வெளி மாநில ஒப்பந்த வாகனங்கள் தமிழகத்திற்குள் ஒவ்வொரு முறை நுழையும் போதும் கூடுதல் வரி செலுத்த தமிழக அரசு கொண்டு வந்த சட்டதிருத்தம் செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகன வரிவிதிப்புச் சட்டத்தில் தமிழக அரசு கடந்த 2011-12-ம் ஆண்டு புதிதாக ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தது. அத்திருத்தத்தின் படி, வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் ஆம்னி பேருந்து உள்ளிட்ட ஒப்பந்த வாகனங்கள் ஒவ்வொரு முறையும் கூடுதல்வரி கட்ட வேண்டும். இதற்கு முன்பாக வாரம், மாதம், மூன்று மாதம் என்ற அடிப்படையிலேயே வெளி மாநில ஆம்னி பேருந்துகள் மற்றும் ஒப்பந்த ஊர்திகளுக்கு வரி வசூலிக்கப்பட்டது.
அரசின் இந்த புதிய சட்டத் திருத்தத்தால் வெளி மாநில ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் அதிகப்படியான எண்ணிக்கையில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியவில்லை எனவும் அரசின் புதிய சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி புதுச்சேரி மாநில ஒப்பந்த ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வி.ராம சுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப் போது ஆம்னி பேருந்துகளின் மோசடியைத் தடுக்கவே இத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப் பட்டது. மனுதாரர் தரப்பு வழக் கறிஞர், மோசடியைத் தடுப்பதற்காக கூடுதலாக வரி விதிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மோசடியைத் தடுக்க கடுமையான விதிமுறை களைக் கொண்டு வரவேண்டுமே தவிர அதற்காக கூடுதல் வரிவிதிப்பது என்பது தவறு என உச்ச நீதிமன்றமே பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. எனவே தமிழக அரசு கொண்டு வந்துள்ள வெளி மாநில ஒப்பந்த ஊர்திகளுக்கு கூடுதல் வரிவிதிக்கும் சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே அந்த சட்டத் திருத்தம் செல்லாது’’ என உத்தரவிட்டனர்.