ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது. இது, சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரிலும் நீடித்தது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் வர்ணனையாளராக இருந்த வார்ன், சாமுவேல்ஸ் ‘அவுட்’ குறித்து விமர்சனம் செய்தார். இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் பேட்டிங்கில் அசத்திய சாமுவேல்ஸ் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட விருதை, வார்னுக்கு சமர்ப்பிக்கிறேன் எனக் கூறினார். இதுகுறித்து சாமுவேல்ஸ் கூறுகையில், ”பைனல் போட்டியன்று காலை எழுந்த போது என் மனதில் ஒரு விஷயம் அடிக்கடி வந்து சென்றது.
ஷேன் வார்ன் தொடர்ச்சியாக ஏன் விமர்சனம் செய்கிறார். அவருக்கு என் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. நான் ஒருபோதும் அவரை அவமரியாதை செய்ததில்லை. அவர் மனதில் உள்ள விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டும். இப்படி தொடர்ச்சியாக விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்விருதை வார்னுக்கு அளிக்கிறேன். நான் ‘மைக்’ முன் பேசுபவன் அல்ல, ‘பேட்’ மூலம் பதில் கூறுபவன்,” என்றார்.