கம்ப்யூட்டரைத் தாண்டி..

5
18
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே உலகம் முழுவதும் அறிவியலின் வளர்ச்சி எல்லா துறைகளையும் புரட்டி போட்டு விட்டது.
மனிதன் தன்னால் செய்ய முடிந்ததை வேகமாகவும், செய்ய முடியாததை செய்யவும் தன் நுண் அறிவால் கருவிகளை உற்பத்தி செய்து ஒரு நாளை எந்த அளவு நீட்டிக்க முடியுமோ அந்தளவு நீட்டித்தான்.

ஆனாலும் சற்று ஆழமாக யோசித்தால் இத்தனை வளர்ச்சி அடைந்த இந்த கால வாழ்க்கை ஏதோ மின்சார ரயில் போல வேகமாகவும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கை நிதானமாக அனுபவிக்கும்மாட்டு வண்டி பயணமாகவும் இருந்து இருக்கிறது.

ஒரு நாள் முழுவதையும் செலவிட்டு நாடகம் பார்த்தார்கள்,
வாரக் கணக்காக விழாக்கள் கொண்டாடினார்கள்,
நடந்தே காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் போய் வந்தார்கள்.
இருந்தும் நிம்மதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அதிக நிம்மதியை நோக்கி பயணிக்கிறோம் என்ற நினைப்பில் நாம் படைத்த கருவிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இப்போது நம் நேரத்தை குறுக்கி விட்டதோ என்றும் நினைக்க முடியாது. ஏனெனில் முன்பு ஒரு மணி நேரத்தில் துவைக்க முடிந்த துணிகளை இப்போது ஐந்து நிமிடத்தில் மெஷின் முடிக்கின்றது.

அப்படி என்றால் நாம் சேமிக்கும் அந்த நேரமெல்லாம் என்ன தான் ஆகிறது?

மனிதனின் சராசரி வாழ்நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை ஓரளவிற்கு புள்ளி விவரங்கள் மீது ஆர்வம இருக்கும் எவருக்கும் தெரிந்திருக்கும்.

நாம் மிகவும் கஷ்டப்பட்டு சேமிக்கும் இந்த நேரமெல்லாம் கடைசியில் நம் வாழ்நாளில் இருந்து கழிக்கப் படுகிறதோ? என்ற எண்ணம் இப்போது உங்களுக்கும் வரலாம்.

சரி அப்படி என்ன தான் நான் சொல்ல வருகிறேன் என்று எவரேனும் அறிய விரும்பினால் அது “ஒன்றும் இல்லை” தான்.

இப்போது நாம் வாழும் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை,
குழந்தைகள் பட்டாம்பூச்சி பிடிப்பதில்லை,
பாட்டி  கதைகள் கேட்பதில்லை,
மாட்டு  வண்டி சவாரி போவதில்லை,
கூட்டாஞ் சோறு ஆக்குவதில்லை,
இன்னும்  எவ்வளவோ மகிழ்விக்கும் தருணங்களை அவர்கள் காண்பதே இல்லை என்று நினைக்கும் அதே நேரத்தில்,

அக்காலத்தில்  கம்ப்யூட்டர் கண்டதில்லை,
இணையம் பார்த்ததில்லை,
செஸ் ஆடியதில்லை,
டியூசன் போனதில்லை
என்று நீட்டினால் அது வெறும் சப்பைக்கட்டாக மட்டுமே முடியும்.

இளம் வயதிலேயே கண் பார்வை மங்கி, வாயில் நுழையாத வியாதிகளை வாங்கிக் கொண்டு விஞ்ஞானம் தந்த விபரீதங்களை ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த கம்ப்யூட்டருக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணர்ந்து கொண்டாலே பாதிக்கும் மேல் நேரமிருக்கும் நம் இளம் பிராயத்தினருக்கு.