தேர்வுக்கு தயாராகும் மாணவன் கூட அவ்வப்போது புத்தகத்தை புரட்டி பார்ப்பதுண்டு. ஆனால் இந்த அரசியல்வாதிகள் எப்படி தான் மனசாட்சியே இல்லாமல் ஐந்தாண்டு காலம் தங்களின் தீவிர பணிகளில் (யார் யார் என்ன பணி செய்தனர் என்பதை உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டுமா என்ன) கவனம் செலுத்தி விட்டு, இன்று எங்கு பார்த்தாலும் இதை செய்கிறோம் அதை செய்கிறோம், உடனே மூடுகிறோம்.. கொஞ்சம் கொஞ்சமாக மூடுகிறோம்.. இலவசமாக கொடுக்கிறோம், விலையில்லாமல் கொடுக்கிறோம் என வாக்குகள் பெற உறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.
படித்து முடித்து விட்டு ஒரு பத்தாயிரம் ரூபாய் வேலைக்கு போவதற்குள் எதனை இடர்களை நாம் கடக்க வேண்டி இருக்கிறது.. நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகட்கு அப்படி இப்படி பதில் சொல்லி வேலை கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அத்தனைக்கும் சம்பளம் எதோ பத்தாயிரம் தான், ஆனால் இஷ்டத்திற்கும் எதை எதையோ சொல்லி ஓட்டு வாங்கி வெற்றி பெற்று இவர்கள் கோடிகளில் பணம் பார்க்கிறார்கள்.
இந்த பதிவை எதாவது ஒரு வேட்பாளராவது படித்து கீழே இருக்கும் கேள்விகட்கு பதில் அளித்து வீடியோவை யூடுபில் போட முடியுமா?
முடிந்தால் நிஜத்தை சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம் ஓட்டு போடுவதை பற்றி?
- தங்களை பற்றி சொல்லவும்…
- உங்கள் பலம் என்ன?
- உங்கள் பலவீனம் என்ன?
- நீங்கள் ஏன் எங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறீர்கள்?
- நீங்கள் என்ன தொழில் செய்து கொண்டிருந்தீர்கள், ஏன் அதை விடுத்து அரசியலுக்கு வந்தீர்கள்?
- எதை உங்களின் மிகபெரிய சாதனையாக நீங்கள் கருதுகிறீர்கள்?
- நீங்கள் தீர்வு கண்ட மிக சிக்கலான சம்பவம்/பிரச்னை எது?
- தங்களின் எதிர்கால கனவு என்ன?
- தாங்கள் மிகவும் ஈடுபாடு கொண்ட துறை எது, ஏன்?
- நாங்கள் ஏன் மற்றவரை விடுத்து உங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?
இதை தாங்க எங்ககிட்ட அந்த பத்தாயிரம் ரூபாய் வேலைக்கு கேட்கிறாங்க… எவ்ளோ காசு பார்க்க போறீங்க கொஞ்சம் இதற்கும் பதில் சொல்லுங்களேன்.