ஒரு வகையில் 60 வயது கடந்தவர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். ஏன் என்றால் அவர்கள் எல்லாம் காமராசர் என்னும் மனிதம் நிரம்பிய மனிதரை முதலமைச்சராய் பெற்று இருந்தார்கள்.
இன்றைக்கு இருக்கும் என்னை போன்ற இளைஞர்கள் காமராசரை பற்றி படிக்கும், தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் எதோ கதை போல தான் உள்ளது. என்ன செய்வது சூப்பர்மேன்களும், சூப்பர்ஸ்டார்களும் நிறைந்த உலகில் சாதாரணமான மக்கள் சேவை புரிபவர் எவரும் இல்லையே.
இதை ஒரு தொடராக தொகுக்க இருக்கிறோம். தங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை இங்கே பிரசுரிக்க [email protected] என்ற மின்னஞ்சலில் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
காமராசர் வாழ்க்கை சரித்தரம் அல்ல இது, அவரை பற்றி எங்களுக்கு கிடைத்த தகவல்களை தொகுத்து தர இருக்கிறோம்.
எச்சரிக்கை : தயவு செய்து காமராசரை யாரும் இப்போது உள்ள அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு தங்கள் மனதை புண்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
#1
தந்தை பெரியாருக்கு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. அதன்படி முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் எனப் பயணம் செய்வதாகத் திட்டம் வகுக்கப்பட்டது.
பெரியாருடன் நால்வர் செல்வதாக இருந்தது. அனைவருக்கும் விசா எடுத்து,அடுத்த நாள் பயணம் என்ற நிலையில் எஸ்.எஸ்.ரஜுலா என்கிற புகழ்பெற்ற கப்பல் கம்பெனியில் டிக்கெட் எடுக்கப் போனார்கள். அப்போதுதான், ‘கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் மாநில அரசு கொடுக்கும் ‘நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’ வேண்டும்’ என்பது தெரிய வந்தது.
அப்போதே மாலை 6 மணி. அடுத்த நாள் 7 மணிக்குக் கப்பலில் புறப்பட வேண்டும்.
இரவுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சான்றிதழ் பெறுவது நடக்கிற காரியமா என்று பயணத்தை ஏற்பாடு செய்த வர்கள் மிரண்டு போனார்கள். பெரியாரிடம் சொன்னால் கோபப்பட்டு பயணத்தை ரத்து செய்துவிடுவார் என்று, தகவலை மணியம்மையிடம் சொன்னார்கள்.
சற்று யோசித்த மணியம்மை, “நீ உடனே முதலமைச்சர் காமராஜரைப் போய்ப் பார். அவரால் உடனே ஏற்பாடு செய்ய முடியும். ஐயாகிட்டே இதை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே. அவர் சத்தம் போடுவார். முதலமைச்சருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பார்” என்று சொன்னார்.
உடனே இரவு 8 மணிக்கு திருமலைப்பிள்ளை சாலை காமராஜர் வீட்டுக்கு போய்த் தகவலைச் சொன்னார்கள்.
கொஞ்சநேரம் யோசித்த காமராஜர், ‘சரி நீ நாளைக்குக் காலைல பத்து மணிக்கு வா. நான் சீல் போட்டுக் கொடுக்கச் சொல்றேன்” என்றார்.
காலை 7 மணிக்கு கப்பல் புறப்படும் தகவல் சொல்லப்பட்டது.
காமராஜர் உடனே, “அட என்னப்பா நீ? போகப்போறது பெரியார்! அவர் சாதாரண ஆளில்லை. கப்பலை நிக்கச் சொல்லி மத்தியானமா எடுக்கச் சொல்வோம்! போ போ.. காலைல வா!’ என்றார்.
இதெல்லாம் நடக்கிற காரியமா என தயக்கத் தோடு நின்றார்கள். உடனே காமராஜர், அங்கிருந்த உதவியாளரிடம், “ரஜுலா கப்பல் சதக் தம்பி மரைக்காயருக்கு போனைப் போடு” என்றார். தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கொடுத்தனர்.
“இந்தாப்பா… நாளைக்கு பெரியார் பர்மாவுக்கு போறாரு. அவருக்கு அரசாங்க அனுமதி 12 மணிக்குத்தான் கெடைக்கும். அவர் கப்பலுக்கு வந்து சேர 1 மணி ஆயிடும். நீங்க என்ன பண்றீங்க… நாளை மட்டும் கப்பல் மதியம் ரெண்டு மணிக்கு எடுங்க. பயணிகளிடம் முன்கூட்டியே அறிவிச்சுடுங்க. மற்ற பயணிகளுக்கும் தொல்லை இருக்காதில்லையா? ஞாபகம் இருக்கட்டும்… போறது நம்ம பெரியார்… புரியுதான்னேன்” என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் பேசினார்.
அதன்பிறகு காத்துக் கொண்டு நின்றவர்களிடம், “என்னய்யா இப்போதாவது தைரியம் வந்துச்சா… புறப்படுங்க. கவலையே வேண்டாம். கப்பலையே நிறுத்திப்புடுவோம்!” என்றார். சொன்னபடியே அடுத்தநாள் சர்டிபி கேட் வாங்கிக் கொடுத்து, மதியம் கப்பலை செல்ல வைத்தார். ஆனால் இந்த விவகாரம் எதுவுமே பெரியாருக்குத் தெரியாது.
முதல்வர் என்ற அதிகாரத்தில் அன்று இரவே அதிகாரிகளை வீட்டுக்கு வரவழைத்து சான்றிதழ் வழங்கி இருக்க முடியும். அது அதிகார துஷ்பிரயோகம் என்பதால், அதைச் செய்யாமல், மாற்று வழியில் பெரியார் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார் காமராஜர்.