தமிழ் தெரியாதா எனக்கு?

on புதன், 5 அக்டோபர், 2011

நான் படித்த படிப்பிற்கான வேலை வந்தால் தான் சேருவேன் என்று அடம் பிடிக்கும் நிலையிலோ,
ஓரிரு ஆண்டுகள் நல்ல வேலை(ளை)க்காக காத்திருக்கும் நிலையிலோ நாடோ நானோ இல்லை என்பதை தெளிவற அறிந்து விட்ட பின்பு நாட்களை கடத்த விருப்பம் இல்லை. என்னோடு போட்டிக்கு லட்சக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள், அதுவும் அதில் பெரும்பான்மையானோர் என்னை விட அதிக மதிப்பெண்களை எடுத்தவர்களாக இருப்பார்கள்.

அதனால் தான் கிடைத்த வேலைக்கு போக முடிவெடுத்து விட்டேன்.
கரூர் வைஸ்யா வங்கியில் தகுதிகாண் அலுவலர் (Probationary Officer) பணிக்கு தெரிந்தெடுக்கப்பட்டு இணைந்தும் விட்டேன்.

அதற்கான பயிற்சிக்கு சென்றிருந்த போது பல மாநிலங்களில் இருந்து வந்தவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

பெரும்பாலும் வட இந்தியர்கள் எல்லோருமே இந்தி பேசினார்கள். தமிழகம் தவிர்த்த மற்ற தென் மாநிலத்தவரும் ஓரளவு இந்தி தெரிந்து வைத்து இருக்கிறார்கள். தமிழர்கள் தான் குண்டு சட்டியிலே குதிரை ஒட்டி கொடு இருக்கிறோம்.
ஏதோ நமக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தான் அவர்களுடன் பேச முடிந்தது.
நான் ஒன்றை மனதிற் கொண்டு கஷ்டப்பட்டு ஆங்கில வார்த்தைகளை இணைத்து ஒரு வாக்கியத்தை பேசினால் அது அவர்களுக்கு புரிய ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருந்தது. ஓரிரு நாட்களில் எங்களின் ஆங்கிலம் ஒரே நேர்கோட்டில் வந்து விட்டது. அதன் பின்பு பெரிதாய் தகவல் பரிமாற்றத்தில் பிரச்னை இல்லை.

பயிற்சி வகுப்பின் போது "திருமகள் திருமண திட்டம் (TTT)" என்னும் வைப்பு நிதி பற்றி விளக்கம் கொடுத்தார்கள்.
அன்று இரவு என் அறையில் இருந்த வட இந்திய நண்பர்கள் மற்றொரு தமிழ் அன்பரிடம் தமிழ் சொற்களை மொழி பெயர்க்கும் வேலையில் இருந்தனர்.

திருமகள் - Girl
திட்டம் - Plan

ஆனால் திருமணம் என்பதில் தான் பிரச்னை.
அவர்கள் (இந்திக்காரர்கள்) கேட்கின்றனர்,
"கல்யாணத்திற்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?"
நம் அன்பரின் விளக்கம் அபரிமிதம்
"கல்யாணம் என்பது Marriage திருமணம் என்பது Wedding"

சரி நமக்கு தெரிந்தவற்றை சொல்லிப் பார்ப்போமே என்று நானும் மொழிப்பெயர்ப்பு வேலையில் இறங்கினேன்.

"அப்படி இல்லை...
கல்யாணம் தமிழ் சொல் இல்லை அது சமஸ்கிருத சொல்.
திருமணம் என்பது தான் தமிழ்.
Marriage,Wedding இரண்டிற்கும் ஒரே சொல் தான் அது திருமணம் தான்"

என்று சொல்லி பார்த்தேன்.
ஏற்கனவே கேட்ட தமிழ் அன்பரின் விளக்கமே அவர்களுக்கு பிடித்து விட்டது போலும். நான் சொல்வதை ஏற்கவே இல்லை. நம்ம அன்பரும் நான் சொன்னது தவறு என, நான் துணைக்கு ஆள் இல்லாததால் ஜகா வாங்கி கொண்டேன்.

இது பரவாயில்லை, அடுத்த நாள் தண்ணீர் பிரச்னை வெடித்து விட்டது.
நாங்கள் தாங்கி இருந்தது இரண்டாம் தளம். முதல் தளத்தில் சென்று தண்ணீர் கொண்டு வந்த வட இந்திய நண்பருக்கு "பாணி"க்கு தமிழ் சொல் அறியும் ஆர்வம ஏற்பட்டு என்னிடம் கேட்க,
நான்

பாணி - நீர் - water
'தண்'டா பாணி - 'தண்'ணீர் - Cold Water
'கரம்' பாணி - வெந்நீர் - Hot water

என்று விளக்கம் கொடுத்து தண் என்னும் சொல் ஒன்றி வருவதை வியந்து சொன்னேன். அவனுக்கு என் மேல் அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் மற்றொரு தமிழ் நண்பரிடத்து கேட்க,
அவர் என்னை முழுக்க தவறு என்று சொல்லி விட்டு விளக்க ஆரம்பித்து விட்டார்.

பாணி - தண்ணி
கரம் பாணி - சுடு தண்ணி
தண்டா பாணி - குளிர்ந்த தண்ணி

இதைக் கேட்ட நான் சும்மா இல்லாமல் குளிர்ந்த தண்ணி என்றால் "Chill Cold Water" என்று தேவை இல்லாமல் வார்த்தைகளை இழுப்பது போலாகி விடும் என்று சொல்லிப் பார்த்தேன்.

விளைவு எனக்கு தமிழ் தெரியாது என்று இரண்டு பக்கத்தினரும் சேர்ந்து விளாசினார்கள்.

இதற்கு பிறகும் நான் பேசினால் என்னை வேறு மாதிரி ஏதாவது சொல்லி விடுவார்களோ என பயந்து என் மொழி அறிவுக்கு குட்டு வைத்து விட்டேன்.

அடுத்த நாள் வகுப்பில் "Note Book" என்றால் என்னவென்று விவாதம்.
"நோட்டுப் புத்தகம்" என்று சொன்னார் நம் அன்பர்.
நான் "இல்லை, அது குறிப்பேடு" என்று சொல்லி இருந்தால் என்னை ஏதோ வேற்று கிரக மொழிக்காரன் என்று முடிவு கட்டியிருப்பார்கள்.

இதற்கு பின்பும் இது போன்ற அறிய மொழி விளக்கங்கள் அரங்கேறின. ஆனால் மேலும் மேலும் அசிங்கப்பட விரும்பாமல் அமைதி காத்தேன்.

ஆமாம் தமிழில் நம் அன்பரை போல ஞானம் பெறுவது எப்படி?

என் செய்வேன் நான்?

3 பின்னூட்டங்கள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தமிழில் நம் அன்பரை போல ஞானம் பெறுவது எப்படி??????!!!

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.

அம்பலத்தார் சொன்னது…

ரொம்ப நொந்து நூலகிப்போனீர்களோ

கருத்துரையிடுக