அதிமுகவின் 6-வது தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் சேலத்தில் நாளை (புதன்கிழமை) மதியம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஏற்காடு (தனி), ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய 11 தொகுதிகளின் வேட்பாளர்களையும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.
பிரசாரக் கூட்டம் நடைபெறும் சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி முத்துமாரி தோட்டம் பகுதியில் 24 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தை அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி ஆகியோர் பார்வையிட்டனர். ஹெலிகாப்டர் இறங்குதளம், பொதுக்கூட்ட மேடை, பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் அமரும் வகையில் இடவசதி உள்ளதா என்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை முதல் ஹெலிபேடு வரை இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறும் மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அமருவதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாதுகாப்பு பணிக்காக சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக வருகைதர உள்ளனர்.
தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நாளை (புதன்கிழமை) மதியம் சேலம் செல்கிறார்.