வெயில் அதிகமா இருக்கு கொஞ்சம் பார்த்து பண்ணுங்க – தேர்தல் ஆணையம்

0
314

அரசியல் கட்சிகள் கடும் வெப்பம் நிலவும்போது பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் குடிநீர், மருத்துவ வசதி, கூரை அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கான பிரச்சாரத்தில் ஆளும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவி வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி சென்னையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 11-ம் தேதி விருதாச்சலத்திலும், 20-ம் தேதி சேலத்திலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இந்த இரு கூட்டங்களிலும் பங்கேற்ற 4 பேர் உயிரிழந்தனர். அதிமுக சார்பில், உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், கடும் வெயில் மற்றும் குடிநீர் கிடைக்காததால் இறந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக, சமூக அமைப்புகள் மற்றும் திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பின.

இதையடுத்து, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், கட்சி களின் முகவர்களுக்கு சில அறிவுறுத் தல்களை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணை யம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் கடும் வெயில் நிலவும் பகல் வேளையில் நடத்தப்படுவதால் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல் கள் தொடர்பாக, சமூக அமைப்புகள், சில அரசியல் கட்சிகளிடம் இருந்து புகார்கள் மற்றும் பரிந்துரைகள் வந்தன. சில பிரச்சாரக் கூட்டங்களில், அதிகளவு வெப்பத்தால் சிலர் இறந்தது தொடர்பாகவும் தகவல்கள் வந்தன.

இதை பரிசீலித்த ஆணையம், சூழலையும், உண்மை நிலையையும் கருத்தில் கொண்டு, கடும் வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் இடங்களில், போதுமான நிழல் தரும் அமைப்புகள், மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும். இதுதவிர, பொதுமக்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் விதமாக குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு குடிநீர், மருத்துவ முதலுதவி வழங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை, எந்த ஒரு மனித உயிரும் ஆபத்தில் சிக்குவதில் இருந்து காப்பாற்ற உதவும். ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல்களை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

உங்கள் கருத்தை தெரிவிக்க