சங்கத் தமிழும் எங்கத் தமிழும் - 1

on புதன், 11 மே, 2011

உலகில் இலக்கியங்கள் அதிகம் கொண்ட மொழிகள் என்று நோக்கினால் அது நிச்சயம் ஒற்றைப்படை எண்களுக்குள் அடங்கி விடும். அதிலும் வரிசைப்படுத்தினால் தமிழ் தான் முதன்மை பெற்று நிற்கும்.

தமிழ் மொழியின் சங்க இலக்கியங்கள் ஆகட்டும்,
திரை இசைப் பாடல்கள் ஆகட்டும்,
அல்லது புதுக் கவிதைகள் ஆகட்டும் அனைத்துமே படிக்கையில் ஒரு வித சுகத்தை தருவிப்பதில் ஒன்றுக்கொன்று சளைத்தன அல்ல.

இதனை ஒரு தொடர் பதிவாக இடலாம் என்றிருக்கிறேன்..
"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
என்பார்கள், எனது வையகமே நீங்கள் தானே அதான் உங்களிடம் பகிர்கிறேன்.

1) சங்க தமிழ்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "இன்னா நாற்பது"-ல் கடைசி பாடலில் கபிலர் அடக்கமில்லாதவனுக்கு அறிவுடையோர் கூறும் அறிவுரை துன்பம் என கூற விழைகிறார்,


அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;
அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா
அடக்க, அடங்காதார் சொல்


விளக்கம் : 

அடக்கம் எனும் நல்மாண்பு உடையவன் கொள்ளும் ஆணவம் துன்பம்,
முயற்சியே செய்யதவனின் தற்பெருமை துன்பம்,
அடகுக்கு வரும் பொருளை அபகரிப்பது துன்பம்,
அவ்வாறே அடங்கதவனுக்கு கூறும் அறிவுரையும் துன்பம்.

நம்முள் நிறைய பேர் அறிவுரையை கேட்டாலே அலறி அடித்து ஓடுவோம், இப்படி இருக்க அறிவார்ந்த ஒருவர் நம்மிடத்து வந்து கூறும் அறிவுரை அவருக்குத் தான் நேர விரயம்.
அறிவுரை சொன்னால் மட்டும் போதாது கேட்பருக்கும் அதற்கான பொறுமை இருக்க வேண்டும், அடக்கம் இருக்க வேண்டும் என்பதை தெள்ளக் கூறி உள்ளார் கபிலர்.

2) திரை இசைத் தமிழ்

கண்ணதாசன் வரிகள் எப்போதும் எல்லோருக்கும் பிடித்த மாதிரியே இருக்கும் அது சமூகப் பாடல்களானாலும் சரி,காதல் ரசம் பொழியும் பாடல்கள் ஆனாலும் சரி,
இந்த பாடலில் காதலியை பல்வேறு வகைகளில் உருவகப் படுத்தி இருப்பார் அவர்.
இன்றும் என்றும் அதன் வரிகளும்,இசையும்,குரலும் சேர்ந்து இந்த பாடலை தமிழர்கள் மனதில் நிறுத்தி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

படம் : பாவ மன்னிப்பு
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : P.B.ஸ்ரீநிவாஸ்

--------------------------------------------
காலங்களில் அவள் வசந்தம், 
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி, 
மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்களில்)

பறவைகளில் அவள் மணிப்புறா, 
பாடல்களில் அவள் தாலாட்டு!
பறவைகளில் அவள் மணிப்புறா, 
பாடல்களில் அவள் தாலாட்டு!
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்!
(காலங்களில்)

பால்போல் சிரிப்பதில் பிள்ளை, 
பனி போல் அணைப்பதில் கன்னி
பால்போல் சிரிப்பதில் பிள்ளை, 
பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை..!
(காலங்களில்)

3) எங்கத் தமிழ்

தலைப்பு : அன்னையர் தினம்
வலைப்பூ : உணவு உலகம்

ராசலிங்கம் என்பவர் எழுதிய அன்னையர் தினம் பற்றிய இந்த கவிதையும் என்னை சமீபத்தில் கவர்ந்த கவிதைகளுள் ஒன்று.

ஈரைந்து மாதங்கள் என்னை நீ சுமந்தாய் அன்னையே,
இன்றைக்கும் உன் மடிதான் சொர்க்கம் இம்மனுலகிலே!
உன் உயிரை ஊணாக்கி ஊட்டி என் உடலை வளர்த்தாய்,
உலகையே தந்தாலும் உன் அன்பிற்கு அது ஈடாகுமோ!
நடை பயில, நல்லவை நான் அறிய கற்றுக் கொடுத்தாய்,
நானிந்த உலகிலே நல் மனிதனாய் வாழ வழியமைத்தாய்!
அன்னையர் தினத்தில் என் சிறு அன்பு காணிக்கை தாயே!


கருவிலிருந்து நம்மை அணு அணுவாய் காதலிக்கும் அன்னைக்கு இந்த கவிதையை காணிக்கை ஆக்கி இருக்கிறார், அருமையான வரிகள் என்று சொல்ல முடியாவிடினும் நிச்சயம் இது அருமையான உணர்வுகள்.

அடுத்த பதிவில் மீண்டும் பார்ப்போம்..
நீங்களும் கவிதை புனைவீர்கள் என்றால் கவிதை தளத்தை எனக்கு அறிமுகப்படுத்துங்கள்...

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்.. 

6 பின்னூட்டங்கள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரைட்டு....

மனோவி சொன்னது…

கறை நல்லது..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீட்

A.R.RAJAGOPALAN சொன்னது…

இதுவரை நான் படித்த ரசித்த
வலைபூக்களில்
வித்தியாசமானதாக
உணர்கிறேன்
சங்க தமிழும்
உங்க தமிழும்
சங்கமம் ஆவது
சந்தோஷ
சங்கீதம்
வாழ்த்துக்கள்

மனோவி சொன்னது…

புது பதிவரான என் பதிவுகளுக்கும் ஒரு முகவரி கிடைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..

நன்றி நண்பர்களே..

மனோவி சொன்னது…

எங்கத் தமிழ்..

நம்மின் தற்போதைய நிலையை
வார்த்தைகளே அறிவிக்கின்றன..

" எங்க? தமிழ் "

இப்படி ஒரு பொருள் சேர்க்கும் எண்ணம் இல்லை, இருந்தாலும் இப்போது ஏதோ தோன்றிற்று..

கருத்துரையிடுக