விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையின் பகுதியை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
விவசாயம்:
நம்மாழ்வார் விவசாய திட்டம்: நாத்து நடுவதற்குரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும்.
இயற்கை உரம் மானிய விலையில் வழங்கப்படும்.
மூன்று மடங்கு உற்பத்தி தரும் வித்துக்கள் தரப்படும்.
பிறநாட்டு விவசாய முறைகளை கற்றுக்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஐந்தாயிரம் விவசாயிகள் அழைத்து செல்லப்படுவார்கள். இதனால் ஐந்து வருடங்களில் 25 ஆயிரம் விவசாயிகள் பலன்பெறுவார்கள்.
உணவு உற்பத்தி
அரசி, எண்ணெய், உணவு தானியங்கள் முதல் காய்கறி, பால் போன்ற அனைத்தும், தமிழக மக்களின் தேவையை கணக்கிட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது மட்டுமல்லாமல், ஏற்றுமதி செய்து விலையை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
பால்உற்பத்தி
.தமிழகத்தில் ஏழுகோடி மக்களுக்கு பால் தேவை நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு நபருக்கு 150 மில்லிலிட்டர் எனக்கணக்கிட்டால், 1.25கோடி லிட்டர் பால் தேவைப்படும். பிற தேவைக்கேற்ப அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படும். பொதுமக்கள் குறைந்தவிலையில் வாங்க விலை நிர்ணயம் செய்யப்படும்.
கீழ்வெண்மணி ஓய்வூதிய திட்டம்:
நிலம் இல்லாத 60 வயது நிரம்பிய ஆண், பெண் விவசாயிகள்அனைவருக்கும் மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும். அதனால் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
சிங்காரவேலர் மீனவர் ஓய்வூதிய திட்டம்:
60 வயது நிரம்பிய ஆண், பெண் மீனவர்களுக்கு மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும். இதனால் பத்துலட்சம் மீனவர்கள் பயன்பெறுவார்கள்.
கக்கன் கைத்தறி நெசவாளர் ஓய்வூதிய திட்டம்:
60 வயது நிரம்பிய ஆண், பெண் நெசவாளர்களுக்கு மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும். இதனால் பத்துலட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவார்கள்.
அப்துல்கலாம் கிராம பொலிவுத் திட்டம்:
தமிழகத்திலுள்ள 12,620 கிராமங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கிராமத்தில் வசிக்கும் தனி நபரின் குடும்ப வருமானம் குறைந்தது மாதம் ரூபாய் 25 ஆயிரம் என்ற அளவிற்கு வழிவகை செய்யப்படும்.
விவசாயம், ஆடு, மாடு, மீன், கோழி, பட்டுப்பூச்சி, தேனீமற்றும் பழமரம் வளர்த்தல் ஊக்குவிக்கப்படும். கைத்தொழில் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை அரசே கொள்முதல் செய்துகொள்ளும். பழங்கள் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும். குடிசைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு கல்வீடுகள் கட்டித்தரப்படும்.
கல்வி
சிறப்பு குழந்தைகள்: இவர்கள் தங்கிப்படிக்க பிரத்தியேக வசதியுடன் தனிப்பள்ளிக்கூடம், கல்லூரிகள் உருவாக்கப்படும்.
மூன்றாம் பாலினம்: இவர்கள் தங்கிப்படிக்க அனைத்து வசதியுடன் தனிப்பள்ளிக்கூடம், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.
பள்ளி கல்லூரியில் பாடப்புத்தகம்: மாணவர்களிடம் நாட்டுப்பற்றும் மற்றும் மொழிபற்றும் வளரவேண்டும். அதற்காக உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் எண்சரிதம், காந்திஜியின் சத்தியசோதனை, மதன் அவர்களின் வந்தார்கள், வென்றார்கள், ம.பொ.சி அவர்களின் விடுதலைப்போரில் தமிழகம், எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் எனது இந்தியா போன்ற நூல்கள், பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்:
கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓவியர்கள்,சமூகத்தில் பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் என, அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களின் அறிவு வளர்ச்சி, உலக நடப்பு, ரசனை மேம்பாடு என பாடத்திட்டம் தவிர்த்து, பிற உலக விஷயங்களை கலந்துரையாடல் பாணியில் நடத்துவார்கள்.
மனிதவள ஆலோசகர்:
பள்ளிகளில் மனித வள ஆலோசகர் நியமிக்கப்படுவார். அவர்கள் மாணவர்களின் கற்கும் திறன், அவர்களின் தனித்திறமை, குடும்ப சூழ்நிலை, பள்ளியில் கற்கும் சூழ்நிலை என அனைத்து விஷயங்களிலும் தனிகவனம் செலுத்துவார். அவர் ஒவ்வொரு மாணவருக்கும் தனிக்கோப்பு உருவாக்கி அரசுக்கு அனுப்புவார்.
