1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம்” என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன். புறப்படும் போது கக்கனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “என்ன உதவி வேண்டுமானாலும் தெரியப்படுத்துங்கள். செய்கிறேன்..” என்றார் எம்.ஜி.ஆர். அத்தோடு மருத்துவமனையின் பொறுப்பாளர்களை அழைத்து.. “இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவமும் அளியுங்கள்.. என உத்தரவிட்டுச் சென்றார். பின்னர் சென்னை திரும்பியவுடன் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்றவற்றிற்கு உத்தரவிட்டார். அத்தோடு கக்கனுக்கு ஓய்வூதியமும் கிடைக்க வழியேற்படுத்தினார். இதைக் காலத்தால் செய்த உதவி என்கிறார் அவரது உறவினர்.
படிப்படியாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவர் சுயநினைவு இழந்தார். இவருக்கென நவீன வசதி வாய்ந்த படுக்கை ஒன்றினை புதிதாக வாங்கி உடல்நலன் காக்க எம்.ஜி.ஆர். ஆணையிட்டார். சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நினைவு திரும்பாமலேயே 1981 டிசம்பர் 23-ம் நாள் கக்கன் இறந்தார்.
எம்.ஜி.ஆர். மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். கக்கனது உடலை காமராசர் நினைவிடம் அருகே புதைக்கவேண்டும் என்பது அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் விருப்பமாக இருந்தது. அதை அரசின் காதுகளுக்கும் கொண்டு சென்றனர். ஆனால் கடைசி வரை அந்த குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவன் 24-12-1981அன்று கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.
கக்கனிடம் நீண்டகாலம் தனிச்செயலாளராகப் பணியாற்றிய கே.ஆர். நடராஜன் என்பவர் 1998-ம் ஆண்டு தினமணியில் கக்கனைப் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தார். அதில், “விடுதலைவேள்வியில் சவுக்கடிகளின் தழும்புகளைப் பரிசாகப்பெற்றவர். சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளானவர். அரசியல் உலகில் பிழைக்கத்தெரியாதவர் என்ற பட்டப்பெயருக்குச் சொந்தக்காரர். அவர் மறைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு அவரை யார் நினைக்கிறார்கள். அவர் செய்த ஒரே பாவம் அவர் தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்தது தான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்கிற வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். தமிழகத்தில் இதுவரை கக்கன்ஜியைவிட உயர்ந்தவர்கள் எவரும் இல்லை. இனியும் பிறக்கப்போவதும் இல்லை. இது சத்தியம்..” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கக்கனை அரசியலுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் வைத்தியநாதய்யர். அதை உயர்ந்தநிலையை அடைந்தபோதும் கக்கன் மறக்கவில்லை. கக்கன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது 195-ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன். அவரது உறவினர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது. வைத்தியநாதய்யரின் குழந்தைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்த்தனர். “இது முறையல்ல” என ஐயரின் பிள்ளைகளை அழைத்துப் பேசினார்கள். ஆனால் அவர்களோ, “நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது” என்றனர். இதைக் கேட்ட ஐயரின் உறவினர்கள் அதிர்ந்து போனார்கள்.
சிலர் கக்கனிடம் “உங்களால் தான் பிரச்னை விலகிக்கொள்ளுங்கள்.” என்றனர். ஆனால் கக்கனோ “இன்று நான் போட்டிருக்கும் கதராடை, இந்த உடல், இந்த பதவி எல்லாமே ஐயர் எனக்குத் தந்தது. நான் இன்றைக்கு மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மாந்தநேயம் தான். அத்தகைய ஐயருக்கு நான் இறுதி சடங்கு செய்யவில்லையென்றால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை..” என்றார். அவர்கள் திகைத்துப் போனார்கள். இதையடுத்து ஐயரின் உறவினர்கள் சிலர் இறுதிச் சடங்கை புறக்கணித்தனர். ஐயரின் குடும்பத்தை சமுதாயக்கட்டுப்பாடு என்ற பெயரில் பின்னர் சிலர் விலக்கி வைத்ததாகவும் தகவல் உண்டு.
