யாருக்கு வாக்களிக்க வேண்டும் – சகாயம் பேச்சு

எல்லா அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவர்களும் என்ன சொவர்களோ அதைத்தான் சகாயமும் சொல்லி இருக்கிறார்.

கட்டாயம் வாக்களியுங்கள், சிந்தித்து வாக்களியுங்கள்.

மாற்றத்தை அரசியலில் தேட வேண்டாம், சமூகத்தில் தான் அதை ஏற்படுத்த வேண்டும் என அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் தெரிவித்தார்.

மன்னார்குடியில் ‘மன்னையின் மைந்தர்கள்’ அமைப்பு சார்பில் ‘நமது வாக்கு நமது உரிமை’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மருத்துவர் பாரதிச்செல் வன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்புரையாற்றிய உ.சகாயம் பேசும்போது, “மே 16-ம் தேதி நம்முடைய பங்களிப்பு சமூகத்தின் மாற்றத்துக்கான பங் களிப்பாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து வாக்காளர் களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். உலகிலேயே மிகவும் அபாயகரமானவர்கள் சமூக பொறுப்பற்றவர்கள் தான். தேர்தலில் யார் வாக்களிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதிகம் படித்தவர்கள் தான். இவர்களே அநீதிக்கு காரணம். இவர்களை தான் நாம் மாற்ற வேண்டும்.

அனைவரும் வாக்களிக்க வந்து விட்டால், நம்முடைய வேட்பாளர் களில் நேர்மையற்றவர்கள், ஊழலுக்கு துணைபோனவர்கள் எல்லாம் குறைந்து போவார்கள். வாக்கு என்பது இந்த ஜனநாயகத்தில் ஒங்கி உயர்ந்த உன்னதமான கருவி. அதை பரிசுக்கோ, பணத்துக்கோ விற்கக் கூடாது. யார் லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்கள் பெரிய அளவில் லஞ்சம் பெறப்போகிறார்கள் என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.

பெரியார் செய்த பகுத்தறிவு புரட்சியால் தமிழகம் மாறியது. தற்போது தமிழகத்தில் நேர்மை புரட்சி ஏற்பட கூடிய காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. லஞ்சம் வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன் என ஒவ்வொரு இளைஞரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாற்றத்தை அரசியலில் தேட வேண்டாம். சமூகங்களில் ஒவ்வொருவரும் மாறி, அந்த மாற்றத்தை சமூகத்திலிருந்து ஏற்படுத்த வேண்டும்” என்றார்.