கடவுள் இருக்கின்றாரா?

0
45
பதிவின் தலைப்பை பார்த்ததும், எழுத்தாளர் சுஜாதாவின் கட்டுரை என்று என்ன வேண்டாம். என் மனம் என்னை பார்த்து கேட்ட கேள்வி அல்லது நான் என் மனத்தை கேட்ட கேள்வி என எப்படியும் வைத்து கொள்ளலாம்.

நான் நிறைய முறை சென்னையிலிருந்து என் சொந்த ஊருக்கு பயணமாகி இருக்கிறேன். நேற்று கண்ட அதே காட்சிகளை இதற்கு முன்பும் பலதடவை கண்டு இருக்கிறேன். ஆனால் நேற்று மட்டும் ஏனோ என் மனம் மிகவும் வேதனைக்கு உள்ளானது. உடனே நான் அதை நிவர்த்தி செய்ய எதுவுமே செய்ய முடியாமல் போனதை நினைத்தால் என் மேல் எனக்கே கோபம் வந்தது. என்றாலும் எனக்கு அதற்கான வயதுமில்லை, விவரமும் இல்லை என்று ஒருவாறாக தேற்றி கொண்டேன்.

“அப்படி என்ன குடி முழுகி போகும் காட்சியை கண்டு விட்டாய்?” என நீங்கள் நினைக்கலாம். இது ஏதோ இந்தியா உலக கோப்பையை வெல்வது, ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாவது போன்ற அரிய காட்சி எல்லாம் கிடையாது. தினம் தினம் நீங்களும் நானும் காணும் காட்சி தான்.

படிக்க வேண்டிய சிறுவர்கள், “படியுங்கள் படியுங்கள்” என்று நாளேடுகளையும் வார இதழ்களையும் விற்கும் அவலம் தான். நேற்றைக்கு நான் பார்த்த சிறுவனுக்கு வயது பத்தை தாண்டாது என நினைக்கிறேன். தமிழின் நம்பர்  1 என்று சொல்லி கொள்ளும் ( கொல்லும் ) நாளேட்டை கையில் ஏந்தி “வாங்கி கொள்ளுங்கள்” என்று ஒவ்வொருவராக கெஞ்சி நடந்து கொண்டிருந்தான் பேருந்து நிறுத்தத்தில்.

நாட்டில் உள்ள சிறார் அனைவரும் கல்வி பயில வேண்டும், குழந்தை தொழிலாளர்கள் கூடவே கூடாது, நாட்டின் எதிர்காலம் கல்வியில் தான் உள்ளது என்று

பக்கம் பக்கமாய் எழுதும் நாளேடுகள் அவனுக்கு ஏதும் செய்யவில்லை,

அதனையே கொள்கையாய் மேடைகள் முழுக்க முழங்கும் தலைவர்கள் அவனுக்கு ஏதும் செய்யவில்லை,

தலைவர்களை தாங்கும் கட்சிகள் அவனுக்கு ஏதும் செய்யவில்லை,

கோலோச்சும் அரசாங்கமும் அவனுக்கு ஏதும் செய்யவில்லை,

வாங்கி படித்த என்னாலும் ஏதும் செய்ய முடியவில்லை அந்த நாளேட்டை வாங்கி படிப்பதை தவிர்த்து.

இப்படி யாராலும் எதுவுமே செய்ய முடியாமல் செய்வது தான் இறைவனின் வேலை என்றால் அவர் இருக்கிறாரா என்று என்ன தோன்றுவது மட்டும் அல்லாமல் இல்லாமல் இருந்து விட்டாலென்ன என்றும் தோன்றுகிறது.

என்ன தான் இப்படியெல்லாம் எழுதினாலும் அந்த சிறுவனை பார்த்த அந்த கணம்

” முருகா இவனை நீ தான் காப்பாற்ற வேண்டும் ” என்னும் மனத்தை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.

உங்கள் கருத்தை தெரிவிக்க