ஃபுகுஷிமாவில் கதிர்வீச்சு அதிகரிப்பு

0
17
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு ஆலையின் நிலை தொடர்பாக புதிய கவலைகள் தோன்றியுள்ளன. இந்த ஆலையில் இருக்கின்ற ஒரு உலை அருகே சோதனை செய்யப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நீரில் சாதாரணமாக இருப்பதை விட கிட்டதட்ட ஒரு கோடி மடங்கு அதிகளவு கதிர்வீச்சு காணப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையில் இருந்தே இந்த கதிர்வீச்சு கொண்ட நீர் கசிவதாக ஜப்பானின் தேசிய அணு பாதுகாப்பு அமைப்பு கூறுகின்றது.

ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டு விட்டதாக இந்த ஆலையை நடத்தும் நிறுவனம் கூறியுள்ளது.

அணு உலையை ஸ்திரப்படுத்துவதற்காக மின்சார வசதியை ஏற்படுத்த கடுமையாக போராடி வரும் பணியாளர்களுக்கு அடிக்கடி உலையில் காணப்படும் ஆபத்தான சமிஞ்சைகள் பெரும் சவாலாகவும், இடையூறாகவும் இருக்கின்றன.

இதே நேரத்தில் ஃபுகுஷிமா அணு ஆலை இருக்கின்ற கடல் பகுதியிலும் கதிர்வீச்சின் வீரியம் அதிகரித்துள்ளது. ஆனால் கடலின் நீரோட்டம் இந்த கதிர்வீச்சின் தாக்கத்தை நீர்த்து போக செய்து விடும் என அணு பாதுகாப்பு அமைப்பு குறிப்பிடுகின்றது.

இந்த கடல் பகுதியில் காணப்படுகிற கதிர்வீச்சு கொண்ட ஐயோடினின் அளவானது பாதுகாப்பு என்று கூறப்படுகின்ற அளவை விட 1850 மடங்கு அதிகமாக இருப்பதாக ஜப்பானின் தேசிய அணு பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில் ஆலையை சுற்றிலும் இருக்கின்ற வான் பகுதியில் காணப்பட்ட கதிரியக்கத்தின் வீரியம் குறைந்து இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீர் எங்கிருந்து வருகிறது அதை எப்படி தடுப்பது எப்படி என்பதே ஆலையில் போராடி வரும் பணியாளர்களுக்கு தலையாய கவலையாக இருக்கிறது.ஜப்பான் அணு உலையில் ஏற்பட்ட இந்த சிக்கலானது இன்னும் பல வார காலத்திற்கு நீடிக்கலாம் என சர்வதேச அணு சக்தி மையத்தின் தலைவரான யூகியா அமானோ தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை ஜப்பானின் அமைச்சரவை செயலரான யுகியோ எடோனோவும் எதிரொலித்துள்ளார். ஆலைக்குள் இருக்கும் கதிர்விச்சால் பாதிக்கப்பட்ட பொருளை வெளியே எடுப்பதற்கு காலச் செலவு நிறைய ஏற்படும் என கூறினார்.

இதே சமயம், அணு ஆலை அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு விவரமாக தகவல்களை கொடுக்காமைக்கு ஜப்பான் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விரிவுப்படுத்தும் திட்டமும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.


நன்றி் : பிபிசி