தேர்தல் ஆணையம் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கூறி வரும் நிலையில் தமிழகத்தின் முன்னணி நடிகர் கமல், வாய்ப்பிருந்தால் வாக்குப் பதிவு செய்வேன் என கூறியுள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் சபாஷ் நாயுடு. கமல் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படுகிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். ஏற்கெனவே எனக்கு வாக்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள். இப்போது ஊரில் வேறு இல்லை. வாய்ப்பிருந்தால் வாக்களிப்பேன் என்றார்.
தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.
இதனை வலியுறுத்தி, பால் பாக்கெட் முதல், சிலிண்டர் வரை 100 சதவீத வாக்குப்பதிவு என்ற கொள்கையை வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களையும் சென்றடையும் விதத்தில் பிரசாரங்களை செய்து வருகிறது தேர்தல் ஆணையம். சில நடிகர்களும் இப்பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கமல் வாய்ப்பிருந்தால் வாக்களிப்பேன் என கூறியிருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
மேலும் கமல் பேசுகையில், தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என்றும்,.அவரது ரசிகர்கள் அவரவர் சொந்த விருப்பபடி வாக்களிக்கலாம் என்றும் கூறினார்.
அரசியல் என்பது பாதுகாப்புக்காக காலில் அணிந்து கொள்ளும் செருப்பு போன்றது. நற்பணி இயக்கத்துக்குள் வரும் போது அதை கழட்டி விட்டு விடுங்கள் என்று என் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் வாக்களிப்பது ரசிகர்களின் இஷ்டம் என்றார் கமல்.