உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார் ;

0
389

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயகாந்தும் அன்புமணியும் எங்கு போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துவந்தது.

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அவரை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாசிலாமணி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் அந்தக் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனினும், அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், மூத்த தலைவர்களான ஆர்.நல்லக்கண்ணு மற்றும் தா.பாண்டியன் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சி கூறியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு யார் வேட்பாளர் என அந்தக் கட்சி இதுவரை அறிவிக்கவில்லை.

ஆனால், 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மட்டும் இன்று வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மீதமுள்ள தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நாளை காலை வெளியாகும் என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘தேமுதிக நிறுவனத் தலைவரும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா. கூட்டணி முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.