விஜயகாந்த் அறிக்கை ,தி.மு.க. மற்றும் அ.தி.மு.க ஓரம் கட்டப்படுவார்கள்.

ஒசூர்: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் ஓரம் கட்டப்படுவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணி பெயரில் போட்டியிடுகின்றனர். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஒசூர், வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. கிருஷ்ணகிரி, பர்கூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஊத்தங்கரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசுகையில். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றுவோம்.

அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் கூறினார். இப்போது என்னவாயிற்று ? என கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்களுக்கு நல்லது செய்யவே தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் வரும் சட்டசபை தேர்தலில் ஓரம் கட்டப்படுவார்கள் என்று விஜயகாந்த் கூறினார்.