ஐங்கோணம்
பணத்திடம் இருந்து படிப்பை மீட்க வேண்டிய குடும்பம், இசைக் கலைஞனாக மாற விரும்பும் இளைஞன், தனியே தொழில் செய்ய நினைக்கும் விலை மாது, சூழ்நிலைகள் செய்யும் சூழ்ச்சியால் தீவிரவாதியாக பார்க்கப்படும் குடும்பஸ்தன், பணக்காரியை மணந்து பணக்காரனாக துடிக்கும் குப்பத்து பையன் என ஐந்து திரைப்படங்களில் வர வேண்டிய கருவை சேர்த்து ஒரே திரைப்படத்தில் அதுவும் தொய்வு ஏதும் இன்றி சொல்லி முடித்திருக்கிறார் கிரிஷ்.
“என்ன வாழ்க்கைடா இது”
இந்த இக்கட்டான சமூக சீர்திருத்த கதையைக் கூட கொஞ்சமும் போர் அடிக்காமல் அங்கங்கே நகைச்சுவையை தூவி நகர்த்தி செல்ல சந்தானம் நன்றாகவே பயன் பட்டிருக்கிறார். கேபிள் ராஜாவாக வரும் சிம்பு நிஜமாகவே இப்போது லிட்டில்-ல் இருந்து யெங் ஆகி விட்டார், நடிப்பில். ஆனாலும் தனது துடுக்குத்தனமான பேச்சுகளை விட்ட மாதிரி தெரியவில்லை.
“கஷ்டப்பட்டு மேல வந்தாலும் தொரத்துரானுன்களே, என்ன வாழ்க்கைடா இது”
என்று தொடங்கும் சிம்பு நிறைய இடங்களில் ( ஒரு பத்து முறைக்கு மேலாவது இருக்கும்)
“என்ன வாழ்க்கைடா இது”
என்று சொல்லும் போது வரும் ஒட்டு மொத்த எரிச்சலையும் இறுதி காட்சியில் உயிர் பிரியும் போது அதே வரிகளை சொல்லி நம் நினைவை விட்டு அகலாமல் செய்து விடுகிறார். பொதுவாகவே படம் முழுவதும் நிறைய இடங்களில் சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லும் படி அமைந்த வசனங்கள் படத்திற்கு பெரிய பிளஸ்.
சடுகுடு சந்தானம் :
முதல் பாதியில் மட்டுமே அதிகம் வரும் சந்தானம் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
*கேபிள் ஓனரிடம், “உனக்கு வலிக்குதுன்னா, எனக்கு மட்டும் என்ன எண்ணெய் தேச்சி குளிக்குதா” என்பதிலும்,
*வண்டி கேட்கும் இடத்தில்,
“வண்டி என் ஒய்ப் மாதிரி யாருக்கும் கொடுக்கமாட்டேன்” என்பவரிடம்,
“அப்பறம் ஏன்டா வாசல்லே வெச்சி வாஷ் பண்ற வெந்து போன வாயா”
*”என்னது டூ வீலருக்கு டிரைவரா அதுக்கு நான் தும்பை பூவுல தூக்கு மாட்டிக்குவன்” என்று சிம்புவிடம் நச்சரிக்கும் இடத்தில்,
*”ஒருத்தங்கிட்ட நாற்பதாயிரம் கேட்டா தானே கிடைக்காது, நாப்பது பேரு கிட்ட ஆயிரம் ஆயிரமா கேப்போம்” எனும் போது,
“அதுக்கு நாற்பதாயிரம் பேரு கிட்ட ஒரு ஒரு ரூபாயா கேக்கலாமே” என்று நக்கல் அடிப்பதிலும்,
*போலீஸ் ஸ்டேசனில் ராதாரவியிடம், “இன்னா சார் ஓட்டல் சப்ளையர் மாதிரி இட்லி மட்டும் தானே இல்லை சட்னி சாம்பார் வடைகறி ன்னு கேட்னு போய்னே இருக்கீங்க” என்று அவரை கலாய்ப்பதிலும் சந்தானம் ட்ரேட்மார்க் தெரிகிறது.
ஆனாலும் பிரளயம் என்ற வார்த்தை வரவில்லை எனுமிடத்தில் சறுக்கி விடுகிறார்.
இன்னும் நிறைய இருக்கிறது படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பாத்திர படைப்புகள் :
பணத்திடம் படிப்பு :
சரண்யாவும், வயதான மாமியாரும் அந்த கதாபாத்திரங்களின் கணத்தில் சரியாக பொருந்தி இருக்கின்றனர். அதிலும் அந்த வயதானவர் ஏழைகளின் நிலையை கண் முன்னே நிறுத்துகிறார். நன்றாக படிக்கும் தன் மகனுக்காக கிட்னியை விற்க துணிகிறாள் தாய், ஆனால் அந்த சிறுவனின் அறிமுகத்தில் கொஞ்சமாவது நல்ல கணக்கை காட்டி இருக்கலாம். (10*100=1000) எனும் சாதாரண கணக்கு கதையோடு ஒட்டவே இல்லை.
ஆனாலும் கடைசியில் ஐம்பதாயிரத்திற்கு முப்பது மாதத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் மொத்த வட்டி முப்பது ஆயிரம் என்று கணக்கு போடுவதில் அது காணமல் போகிறது.
