யுவராஜ் ஆட்டம் சேவாக்கிடம் பலிக்கவில்லை : டெல்லி வெற்றி

0
22
ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய புனே கேப்டன் யுவராஜ் சிங்கின் ஆட்டம் வீணானது.

நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், “பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ஹோப்ஸ் வருகை:
டில்லி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. வான் டர் மெர்வி, மார்னே மார்கல், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு ஜேம்ஸ் ஹோப்ஸ், மாத்யூ வாடே, உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் முரளி கார்த்திக் நீக்கப்பட்டு அபிஷேக் ஜுன்ஜுன்வாலா தேர்வு செய்யப்பட்டார்.

ரைடர் அதிரடி:
முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணிக்கு, ஜெசி ரைடர் அதிரடி துவக்கம் கொடுத்தார். வேணுகோபால் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த ரைடர், இர்பான் பதான், உமேஷ் யாதவ் பந்தையும் விட்டுவைக்கவில்லை. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்மித் (12), அசோக் டின்டா வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த மிதுன் மன்ஹாஸ் (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அபாரமாக ஆடிய ரைடர், நதீம் வீசிய ஆட்டத்தின் 10வது ஓவரில், ஒரு இமாலய “சிக்சர்’ அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் பின்ச்சிடம் “கேட்ச்’ கொடுத்து அவுட்டானார். இவர் 27 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்தார்.

யுவராஜ் அபாரம்:
அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா (4), மோனிஷ் மிஸ்ரா (7) சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். மறுமுனையில் அதிரடி காட்டிய யுவராஜ் சிங், “சிக்சர்’ மழை பொழிந்தார். டின்டா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் மூன்று “சிக்சர்’ விளாசிய யுவராஜ், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். புனே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. யுவராஜ் (66 ரன்கள், 32 பந்து, 5 சிக்சர்), பார்னல் (10) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் டின்டா, நதீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சூப்பர் ஜோடி:
சற்று கடின இலக்கை விரட்டிய டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, டேவிட் வார்னர், சேவக் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அபாரமாக ஆடிய இந்த ஜோடி, புனே அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ராகுல் சர்மா வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரின் கடைசி பந்தில், இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட வார்னர் 28 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 46 ரன்கள் எடுத்து “ரன்-அவுட்’ ஆனார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய சேவக், 23 பந்தில் 37 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து, ரைடர் பந்தில் போல்டானார்.

“ஹாட்ரிக்’ நழுவல்:
அடுத்து வந்த இர்பான் பதான், நமன் ஓஜா ஜோடி நிதானமாக ஆடியது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் (14), யுவராஜ் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரின் 3வது பந்தில் ஸ்ரீகாந்த் வாக்கிடம் “கேட்ச்’ கொடுத்து அவுட்டானார். நான்காவது பந்தில் நமன் ஓஜா (11), “ஸ்டெம்பிங்’ செய்யப்பட்டார். ஐந்தாவது பந்தை வேணுகோபால் எளிதாக சமாளிக்க, யுவராஜ் சிங்கின் “ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.

வேணுகோபால் அபாரம்:
அடுத்து வந்த மாத்யூ வாடே (3), ராகுல் சர்மாவின் சுழலில் எல்.பி.டபிள்யு., ஆனார். பின் இணைந்த வேணுகோபால், பின்ச் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது பின்ச் (25), யுவராஜ் சுழலில் சிக்கினார். அபாரமாக ஆடிய வேணுகோபால் 20 பந்தில் 3 சிக்சர் உட்பட 31 ரன்கள் எடுத்து யுவராஜ் சிங் பந்தில் வெளியேறினார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது ஹோப்ஸ், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப்ஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார். புனே சார்பில் யுவராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

நன்றி : தினமலர்

பகிர்ந்து
முந்தைய செய்திபாலாஜி கலக்கல் : கொல்கத்தா வெற்றி
அடுத்த செய்திமீண்டும் வருவோம்,மீண்டு வருவோம்..!
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.