ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் சென்னை..!

0
26
முரளி விஜய்,தோனியின் அசத்தல் மட்டை வீச்சு மற்றும் அணி வீரர்களின் சிறந்த களத்தடுப்பு,பந்து வீச்சு சேர்ந்து ராஜஸ்தான் அணியை சென்னையிடம் தோல்வி அடையச் செய்தன.

ஐபிஎல் 4 கிட்டத்தட்ட பொலிவிழந்து விட்டது.  ஆனாலும் அவ்வப்போது சில சிறந்த ஆட்டங்களினால் இன்னமும் கொஞ்ச பேர் ஐபிஎல்லை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையுடன் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே, வார்னே ஜெய்பூர் ஆடுகளம் மாற்றப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்ததாக ஒரு வதந்தி (உண்மை?) பரவியது. கடைசியில் அவர் எதிர்பார்த்த படியே நடந்தும் விட்டது. வழக்கமாக ராஜஸ்தானின் ஆடுகளம் சுழல் வீச்சுக்கு சாதகமாகவும் அதிக ரன்கள் அடிக்க முடியாதபடியும் இருக்கும் ஆனால், இந்த போட்டியில் முதலில் நெட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட சென்னை அணியின் அனைத்து முன் வரிசை ஆட்டக்காரர்களும் சதிராடி காட்ட, சென்னை மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 196 ரன்கள் அடித்தது.

மைகேல் ஹஸ்ஸி ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு பவுண்டரிக் கோடுகளை அடிக்கடி காண்பித்த வண்ணம் இருந்தார். அவர் எட்டு பவுண்டரிகள் சேர்த்து, 40 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் இந்த போட்டியில் வழக்கமான வந்தால் என்ன,போனால் என்ன பாணியில் விளையாடாமல் பந்தை பார்த்து அதற்கு ஏற்ப விளையாடினார். அதனால் தான் அவரால் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் குவிக்க முடிந்தது.

ஆனால் சுரேஷ் ரெய்னா தான் எப்போதும் நம்பகமான பேட்ஸ்மேன் எனபதற்கு இன்னும் ஒரு உதாரணத்தை விட்டு சென்றார். அவர் ஆறு பவுண்டரிகள் மூலம் 27 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தோனி தான் கடைசி சில ஓவர்கள் விளையாடினால் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை ஷேன் வார்னேவுக்கு அறிவிக்க எண்ணினாரோ என்னவோ மூன்று பவுண்டரி மற்றும் அதே எண்ணிக்கையில் சிக்ஸர் அடித்து வெறும் 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. டிராவிட் 20 ரன்கள் அடித்தாலும், தேவைப்படும்  ரன் விகிதம் அதிகமாகவே தொடக்கம் முதல் இருந்தது சென்னை அணிக்கு பக்க பலமாக அமைந்து விட்டது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஷேன் வாட்சனை அவுட் ஆக்கியதும் அந்த அணியின் நம்பிக்கை தளர்ந்து போய் விட்டது.

அஸ்வின் இன்னும் சிறப்பாக வெளிப்பட வேண்டும் இல்லையேல் உங்கள் இடத்தை ராகுல் சர்மா பிடித்து  விடுவார்.

ராஜஸ்தான் அணியில் உருப்படியாக விளையாடியது அஜின்க்யா ரஹானே (52) மட்டும் தான். அவரது ஆப் டிரைவ் ஷாட்டுகள் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தன. என்றாலும் அவரால் மட்டுமே அணியை வெற்றி பெறும் அளவுக்கு தேவைப்படும் ரன்கள் இல்லையே, இடையில் அபிசேக் என்பவர் ஒரு சிக்ஸ் அடிக்க சரி கொஞ்ச நேரம் பார்க்க விறுவிறுப்பாய் இருக்கும் என்று பார்த்தால் அவரையும் நம்ம அஸ்வின் ரன் அவுட் ஆக்கி விட்டு விட்டார். டக் போலிங்கர் மூன்று விக்கெட்டுகளும்,சுறேச் ரெய்னா கடைசி ஓவரை வீழ்த்தி ரன் கொடுக்காமலேயே இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.196 ரன்களை விரட்டிய அவ்வணியால் கடைசியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு சென்னை தகுதி பெற்று விடும்.

பகிர்ந்து
முந்தைய செய்திதாவூத் எங்கே…?
அடுத்த செய்திமும்பை மீண்டும் சொதப்பல் – பஞ்சாப் வெற்றியை பறித்தது
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.