அய்யாத்துரை மேலேயே கேஸா?

0
262

திருச்செந்தூர்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமார் கடந்த 7ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் நல்லூர் விலக்கில் வந்து கொண்டிருந்தபோது அவரது காரை பறக்கும்படை தாசில்தார் வள்ளிக்கண்ணு தலைமையிலான அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 9 லட்சம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால், அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்செந்தூர் சார்நிலை கருவூலத்தில் சேர்த்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 9 லட்சத்தை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் ஆவணத்துடன் வந்து பணத்தை பெற்றுச் செல்வதாக சரத்குமார் கூறிச்சென்றார்.

3 நாட்கள் கடந்த பின்னும் அவர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்களின்றி அளவுக்கு அதிகமாக காரில் சரத்குமார் பணம் கொண்டு வந்ததாக பறக்கும் படை அதிகாரி வள்ளிக்கண்ணு நேற்று முன்தினம் இரவு ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே, திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக, சமக பூத் ஏஜென்ட்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில பஞ்சாயத்து பகுதிகளுக்கு மட்டும் பணம் போய் சேரவில்லை. எனவே, அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல பணம் எடுத்து வரப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் முறையாக உரிய ஆவணங்களின்றி பணம் வைத்திருந்ததற்காக ஒரு கட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை தெரிவிக்க