என்ன இனிமே தான் கத்திரி வெயிலா?

0
319

அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மேற்கு திசையில் இருந்து காற்று வீசியதாலும் கடல் காற்று உருவாக தாமதித்ததாலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த வாரத்தில் அதிகரித்தது. அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வரை பதிவானது.

இதையடுத்து, தெற்கு, தென்கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கியதையடுத்து வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியது. இருப்பினும் கோடை காலத்துக்கான இயல்பான வெப்பநிலை சராசரியாக 98 முதல் 100 டிகிரி வரை பதிவாகி வருகிறது.

கத்திரி வெயில்: கத்திரி வெயில் மே 5-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக சராசரி வெப்பத்தின் அளவு தமிழகமெங்கும் சராசரியாக 104 முதல் 106 வரை பதிவாக உள்ளது. கத்திரி வெயிலின் தாக்கம் மே மாத இறுதி வரை நீடிக்கும்.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:-

அடுத்த ஒரு சில நாள்களுக்கு இதே வெப்பநிலை நீடிக்கும். பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, மதுரை, அரியலூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வெப்ப சலனத்தினால் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கரூர் பரமத்தி வேலூரில் 107 டிகிரி வெப்பம் பதிவானது. 10 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):

கரூர் பரமத்தி வேலூர் 107

சேலம், வேலூர் 106

தருமபுரி, திருச்சி, திருப்பத்தூர் 105

மதுரை 104

சென்னை, கோவை, பாளையங்கோட்டை 103

உங்கள் கருத்தை தெரிவிக்க