தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக கூட்டணிகள் உருவாகாத போது ஆளுங்கட்சிக்கு மட்டும், 160 தொகுதி கிடைக்கும் என உளவுத் துறை கொடுத்த தகவலில் தற்போது பெரும் சரிவு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் பேசு சில தகவல்கள் நம் காதோடு ஒலித்தது.. இதோ அதை உங்கள் காதுகளிலும் போட்டு வைக்கிறோம் யாருக்கும் சொல்லாதீங்க..
தற்போது அதிமுக கூட்டணியை விட எதிர்க் கூட்டணிகள் பலம் பொருந்திய நிலையில் அமைந்து விட்டன; அக்கட்சியினரில் பலரும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டனர். அவர்களின் பட்டியலைப் பார்த்ததும், அவர்களின் பலம் வாய்ந்த வேட்பாளர்களுக்கு எதிராக தன் கட்சிக்காரர் சிறப்பாக இல்லை என்பதை, மிகத் தாமதமாக உணர்ந்து, வேக வேகமாக வேட்பாளர்களை மாற்றி வருகிறது அதிமுக.
அதோடு, இந்த முறை தேர்தல் பிரசாரத்திலும் ஜெயலலிதாவின் பேச்சு ரசிக்கவில்லை. வழக்கம் போல, கதைகள் பல சொன்னாலும், பேச்சின் பாணி, கேட்பவர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. பேச்சில் வீரியம், எழுச்சி இல்லாமல் போவது, அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் ஆளுங்கட்சியின் தொலைக்காட்சியில், புதுமையான தகவல்கள் ஏதும் இல்லாததால் காலை முதல் இரவு வரை, சில காட்சிகளை மட்டும், திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றனர். இது, நெடுநாளைய ஆதரவாளர்களைக் கூட, சலிப்படைய வைக்கிறது.
இதனால் சமீபத்திய உளவுத் துறையின் தகவல்படி அ.தி.மு.க., கூட்டணிக்கு, 85 முதல் 90 இடங்கள் தான் கிடைக்கும் என கூறப்படுகிறது