இணையத்திலும் பொது வெளியிலும் தேர்தல் களத்திலும் இன்றைய பேசு பொருள் கஸ்தூரி பாட்டிதான்.
இவர்தான் அதிமுக, திமுக இரண்டு தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்தவர்.
தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் ‘பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்’ என்று சொன்னபடி அதிமுக விளம்பரத்தில் தோன்றும் இந்தப் பாட்டி, அடுத்த சில நிமிடங்களில், ‘வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா போதும்…!’ என்று திமுக விளம்பரத்திலும் தோன்றுகிறார்.
ஒரே பாட்டியை ஆள் வித்தியாசம் கூடத் தெரியாமல் இரண்டு கட்சிகளும் தங்கள் விளம்பரங்களில் நடிக்க வச்சிருக்காங்களே… என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள்.
இன்னும் சிலரோ.. ‘அந்தப் பாட்டி ஒரு அன்றாடங் காய்ச்சி. சாதாரண துணை நடிகை. வாங்கிய பணத்துக்கு நடிச்சுக் கொடுத்திருக்கு.. இதில் தப்பென்ன?’ என்று ஆதரிக்கிறார்கள்.
சரி, இந்தப் பாட்டி எப்படி இரண்டு விளம்பரங்களிலும் நடித்தார்? கஸ்தூரிப் பாட்டியிடமே கேட்டோம்.
நடந்த குளறுபடிகளில் ஏகத்துக்கும் பயந்து போயிருக்கிறார் பாட்டி. இந்த விளம்பரங்களால் தனக்குப் பிரச்சினை வருமோ என்ற அச்சத்துடன்தான் பேசுகிறார்.
அவர் கோபமெல்லாம் தன்னை திமுக விளம்பரத்தில் நடிக்க வைத்த ஏஜென்ட் மீதுதான்.
‘கண்ணு… இது எந்தக் கட்சி விளம்பரம்னெல்லாம் சொல்லல… காசு தர்றோம்.. ஒரு விளம்பரத்துல நடிக்கணும்.. அரை நாள்தான்னு கூப்பிட்டாரு. நானும் அவங்க சொல்லிக் கொடுத்தத அப்படியே பேசிட்டு வந்துட்டேன்,’ என்கிறார்.
பாட்டி முதலில் நடித்தது அதிமுக விளம்பரத்தில்தான். ஆனால் ஒளிபரப்பில் திமுக முந்திக் கொண்டதில், பாட்டி பலிகடா ஆகிவிட்டார்.
‘இந்த திமுக விளம்பரம் வந்த பிறகு வெளிய தல காட்ட முடியல கண்ணு… எல்லாரும் கேலி பேசுறாங்க.. சின்னப் பசங்க கூட போதும்மா போதும்…னு சொல்லிக் காட்டுதுங்க. என்ன பண்றதுன்னு தெரியல… திமுக விளம்பரம்னு சொல்லியிருந்தா சத்தியமா நடிச்சிருக்கவே மாட்டேன்.
இதனால எனக்கு ஏதாச்சும் பிரச்சினை வருமா? எம்மேல எந்தத் தப்பும் இல்லன்னு தெளிவா எழுதுவியா கண்ணு..’ என்றார் பரிதாபமாக.
இந்த கஸ்தூரி பாட்டி ரொம்ப காலமாக நடித்து வந்தாலும், பிரபலமானது செல்வராகவனின் மயக்கம் என்ன படத்தில்தான். அதன் பிறகு பல படங்களில் நடித்துவிட்டார். சொற்ப சம்பளம்தான் தருவார்களாம். இப்போதும் இறைவி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒரே மகள். இரண்டு பேத்திகளுடன் வசிக்கும் கஸ்தூரி பாட்டிக்கு அதிமுக விளம்பரம் மூலம் கிடைத்தது ரூ 1500. திமுக விளம்பரம் மூலம் கிடைத்து ரூ 1000!!