கக்கன் மீது மரியாதை ஏன்..? எத்தனையோ பேர் அமைச்சர்களாக, முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் கக்கன் மீது நமக்கு அபரிமிதமான மரியாதை வருவதற்குக் காரணம் என்ன? என்பதை யோசித்தோமேயானால் உண்மை, நேர்மை எளிமை உள்ளிட்ட அவரது பண்பு நலன்கள் தான். .
பொதுப்பணித்துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேல் மதுரை வந்த அவர், தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். (அந்த விடுதியே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது தான்.) ஆனால் அங்கு வேறு அதிகாரி யாரோ தங்கியிருந்தார்கள். இதையறிந்த கக்கனுடன் வந்த அதிகாரிகளுக்கு கொஞ்சம் ஷாக்காக இருந்தது. தனியார் விடுதிக்குச் செல்லலாம் என்றார்கள் உடனிருந்த அதிகாரிகள். பயணியர்விடுதி கண்காணிப்பாளருக்கோ பதற்றம். “தங்கியிருப்பவரை எழுப்பி விடுகிறேன்” என்றார். ஆனால் கக்கன், “வேண்டாம். அதிகார நடைமுறைப்படி அமைச்சருக்கு தான் இங்கு முன்னுரிமை என்றாலும் இங்கு தங்கியிருப்பவரும் நம்மைப் போன்றவர் தான். தூக்கத்தில் எழுப்பி யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம்” எனக் கூறிவிட்டு மதுரையிலுள்ள ஒரே அறை கொண்ட தனது தம்பி வீட்டிற்குச் சென்று இரவு தங்கினார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இதே விடுதியில் தங்கிய அமைச்சர் ஒருவர் (அவருக்கு மதுரையில் பிரமாண்டமான வீடு இருக்கிறது. ஆனாலும் பயணியர் விடுதியில் தங்குவது பந்தா..) தனக்கு சுடசுட தோசை வாங்கிவராத தாசில்தார் மீது தோசையை தூக்கியெறிந்த சம்பவத்தை நானே செய்தியாக எழுதியதை இந்த நிகழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். சிரிப்பு வருகிறது.
அமைச்சராக இருந்த போது அலுவலகத்திலிருந்து காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் கக்கன். கார் வீட்டுக்குள் நுழையும் அந்த வினாடியில் தனது பணியாளர் ஒரு கேனைத் தூக்கி வருவதைப் பார்த்தார். அவரிடம் என்ன என்று கேட்க “அம்மா மண்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னார்கள். அது தான் இது..” என்றார். உடனே காரை நிறுத்தியதோடு கேனையும் காம்பவுண்ட் சுவருக்கு வெளியே வைக்கச் சொன்னார். டிரைவரை அனுப்பி வீட்டுக்குள் இருந்து மனைவியை வெளியே வரச்சொல்லி ” இந்த மண்ணெண்ணெயை வாங்கி வந்திருப்பவர் யார் தெரியுமா? அவர் அரசு ஊழியர். எனக்கு உதவிக்காக நியமிக்கப்பட்டவர். அவரை உனது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது..” என கடுமையாகச் சத்தம் போட்டார். அக்கம்பக்கத்திலிருந்தவர்களெல்லாம் பார்த்தார்கள். அழுதுகொண்டே வீட்டுற்குள் சென்றார் கக்கனின் மனைவி. சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு பின்னர் வீட்டுக்குள் நுழைந்தார் கக்கன்.
எம்.பி.யாக இருந்து பின்னர் மாநில அமைச்சரான உடன் தன் குடும்பத்தை மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்தார் கக்கன். அப்போது பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர். தனது அன்பு மகள் கஸ்தூரியை பள்ளியில் சேர்க்க விரும்பினார். அதிகாரிகளெல்லாம் கான்வென்ட் பெயர்களை பட்டியலிட்டார்கள். அமைச்சரின் மகளுக்கு சீட் தராமலா இருப்பார்கள்? ஆனால் கக்கனோ அருகிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் மகளைச் சேர்த்தார். மகளுக்கு எம்.பி. சீட்டே வாங்கிக்கொடுக்கும் அப்பா இருக்கும் இந்த காலகட்டத்தில் கான்வென்ட் சீட் கூட வாங்கித் தராத இவரெல்லாம் என்ன அப்பா? என உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது.
