தமிழக தேர்தல் களத்தில் 3-வது அணி இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுவது வயது முதிர்வால் அவருக்கு ஏற்பட்டுள்ள கோளாறு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது:
“அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ‘அம்மா’ என்று பெயரிட்டுள்ள ஜெயலலிதா, ஏன் எம்ஜிஆர் என்று பெயரிடவில்லை? எம்ஜிஆர் இல்லாமலா அதிமுக வந்தது? எனது ஆட்சியில் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளது என்று கூறும் ஜெயலலிதா, முதலில் அவரது அமைச்சர்களை தலைநிமிரச் செய்யட்டும். அதிமுக, திமுக ஆட்சிகளால் தமிழகத்தில் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளதே தவிர வறுமை ஒழியவில்லை.
தமிழகத்தில் 3-வது அணி இருப்பது எனது கண்ணுக்குத் தெரியவில்லை என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இது, அவரது வயது முதிர்வால் ஏற்பட்டுள்ள கோளாறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் 6 முகங்கள். எனவே, எங்களது கூட்டணி ஆட்சியின் மூலம் தமிழகத்துக்கு ஏறுமுகம்தான்” என்றார்.