அறுசுவையுடன் சித்திரை மாத பிறப்பு

  0
  86

  சித்திரை மாத பிறப்பிற்குரியதான சிறப்பு பச்சடி

  வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமான ப‌ச்சடி – வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம்  மற்றும்  உப்பு  ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள்.பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவா‌ர்க‌ள்.

  மாலையில் வாசலில் விளக்கேற்றி , கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்
  பச்சடி செய்யும் முறை 

  தேவையான பொருட்கள்

  மாங்காய் – 1
  வேப்பம்பூ – 2 டேபிள் ஸ்பூன்
  வெல்லம் – பாதி வெல்லம்
  புளி – தேவைக்கு
  தேங்காய் – தேவைக்கு
  கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  உப்பு, மிளகாய்ப்பொடி, ஏலப்பொடி,
  தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு – தேவைக்கு

  செய்முறை

  தேங்காயை சின்னச் சின்னதாக சுண்டலுக்கு போடுவது போல நறுக்கிக் கொள்ளவும்.

  மாங்காயை தோல் சீவி விட்டு தொக்குக்கு துருவுவது போல துருவியோ / மிக்சியில் ஒரு சுற்று அரைத்து தூளாக்கியது போலவோ செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

  பாகு வெல்லத்தை சீவிக் கொண்டு, ஏலம் சேர்த்து, ஒரு பால் கரண்டி அளவு தண்ணீரில் கரைத்து அடி கனமான வாணலியில் அரைப் பாகாக காய்ச்சிக் கொள்ளவும். பாகை ஸ்பூனால் ஊற்றினால் ஊற்ற வரவேண்டும். வாணலி சூட்டிலேயே இன்னும் கொஞ்சம் கெட்டியாகி விடும் என்பதால் இந்தப் பதத்திலேயே அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
  வேறு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வேப்பம் பூவை கசப்பு வாசனை வரும் வரை வறுங்கள். வேப்பம் பூ நன்றாக வறுபடும் போது நமக்கு தொண்டையில் ஒரு கசப்பு ஏற்படும். இதை அப்படியே வெல்லத்தில் போடுங்கள்.
  இந்த வாணலியிலேயே, ஒரு முறை அலம்பி விட்டு, இரண்டு பால் கரண்டி தண்ணீர் விட்டு கடலை பருப்பை வேக விட்டுக் கொள்ளவும். கடலைப் பருப்பு முக்கால்வாசி வெந்ததும் மாங்காய் தேங்காயை போட்டு நீர் வற்றும் வரை, கருகாமல் பார்த்து வதக்கவும்.
  தண்ணீர் சுண்டியதும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு,  உப்பு, மிளகாய்ப் பொடி, வேப்பம் பூ எல்லாவற்றையும் போட்டு ஒரு தரம் திருப்பி விட்டு வாணலியை இறக்கி விடவும்.
  வெல்லப் பாகை லேசாக சூடு பண்ணிக் கொண்டு, பாகில் மாங்காய் தேங்காய் வேப்பம்பூ கலவையை சேர்த்தும், இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். கனமான வாணலி என்பதால் பாத்திர சூட்டிலேயே இறுகிக் கொள்ளும். அதனால் வெகு நேரம் வெல்லத்தை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.
  கொஞ்சம் ஆறினதும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு திருப்பினால், நெய்யிலேயே செய்தா மாதிரி இருக்கும்.

  சித்திரா பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவதும் வெகு சிறப்பு. மருக்கொழுந்து அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி, சுத்தான்னம் (வெண் சாதம்) படைத்து வழிபட்டால் ஐஸ்வர்யங்களும் கிட்டும்.