கக்கனின் தம்பி விஸ்வநாதன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுவதற்காக அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். அமைச்சரான கக்கனை சந்திப்பதற்காக அத்துறையின் இயக்குநர் அடிக்கடி வீட்டுக்கு வருவார். அப்போது அவர் விஸ்வநாதனிடம் பேசுவார். அவர் வேலையில்லாமல் இருப்பதையும் அறிந்திருந்தார். ஒருநாள் அவரை அலுவலகம் வரச்சொல்லி “எனக்கு உங்களுக்கு வேலை போட்டுத் தரும் அதிகாரம் இல்லை. ஆனால் என் அதிகாரத்துக்கு உட்பட்டு சில ஒதுக்கீடுகள் செய்யமுடியும்” எனக் கூறி விஸ்வநாதனுக்கு சென்னை லயோலா கல்லூரி அருகில் ஒரு மனையை ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இந்தத் தகவல் கக்கனின் காதுகளுக்கு எட்டியது. தம்பியை அழைத்து ஒதுக்கீடு ஆணையை எடுத்து வரச் சொன்னார். விஸ்வநாதானுக்கு குழப்பம் எதற்கு அண்ணன் எடுத்து வரச் சொல்கிறார் என்று… ஆணையை அவர் கக்கனிடம் கொடுக்க அதை வாங்கிப் பார்த்து.. படித்தவுடன் கிழித்தெறிந்தார். அத்துடன் அதிகாரியை அழைத்து அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டார். “எத்தனையோ ஏழைகள் படுக்கக்கூட இடமில்லாமல் வறுமையில் இருக்கும் போது அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டிய இடத்தை நீ பெறுவது முறையல்ல.. இனி இவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடாது” என்று அட்வைஸ் சொல்லி அனுப்பினார். அமைச்சர்களின் பினாமிகளாக தம்பிகள் இருக்கும் காலமிது.
கக்கன் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோது அவரை மலேஷிய நாட்டின் வேளாண்மைத் துறை அமைச்சர் சந்திக்க வந்திருந்தார். அவர் கக்கனுக்கு ஒரு பேனா பரிசளித்தார். அதைப் பார்த்த கக்கன் இது விலையுயர்ந்த பேனாவாக இருக்கும் போலிருக்கிறதே என்றார். அதற்கு அவர் “ஆம், தங்கப்பேனா” என்றார். “அப்படியானால் இதை வைத்துக்கொள்ளும் தகுதி எனக்கில்லை. நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்..” என்றார் கக்கன். மலேஷிய அமைச்சரோ இது நட்பிற்கான அடையாளம். உங்களுக்கான எனது பரிசு ” என்றார். உடனே கக்கன் அவரது உதவியாளரை அழைத்து பதிவு புத்தகத்தில் இந்த பேனா வந்தது குறித்து பதிவு செய்து எடுத்து வாருங்கள் என்றார். மலேஷிய அமைச்சருக்கு ஷாக். இது பர்சனலாக உங்களுக்கு தருகிறேன் என்றார். ஆனால் கக்கனோ, “நான் அமைச்சர் பொறுப்பில் இருக்கிறேன். பரிசு பொருளை பயன்படுத்தி விட்டு அமைச்சர் பதவியை விட்டுவிலகும் போது இதையும் விட்டுவிட்டு செல்வது தானே முறை” என்றார். மலேஷிய அமைச்சர் “இது உங்களுக்கானது. பதிவு செய்யவேண்டிய அவசியமே இல்லை..” என வலியுறுத்தினார். கக்கன் உடன்படவில்லை. மலேஷிய அமைச்சர் அந்த பேனாவை திரும்பப் பெற்றுக்கொண்டார். தங்கமோ தகரமோ டன் கணக்கில் தா.. என்ற நிலையைத் தானே இன்றைக்கு பொறுப்பிலிருக்கும் பெரும்பாலானவர்கள் பின்பற்றுகிறார்கள்.