காலை பசியாற உணவு வழங்கும் திட்டம்: குடும்ப சூழ்நிலையின் காரணமாக காலை உணவு கிடைக்காமல் பள்ளிக்கூடத்திற்கு வருவதால், அவர்கள் பசியாற எளிமையான உணவு வழங்கப்படும். பால், முட்டை, சுண்டல், சத்துமாவு கஞ்சி என விதவிதமாக எளிமையான உணவு வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள்
மாவட்டம், மாநிலம் வெளிநாடு செல்லும் பயணத்திட்டம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளமையிலேயே கிணற்று தவளையாக இல்லாமல், கல்வியில் பல விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த பயணம் உதவும்.மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கும், மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்கும், பிற நாடுகளுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சலுகை கட்டணத்தில் அழைத்து செல்லப்படுவார்கள்.
1000பெண்கள் பள்ளிக்கூடங்கள் மாலை நேர மகளிர் கல்லூரிகளாக மாற்றப்படும்: மாநிலத்தில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடங்கள் மகளிர் கல்லூரிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் ஒரு லட்சம் மகளிர்க்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மேலும் ஆண்டுக்கு 10 லட்சம் பெண்கள் பட்டதாரிகளாக உருவாக்க வழிவகை செய்யப்படும்.
சுகாதாரம்:
தரமான மருத்துவமனைகள்: தமிழகத்தில் அனைத்து தாலுக்காவிலும் அதிநவீன வசதியில் 24 மணிநேரமும் மருத்துவ சேவை வழங்க, மருத்துவமனைகள் புதியதாக கட்டப்படும். குறைந்த விலையில் தரமான மருத்துவ வசதி வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
வேலைவாய்ப்பு:
சமூக வளர்ச்சி மேம்பாடு: தமிழகத்தில் அனைத்து தாலுக்காவிலும் வணிகவளாகம் தனியாருடன் இணைந்து உருவாக்கப்படும். அதில் 200 முதல் 500 கடைகள் வரை அமைக்கப்படும். அதை வாடகை அல்லது சொந்தமாகவும் வாங்கிகொள்ளலாம். ஒவ்வொரு வளாகத்திலும் மூன்று முதல் ஐந்து திரையரங்குகள் நிறுவப்படும். இதன்மூலம் 2 லட்சம் பேர் பலன் பெறுவார்கள்.
சுற்றுலா விடுதிகள்: தமிழகத்தின் அனைத்து சுற்றுலா தளங்களிலும் நிறைவான வசதிகளுடன் தங்கும் விடுதிகள் கட்டப்படும். எல்லாத் தரப்பினரும் பயன்படுத்து வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 10லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
தனியாருடன் இணைந்து நடத்தப்படும் நிறுவனங்கள்: கூரியர் சேவை, கிராம மக்கள் தயாரிக்கும் பொருட்கள், எண்ணெய் உற்பத்தி நிறுவனம், பெண்களுக்கான சுகாதார பொருட்கள் தயாரித்தல், சிறு தின்பண்டங்கள் தயாரித்தல், பிஸ்கட், ரொட்டி தயாரித்தல், கால்நடை தீவனங்கள், செங்கல் தயாரிப்பு, இரும்பு கம்பிகள் தயாரிப்பு, சிமெண்ட், மென்பொருள் தயாரிப்பு இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். தனியாரின் நிர்வாகம் இருந்தாலும்,இறுதியாக அரசுதான் விலையை நிர்ணயம் செய்யும்.அதன் மூலம் குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும். தமிழகமெங்கும் உள்ள ஜவுளி கடைகளுக்கு கைத்தறி பொருட்கள் விநியோகம் செய்யப்படும். உதாரணமாக நல்லி, போத்தீஸ் போன்ற ஜவுளி கடைகளுக்கு பிற மாநிலங்களில், பிற நாடுகளில் விற்பனை செய்யும் உரிமம் வழங்ககப்படும்.
சமூக பாதுகாப்பு திட்டம்:
அனைவருக்கும் வீடு: அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான குடியிருப்புகள், குறைந்த முன்பணம், குறைந்த வட்டி, எளிய தவணை முறையில், எல்&ஹம்ல்;டி. போன்ற கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்களுக்கு தரமான குடியிருப்புகள், சலுகை விலையில் கட்டித்தரப்படும். ஒரு சதுரஅடி 2 ஆயிரம் ரூபாய் முதல் அதிக பட்சமாக 5 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் வகையில் குடியிருப்பிகள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள்:ழகத்தில் உள்ள மணல், தாதுமணல், கிராணைட் போன்ற அனைத்து இயற்கை கனிம வளங்களும் தேசிய மயமாக்கப்படும். அதன்மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
எரிசக்தி:
பெட்ரோல் – டீசல்: தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய்45க்கும், டீசல்ஒரு லிட்டர் ரூபாய் 35க்கும்விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்படும்.
சுங்கவரி:
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரிகள் இனிமேல் பாதியாக குறைக்கப்படும். தேவைப்படுமெனில் தமிழக அரசு அந்த நிறுவனத்தை தேசிய மயமாக்கும்.
தமிழகத்தில் உள்ள ஆறுகள்:
தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைப்பதன் மூலம் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
அடித்தட்டு மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லம்தேடி கொடுத்தல்:
தமிழக மக்கள் ரேஷன் கடைகளில் கால்கடுக்க நிற்கும் காலம் இனி மலையேறிவிடும். அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் அவர்களின் இல்லத்திற்கே கொண்டுவந்து சேர்க்கப்படும். இதற்காக அவர்களிடம் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.