மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மதுரை மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரையிலான பக்தர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளில் 3,300 போலீஸார் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் ஒரே இடத்தில் குவிவதைத் தடுக்க 10 இடங்களில் அகண்ட திரை (எல்இடி) அமைக்கப்படுகிறது. ஏ.வி. மேம்பாலம் பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் திருடுபவர்களைக் கண்காணிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி, மதுரை மாவட்டத்தில் 4,400 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்தபோதும், நீர் வரத்துகுறைவால் அணையில் நீர் திறக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்,நாளை 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை. இந்த ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும் போது, ஆற்றில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நகரத்தில் சாலை போக்குவரத்து மாற்றம்
ஏப்ரல் 22 ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதால், அன்று ராமராயர் மண்டபத்துக்குச் செல்லும் வழி மற்றும் ஏ.வி. மேம்பாலம், யானைக்கல் புதுப்பாலம் வழியாக எந்த வாகனத்துக்கும் அனுமதி கிடையாது. புதுநத்தம் சாலை, அழகர்கோவில் சாலை, மேலூர் சாலையிலிருந்து கீழவாசல், சிம்மக்கல் வழியாகச் செல்லவேண்டிய மாநகர் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், ரேஸ்கோர்ஸ் சாலை, நத்தம் சாலை சந்திப்பு, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, நீதிமன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அரவிந்த் மருத்துவமனை குருவிக்காரன் சாலை பாலம், செயின்ட் மேரிஸ் சந்திப்பு, தெற்குவெளிவீதி வழியாகச் செல்லவேண்டும்.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து புதுநத்தம் சாலை, அழகர்கோவில் சாலை மற்றும் மேலூர் சாலைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும், கட்டபொம்மன் சிலை, முனிச்சாலை, காமராஜர் சாலை, குருவிக்காரன் சாலை பாலம், அரவிந்த் மருத்துவமனை, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர், மேலூர் சாலை, 120 அடி சாலை வழியாக புதுநத்தம் சாலைக்குச் செல்லவேண்டும்.
தத்தனேரி சாலையிலிருந்து புதுநத்தம் சாலை, அழகர்கோவில் சாலை, மேலூர் சாலைக்குச் செல்லவேண்டிய வாகனங்கள் அனைத்தும், எல்ஐசி சந்திப்பு, குலமங்கலம் சாலை, செல்லூர் 60 அடி சாலை, பி.டி.ராஜன் சாலை வழியாகச் செல்லவேண்டும்.
ஓபுளா படித்துறை, வைகை தென்கரைப் பகுதி மற்றும் வைகை வடகரைகளில் கார் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. தென்கரையில் இருந்து எந்த வாகனமும் வைகை வடகரைக்கு வர அனுமதி இல்லை என மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.