கக்கனின் தம்பி, விஸ்வநாதன் நல்ல ஓட்டப்பந்தய வீரர். இவருக்கு போலீசில் வேலைக்கு உத்தரவு வந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அண்ணன் கக்கன் அவர்களிடம் சென்று தனக்கு அவருடைய இலாகாவில் வேலை கிடைத்திருக்கிறது என்று சொன்னதும், ஊகூம் வேண்டாம், நீ போலீஸ் வேலைக்குப் போகக்கூடாது. நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், என் சிபாரிசில் வந்ததாகச் சொல்வார்கள் என்று அவரை போலீசில் சேர கக்கன் அனுமதிக்கவில்லை.
அப்போது ஐ.ஜியாக இருந்த அருளைக் கூப்பிட்டு “விஸ்வநாதனின் விரல்கள் சரியாக செயற்படாது. அதனால் துப்பாக்கியை கையாளுவதெல்லாம் சிரமம். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறவர்கள் முழுத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும்..” என்று சொன்னதோடு அவருக்கு வழங்க இருந்த ஆணையையும் நீக்கம் செய்ய ஆணையிட்டார். ஆனால் உண்மையில், விஸ்வநாதன் இளவயதில் விளையாடும் போது தவறிவிழுந்ததால் அவரது வலது முழங்கையின் மேல்புறத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் ஏற்பட்ட பின்விளைவின் காரணமாக சுண்டு விரலும் மோதிர விரலும் சற்று வளைந்திருந்தது. இதை விஸ்வநாதன் அருளிடம் தெரிவிக்க.. “இதற்காகவா அமைச்சர் அப்படி கூறினார்” என வருந்தினார். பின்னர் அந்த விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆனார். .
கக்கன் அமைச்சராக இருந்தபோது அவரை சந்திக்க அவரது நெருங்கிய நண்பரும் எம்.எல்.ஏ.வுமான டி.பி. ஏழுமலை அடிக்கடி வீட்டுக்கு வருவார். ஒரு முறை அவர் வந்தபோது அவருக்கு காபி கொடுக்குமாறு கக்கன் சொல்ல.. “வீட்டில் பால் இல்லை” என அவரது மனைவி தயங்கி தயங்கி சொன்னார். அமைச்சர் வீட்டில் பால் இல்லையா.. ஏழுமலைக்கு அதிர்ச்சி. “ஒரு பசு மாடு வாங்கவேண்டியது தானே?” என எழுமலை சொன்னபோது கக்கன் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தார். அடுத்த சில நாட்களில் நூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு மாடு வாங்கி வந்தார் ஏழுமலை. இதைக் கண்ட கக்கன், “மாடு வாங்கி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. அதற்கான ஒப்புகை சீட்டு எங்கே?” எனக் கேட்டதும் நொந்து போனார் ஏழுமலை. “அமைச்சராக இருக்கும் நான் எந்த பொருள் வாங்கினாலும் ஒப்புகை சீட்டு வைக்கவேண்டும் என்பது எம்.எல்.ஏ.வான உங்களுக்குத் தெரியாதா? எனக் கோபப்பட்டார். திருவொற்றியூர் சந்தைக்குச் சென்று மாடு தரகனை தேடிப்பிடித்து “மாடு வாங்கிய விவரத்தை எழுதித் தாப்பா..” என்றார். அவனோ சிரித்தவாறே எழுதிக்கொடுத்தான். அதை கக்கனிடம் கொண்டு போய் கொடுத்தார் ஏழுமலை. ஏதோ சாதித்துவிட்ட திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது. ஆனால் கக்கனோ “இந்த ரசீதில் ஏன் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து வாங்கவில்லை. அப்படி வாங்காத ரசீது எப்படி செல்லும். ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்து வாங்கி வாங்க..” என்றார். மீண்டும் தரகனைத் தேடி கையெழுத்து வாங்கிக் கொடுத்த பின்னரே மாட்டை வீட்டுக்குள் கொண்டு வர அனுமதித்தார் கக்கன். இந்தத் தகவலை கக்கன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவின் போது ஏழுமலை சொல்லி கலங்கினார்.
