தமிழ்ப்புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் பொதுவாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.இந்தச் சித்திரையில் பிள்ளைப் பிறந்தால் வெப்பத்தின் தாக்குதல் குழந்தையைப் பாதிக்கும் என்பதால் தான் ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளுக்கு தடா போட்டு பிரித்து வைத்தார்கள்.
ஆனால் ஆடி மாதம் ஒரு அற்புதமான மாதம். குல தெய்வ வழிபாடு நடத்துவதற்காகவே இருக்கின்ற மாதம் . பெரிய நகரங்களில் வாழ்பவர்கள் கூட ஆடிமாதம் என்றால் எவ்வளவு தூரமாக இருந்தாலும் எத்தனை பணிச்சுமை இருந்தாலும் பேருந்து போகாத குக்கிராமமாக இருந்தாலும் தன் முன்னோர்கள் வழிபட்ட குல தெய்வத்தை சென்று வழிபடுவார்கள். இந்த சித்திரை மாதத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறும். வெப்பம் மிகுந்த இந்தகாலத்தில் வைரஸ் கிருமியினால் ஏற்படும் அம்மைத் தொற்று அதிகம். அந்த வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.
அதனால் தான் தமிழ் மக்கள் வேப்பிலை மரத்தை தெய்வமாக வழிபட்டனர். கூழ்வார்க்கும் திருவிழாவின்போது வேப்பிலையினால் தோரணங்கள் கட்டியதுடன் அம்மை நோய்க் கண்டவர் இருப்பவர் வீட்டில் வேப்பிலையைச் சொருகியும் வைத்தார்கள். கேழ்வரகு தானியம் அதிக நார்ச்சத்து மிகுந்த உடலுக்கு குளிர்ச்சியூட்டுகின்ற நல்ல சத்தான தானியம் என்பதால் வெயில் அதிகமான இந்த நாட்களில் கேழ்வரகினால் கூழ் செய்து அம்மனுக்கு படைத்து அதனை ஏழை எளியோருக்கு ஊற்றினார்கள்.
இப்படியும் சொல்றாங்க ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில் குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில் பிறந்ததாக இருக்கும்.மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு,அது சூரியனுக்கு உச்சவீடு.எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம் வீரமானவனாகவும் தலைமைப் பொறுப்பேற்பவனாகவும் இருப்பான்,அதிலும் அதிகாலையில் பிறந்து லக்னமும் அதுவாக அடையப்பெற்றவனாயின் அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு.
தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் என்பதற்காகவே மன்னர்களின் காலத்தில் ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தம்பதிகளைப் பிரித்துவைத்தலை ஒரு சடங்காக சம்பிரதாயமாக ஆக்கி நாமும் காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.