உலக சாம்பியன்,டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 என்று கம்பீரமாய் இங்கிலாந்து மண்ணில் விளையாட சென்ற இந்திய அணிக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது.
எனக்கு என்னவோ நாளை தான் இந்த தொடரில் இந்தியாவின் முதல் வெற்றி நிகழப் போவதாகப் படுகிறது பார்ப்போம்.
டெஸ்ட் போட்டிகளில் நான்கு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த நிலையில் T20 போட்டியில் பதிலடி கொடுப்பார்கள் என்று பார்த்தால் தங்களது T20 வரலாற்றில் முதல் போட்டியில் விளையாடிய இரண்டு வீரர்களை தவிர்த்து எவருமே பெரிதாய் வெற்றிக்கு முனையவில்லை.
அந்த இருவர் யார் என்று இரண்டு தினங்களாக தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காண்பித்து இருப்பார்களே? ரஹானேவும் ராகுலும் தான்.
ஒருவர் கிரிக்கெட்வாழ்க்கையை தொடங்குகிறார். மற்றவர் முடிக்கப் போகிறார்.
இருவருமே சிறப்பாக விளையாடினர். ரஹானே சரியாக பந்தின் திசை,வேகம் ஆகியவற்றை கொண்டு திருப்பி விடுவதில் வல்லவராக படுகிறார். டிராவிட் தன் இயல்புக்கு கொஞ்சமும் ஒத்து வராத ஷாட்களை எல்லாம் அடித்தார். மூன்று தொடர்ச்சியான சிக்சர்களை டிராவிட் பேட்டில்இருந்து காண்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
சரி இவர்கள் நல்ல அடித்தளம் அமைத்து விட்டார்களே, கோலி,ரோஹித் எல்லாம் பயிற்சி ஆட்டங்களிலே நன்றாக விளையடினர்களே ஸ்கோர் எங்கேயோ போய் விடும் என்று பார்த்தால் மீண்டும் மொத பேரும் ரெய்னா தவிர பொத்தென விழுந்து இங்கிலாந்துக்கு இன்னொரு வெற்றியை பரிசளித்து விட்டார்கள்.
நாளைக்கு எல்லாம் மாறும்; இந்திய அணி உத்வேகம் கொண்டு எழும் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் என்று நம்புவோம். அதை விட்டால், நம்மால் என்ன செய்ய முடியும்?
இதற்கு இடையில் T20 போட்டியின் போது வர்ணனை செய்யும் போது நாசர் உசைன் இந்திய களத்தடுப்பு வீரர் ஒருவரை கழுதை என்று வர்ணித்து விட்டதால் பிரச்னை கிளம்பி இருக்கிறது. அவர் திட்டியதை இவர்களே பெரிதாக்கி உலகுக்கு காண்பித்து விட்டார்கள்.
இது இப்படி என்றால் இந்திய அணியின் தோல்விக்கு வழக்கமாக யாராவது பலிகடா ஆக்கப்படுவார்கள் அல்லவா? இந்த முறை ஸ்ரீகாந்த் ஆகி இருக்கிறார். மோசமான அணித்தேர்வு எனக் கூறி அவர் பதவிக் காலத்திற்கு முற்றுப் புள்ளியை உறுதி செய்து இருப்பதாக தகவல்கள் வலம் வருகின்றன.
இவர் தேர்வுக் குழு தலைவர் ஆன பிறகு தான் இந்திய அணி ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் அரங்கில் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தது என்பதை மறந்து விட்டார்கள். ஏன் உலக கோப்பை போட்டிகளுக்கும் இவர் தானே அணித்தேர்வை செய்தார்.
சரி விடுங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இது ஒன்றும் புதிது அல்லவே?