“1968-ல நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளர் கக்கன். தேர்தல் முடிந்து நானும் அவரும் ஊர் திரும்பினோம். தேர்தலுக்குக் கொடுத்த பணத்தை கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைஞ்சது. கக்கனுக்கு தாங்கமுடியாத வருத்தம். நான் என்னவெல்லாமோ சமாதானம் சொன்னேன். கேக்கல்ல. என்னை அனுப்பி அவரது மனைவி கையில் கிடந்த இரண்டு வளையல்களை வாங்கி வித்துட்டு வரச்சொன்னார். நானும் வித்துட்டு வந்தேன். அப்போதும் நானூறு ரூபாய் தேறல்ல. வேறும் சில பொருட்களை விற்று நானூறு ரூபாய் தேத்திட்டாரு. பின்னர் சென்னைக்குப் போய் கட்சி பொருளாளரிடம் கணக்கை ஒப்படைத்தோம். “கணக்கை ஒப்படைச்சிட்டேன்” என இவர் காமராசரிடம் போய் சொல்ல அவருக்கு கடுமையான கோபம் வந்தது. “யாரு உன்கிட்ட கணக்கு கேட்டா..” என சத்தம் போட்டாரு. “அது நானே முறை” என்றார் கக்கன். “நீங்க படற கஷ்டம் எனக்குத் தெரியும் அது தான் தேர்தல் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சேன்”ன்னாரு. அப்போது கூட மனைவி நகைகளை விற்று கணக்கை சரி செய்ததை கக்கன் சொல்லல்ல.. அது தாங்க கக்கன்” என நம்மிடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் சொன்னவர் கக்கனின் நண்பரான வேணுகோபால் என்பவர்.
நாடாளுமன்ற உறுப்பினர், பத்தாண்டுகள் அமைச்சர், அதுவும் முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் இருந்தபோதும் சல்லிகாசு சம்பாதிக்கவில்லை. கடன் வாங்கித்தான் 1967 தேர்தலில் நின்றார். தேர்தலில் தோற்றவுடன் வாழ்வதற்கு கூட வசதி இல்லாத நிலை. இதையறிந்த நல்ல உள்ளங்கள் அவருக்கு நிதி திரட்டி தர முன்வந்தனர். பழ. நெடுமாறன் தலைமையில் மணிவிழா என்ற பெயரில் விழா நடத்தி கக்கனுக்கு நிதி தர முடிவு செய்தனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் விழா சிறப்பாக நடந்தது. சி.சுப்பிரமணியன் தங்கச்சங்கிலி அணிவித்து மகிழ்ந்தார். இந்த மணிவிழாவில் இருபத்தோராயிரம் ரூபாயை கக்கனுக்கு வழங்கினார்கள்.
மறுநாள் காலையில் மேலூர் அருகேயுள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்த தனது நண்பரை அழைத்து வரச்சொன்னார் கக்கன். அவர் வந்ததும் தேர்தல் செலவுக்காக நீங்கள் தந்த பதினோராயிரம் ரூபாய் இந்தாருங்கள்.. என்றார். உடனே அவர். “இதைத் திரும்பித் தருவதற்காக நான உங்களுக்குத் தரவில்லை” என்றார். “இந்தப் பணத்தை என் அவசரத்தேவைக்காக ஆள் அனுப்பி வாங்கினேன். இதை நீங்கள் திரும்பி பெற்றுக்கொள்ளவில்லை என்றால் நமது நட்பு தொடரமுடியாமல் போய்விடும்” எனக் கட்டாயப்படுத்தி கொடுத்தார்.
அதுபோல டிவிஎஸ் நிறுவன கெஸ்ட்ஹவுசில் அமைச்சராக இருந்தபோது தங்கியதற்காக ரூ.1,800 செலுத்துமாறு கொடுத்தனுப்பினார்.. “இதையெல்லாம் அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும்” என அவரது உறவினர்களும் நண்பர்களும் கேட்டபோது, “நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை. அந்த நம்பிக்கையை பாழாக்க நான் விரும்பவில்லை..” என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார். காற்றையே காசாக்கிவிடும் நம்மவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு பெருந்தகை வாழ்ந்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா நண்பர்களே..
நன்றி : http://andhimazhai.com/