இந்திய மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஹார் மாநிலத்தில் முதலில் சில பகுதிகளில் துவங்கி, ஆறு மாத காலத்திற்குள் படிப்படியாக மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமென அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் முன்னதாக அறிவித்திருந்தார்.
ஆனால், தற்போது மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பிஹாரில் சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான தருணம் வந்துவிட்டதாக அவர் முதல்வர் நிதீஷ் குமார் கூறியிருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் வெற்றிபெற்றால் பிஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமென வாக்குறுதி வழங்கியிருந்தார் நிதீஷ் குமார்.
உள்ளூரில் தயாரிக்கப்படும் மது விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு நான்கு நாட்களில் மக்கள் பெரும் ஆதரவு அளித்ததால், முழு மதுவிலக்கை அமல்படுத்த முடிவுசெய்ததாக நிதீஷ் குமார் கூறியிருக்கிறார்.
நிதீஷ் குமாரின் இந்த முடிவுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. 243 சட்டமன்ற உறுப்பினர்களும் மது அருந்தப் போவதில்லை என்று உறுதியெடுத்துள்ளனர்.
இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பிஹாருக்கு இதனால் சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி வருவாயில் இழப்பு ஏற்படும்.
குஜராத்தில் ஏற்கனவே மதுவிலக்கு அமலில் இருக்கிறது. கேரளாவில் பகுதியளவுக்கு மது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.