சொல்வதில்லை என்று சொல்லி கொள்(ல்)கிறேன்???

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக