இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வொசிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
ஹேக் உடன்பாட்டின் கீழ் வொசிங்டன் டிசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குடியியல் வழக்குகள் தொடர்பாகவே, சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக நட்டஈடு கோரி சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டம் மீறப்பட்டுள்ளது தொடர்பான சிறிலங்கா அதிபர் மகிந்த மகிந்த ராஜபக்ச மீது ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்செயல்களுக்காக, மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சிறிலங்கா அதிபரிடம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி, இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஹேக் உடன்பாட்டில் அமெரிக்காவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த உடன்பாட்டுக்கு அமைய, மகிந்த ராஜபக்சவுக்கான அழைப்பாணை சிறிலங்கா நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர் ரஜிஹர் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா, ரி.தவராஜா ஆகியோரின் உறவினர்களே இந்த வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மூவரும் நீதிக்குப் புறம்பான வகையில் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதாகவும், சிறிலங்காவின் முப்படைகளினதும் பிரதம தளபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்சவே இவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
ரஜிஹர் மனோகரனின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜாவின் மனைவி கலைச்செல்வி லவன், மற்றும் ரி.தேவராஜா குடும்பத்தினரின் உறவினரான ஜெயகுமார் ஐயாத்துரை ஆகியோர் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
ரஜிஹர் மனோகரன் என்ற மாணவன் திருகோணமலை நகரில் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களில் ஒருவராவார்.
ஆனந்தராஜா 2006 ஜூன் மாதம் மூதூரில் கொல்லப்பட்ட அக்சன் பெய்ம் உதவி நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேரில் ஒருவராவார்.
ரி.தேவராஜா குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இறுதிக்கட்டப் போரின் போது மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்த பதுங்கு குழியொன்றில் வீழ்ந்த எறிகணையினால் கொல்லப்பட்டனர்.
இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் அனுசரணையுடன் இந்த வழக்குகளை அமெரிக்காவின் முன்னாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பெய்ன் தாக்கல் செய்திருந்தார்.
செய்தி : நெருடல்.காம்
போர்க்குற்ற வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை இலங்கை அதிபர் ராஜபக்சே நிராகரித்துவிட்டார்