என்ன நடந்திருந்தாலும் சரி, எப்படியும் முன்பை விட ஒரு திருந்திய சட்ட வரைவு கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன்…
ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே போராட்டம் வெள்ளிக்கிழமை 4வது நாளாக தொடர்ந்தது.
இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டையை நீக்குவதற்காக, வெள்ளிக்கிழமை மாலை மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோரை அன்னா ஹசாரேவின் பிரதிநிதிகளான சுவாமி அக்னிவேஷ், கிரண்பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது இருதரப்பினரும் லோக்பால் மசோதா குறித்த தங்கள் வரைவு திட்டத்தை பரிமாறிக்கொண்டனர். இதற்கு வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி வரை, மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், தனது உண்ணாவிரதம் நீடிக்கும் என்று ஹசாரே முதலில் அறிவித்தார். ஆனால், அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து சனிக்கிழமை காலை தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.