தோனியை ஜெயிப்பாரா ரெய்னா?

0
280

நடப்பு 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மல்லுகட்டுகின்றன.

2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆண்டுகளாக வீறுநடை போட்ட டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அசைக்க முடியாத வீரராக சுரேஷ் ரெய்னா திகழ்ந்தார். சென்னை அணியின் ஒரு ஆட்டத்தை கூட ரெய்னா தவறவிட்டது கிடையாது. இதே போல் எல்லா சீசனிலும் சென்னை அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்து சென்ற பெருமை டோனிக்கு உண்டு.

துரதிர்ஷ்டவசமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சூதாட்ட பிரச்சினையில் 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டதால் நண்பர்களாக வலம் வந்த இருவரும் எதிரெதிர் அணிக்கு மாற வேண்டியதாகி விட்டது. ஆனாலும் ‘மஞ்சள்’ நிற பனியனுக்கு பதிலாக வேறு நிற உடையை அணிய வேண்டியது இருக்கிறதே? என்று இருவரும் உணர்ச்சி வசப்பட்டனர். அத்துடன் சென்னை அணிக்காக ஆடிய பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் குஜராத் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் முறையாக டோனியும், ரெய்னாவும் நேருக்கு நேர் எதிர்கொள்வதால் அவர்களது அணுகுமுறை, வியூகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நெருங்கி பழகியவர்கள் என்பதால் பலம்-பலவீனம் என்ன? என்பதை இருவரும் நன்கு அறிவர். இதுவும் இன்றைய ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

புனே அணி தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை எளிதில் தோற்கடித்தது. குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்தில் 2-வது வெற்றியை பெறும் முனைப்புடன் இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்பார்கள். வலுவான அணிகள் மோதுவதால் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

புனே: பாப் டு பிளிஸ்சிஸ், ரஹானே, கெவின் பீட்டர்சன், டோனி (கேப்டன்), ஸ்டீவன் சுமித், ரஜத் பாட்டியா, மிட்செல் மார்ஷ், அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முருகன் அஸ்வின், ஆர்.பி.சிங்.

குஜராத்: ஆரோன் பிஞ்ச், பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, இஷன் கிஷான், வெய்ன் பிராவோ, ஜேம்ஸ் பவுல்க்னெர், பிரவீன்குமார், பிரதீப் சங்வான், சரப்ஜித் லத்தா அல்லது ஜகாதி அல்லது பிரவீன் தாம்பே.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

உங்கள் கருத்தை தெரிவிக்க