இசைக் கலைஞன் :
ராக் இசையில் சாதிக்க நினைக்கும் பரத், தன் அம்மாவின் ராணுவ சேவை வேண்டுதலுக்கு,
“The country got a hero when he is gone, but I lost my dad” என்று சொல்வது நச். விமானத்தை தவற விட்டுக் காரில் போகும் பரத் அண்ட் கோ முதலில் ஒரு சிங்கை காப்பாற்றாமல் போவதும் பின்னர் சிங் இவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதும் உதவி மனப்பான்மையை புரிந்து கொள்வதும் என வழக்கமான காட்சிகள் இல்லாமல் இருந்திருக்கலாம், என்றாலும் அவையும் ரசிக்கும் படியே இருந்தன.
விலை மாது :
வேசியாக வரும் அனுஷ்கா வேறொருத்தி பிடியில் இருந்து தப்பி சென்னையில் தனியே தொழில் புரிய ஆசைப்படுவது, போலீஸ் அவளை தன் இழுப்புக்கு பயன்படுத்துவது என பாலியல் தொழிலாளிகளின் மறுபுறம் அப்பட்டம்.
காவல் நிலையத்தில், “நாங்க துணிய அவுத்துட்டு விக்கிறோம், நீங்க துணிய போட்டுக்கிட்டு விக்கிறீங்க” என்று போலீசாரை சாதாரணமாக தாக்குகிறார் அனுஷ்கா.
நான் தீவிரவாதி அல்ல:
கோயம்பத்தூரில் எதேச்சையாக ஏற்பட்ட பிழையால் தீவிரவாதி போலவே பார்க்கப்படும் பிரகாஷ்ராஜ் படம் நெடுகிலும் ஒரு வித அனுதாபத்தை முஸ்லிம் நண்பர்கள் மீது வர வைக்கிறார். எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்களும் இல்லை, எல்லா இந்துக்களும் நல்லவர்களும் இல்லை எனும் நிதர்சனத்தை நிலை நாட்ட பல காட்சிகளை நாடி இருக்கிறார் இயக்குனர்.
கேபிள் ராஜா..!
கேபிள் ராஜாவாக வரும் சிம்பு , ஜாலியாக இருக்கும் பேர்வழி, படத்தில் நிறைய விசயங்களில் ஸ்கோர் செய்கிறார். சந்தானத்துடன் சேர்ந்து காமெடி பண்ணுவதிலும் சரி, ஏழைகளிடம் பணம் பறிக்கும் போது அந்த கணநேரம் நெஞ்சம் பதைத்து கண்ணீர் விடுவதும், பணத்தை கொள்ளை அடித்தும் திருப்பி கொடுக்க விரையும் அந்த தாளாமையும் என்று பல இடங்களில் அவரிடத்தில் நிறையவே முதிர்ச்சி. முதலில் காதலியிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிப்பது பின்பு உணர்ச்சி வேகத்தில் சாதாரணமாக உண்மைகளை கொட்டுவது என்று கலக்கி இருக்கிறார்.
உலகத்தில் ரெண்டே சாதி தான் ஒண்ணு ஏழை, இன்னொன்னு பணக்காரன் எனும் தத்துவம் காலங்கள் தாண்டியும் மாறாமல் இருக்கிறது. அடுத்த தலைமுறை படங்களிலாவது அது இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆனால் இவ்வளவு பேர் இருந்தும் ஒரு கதாபாத்திரத்தை பார்த்த உடன் மிகுந்த கோபம் வருமேயானால் அது நிச்சயம் அந்த இடைத்தரகராகத் தான் இருப்பார். பாதி தொகையை முதலிலேயே ஆட்டையை போடுவதும் இல்லாமல் மீதியிலும் கொஞ்சம் பிடித்தம் செய்யும் போது மொத்த பேரின் கரிச்சலையும் கொட்டிக் கொள்கிறார்.
ஏதோ ஒன்றிரண்டு முஸ்லிம்களின் தவறுக்கு மொத்த பேரையும் குற்றவாளியைப் போல் பார்க்கும் போலீஸ், சில அயோக்கியர்களை பழி தீர்ப்பதாக பலரை காவு வாங்கும் தீவிரவாதிகள் என எதிர் எதிர் திசையில் ஓடும் குதிரைகளில் திறமையாக சவாரி செய்திருக்கிறார் பட இயக்குனர்,கிரிஷ். இறுதிக் காட்சியில் எல்லை மீரும் தீவிரவாதம் என்ன ஆகிறது என்பதை காட்ட வேண்டிய சூழலில் எல்லா படங்களைப் போலவும் நீண்ட துப்பாக்கிச்சூடு நடத்தி முடித்து விட்டார் அவர். எது எப்படி ஆயினும் நிச்சயமாய் பார்க்க வேண்டிய திரைப்படம்.
அட யுவன் பற்றி சொல்ல மறந்து விட்டேனே, மற்ற சிம்பு-யுவன் வெற்றி கூட்டணி போல் பாடல்கள் இதில் இல்லை. இருந்த ஒரு பாடலும் (எவண்டி உன்ன..) படமாக்கல் சரியில்லை.
இருந்தாலும் மோசமான ரகம் எல்லாம் கிடையாது, கேட்கலாம்.
பி.கு :
சிம்பு படம் என்றால் அந்த மாதிரி காட்சிகள் இருக்கும் போகவே மாட்டேன் என்பவர்கள் தாராளமாய் போகலாம்.
சிம்பு படம் என்றால் அந்த மாதிரி காட்சிகள் இருக்கும், அதற்காகத் தான் போக வேண்டும் என்றால் இன்னொரு முறை சிந்தித்து விட்டு போங்கள்.
பிடித்திருப்பின் ஓட்டு போட்டு பலரையும் சேர்த்திடுங்கள்…
உங்கள் கருத்துகளையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்..