உதயநிதி ஸ்டாலின் – ஹன்சிகா நடிப்பில், ‘என்றென்றும் புன்னகை’ அஹமத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மனிதன். உதயநிதி – ஹன்சிகா இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
படத்தின் ட்ரெய்லர் நிச்சயம் மற்ற படங்களில் இருந்து இப்படம் உதயநிதியை தனித்து காட்டும் என நம்பி படம் பார்க்க சென்றோம்.
கதை: பெரிய வக்கீலாகி சாதிச்ச பிறகுதான் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை வருகிறார் உதயநிதி. தன்னை நிரூபிக்க ஒரு பொதுநல வழக்கு தொடர்கிறார். அந்த வழக்கு என்ன? யார் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்? அந்த வழக்கைத் தொடர்ந்ததால் உதயநிதி சந்திக்கும் மோதல்கள், இழப்புகள் என்ன? இறுதியில் லட்சியத்தை அடைந்தாரா? என்பது மீதிக் கதை.
உதயநிதி சாதாரண வக்கீல் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். கோபப்படுவது, கலவரம் ஆவது, குழம்புவது, வருத்தப்படுவது என்று எல்லாவற்றுகும் ஒரே மாதிரி ரியாக்ஷன் கொடுக்கிறார். அதை மட்டுமாவது இனிமேல் கவனிங்க உதய். மற்றபடி ஸ்லோமோஷனில் பேசும் போதும், லோ டெசிபலில் சாந்தமாக, உண்மைக்குக் குரல் கொடுக்கும்போதும் கவனம் பெறுகிறார். இனிவரும் காலங்களில் உதயநிதி நடிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
வழக்கம் போல வந்து போகாமல் ஹன்சிகா நன்றாக நடித்திருக்கிறார். உன்னை எப்படிடா லவ் பண்ணேன் என்று கேட்டும் அதே ஹன்சிகா, நீ வக்கீல் தொழிலுக்கு லாயக்கு இல்லை என்று கோபமுகம் காட்டும் போதும், அறிவுரை சொல்லும் போதும் இயல்பாக ஈர்க்கிறார்.
வெடுக்கென கோபப்படுவதும், திமிரோடு திரிவதுமாக சீனியர் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் வெல்டன்! இதென்னா கோர்ட்டா, டாக் ஷோ வா? என கோபத்தைக் கொப்பளிக்கும் பிரகாஷ்ராஜ் டாக் ஷோவில் விவாதம் செய்யும் நபராக மாறி எக்ஸ்ட்ரா எனர்ஜியை வரவழைத்துக்கொண்டு சப்தமிடுவதுதான் குறை.
எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று பிரகாஷ்ராஜிடம் சொல்லும் ராதாரவி ஒரு கட்டத்தில் அவரை கட்டுப்படுத்தும் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. இக்கட்டான சூழலிலும் கூலாக சொல்லும் ராதாரவியின் பதில்களுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.
கமலக்கண்ணன் உடைந்த குரலில் சாட்சி சொல்லும்போது தியேட்டர் முழுக்க நிசப்தம்… சிலர் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
விவேக்கின் நகைச்சுவை மொழியை விட, அவரது மௌன மொழியும், சைகை மொழிகளும் ரசிக்க வைத்தன. ஐஸ்வர்யா ராஜேஷின் டப்பிங் உறுத்துகிறது. ஒரு நிருபர் தூங்கிக்கிட்டு இருந்த, வழக்கு போட்டார் என்றா தமிழ் பேசுவார்? ஆனால், ஐஸ்வர்யா தான் கதைய நகர்த்தப் பயன்பட்டிருக்கிறார்.
பலம் :
மதியின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணின் இசையும் . சில காட்சிகளில் நடிப்பைக் காட்டிலும், இசையே நிரம்பி இருக்கிறது.
”இங்கே வாய்மையே வெல்லும் போர்டைத் தூக்கிட்டு நீதி விற்கப்படும்னு எழுதுங்க.” , ”யூனிஃபார்ம்ல இருக்குறவங்களே கை நீட்டும்போது, சட்டையே இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க?”
” காசு கொடுத்தா எல்லாம் கிடைக்காது. மரியாதையும், சந்தோஷமும் வந்துடுமா?” , ” நான் ஜெயிக்கிறேனா தோற்கிறேனா தெரியாது. ஆனா, கடைசிவரைக்கும் உண்மையா போராடுவேன்” போன்ற அஜயன் பாலா – அஹமத் வசனங்களுக்கு அதிக கரவொலிகள் எழும்பின.
பலவீனம் :
மணிகண்ட பாலாஜி முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
நீதிபதியே சபை நாகரிகம் இல்லாமல் கையில் கிடைத்தை தூக்கி எறிய முயற்சி செய்வாரா? போன்ற பல கிளைக் கேள்விகள் எழுகின்றன. கதாபாத்திர வடிவமைப்பிலும் சறுக்கல்கள் இருக்கின்றன.
‘ஜாலி எல்எல்பி’ இந்தி திரைப்படத்தை ரீமெக் செய்திருக்கும் அஹமத் சில எமோஷன் காட்சிகளை கச்சிதமாக வடிவமைத்துள்ளார். ஆனால், சில நீதிமன்றக் காட்சிகள் நாடகத்தனத்தில் இருந்து விடுபடவே இல்லை.
சந்தை கடை மாதிரி நீதிமன்றத்தில் அவன் இவன், யோவ் என்று மரியாதை குறைவாக வாக்குவாதம் செய்வார்களா? குற்றப் பின்னணி அறியாமல் ஒரு சீனியர் வழக்கறிஞர் வாதாடுவாரா? எதையுமே சொல்லாத மீடியா தான் இதற்கெல்லாம் காரணம் என்று பிரகாஷ்ராஜ் மேம்போக்காக ஜல்லியடிப்பது ஏன்?
மொத்தத்தில் படம் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்னு தோணுது.