ஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே மற்றும் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணிகள் மோதின. இதில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புனே வெற்றி பெற்றது. 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ஐபிஎல்.

ரசிகர்கள் வரவேற்பை தொடர்ந்து இதுவரை 8 போட்டித் தொடர்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (2010 மற்றும் 2011), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2012 மற்றும் 2014), மும்பை இந்தியன்ஸ் (2013 மற்றும் 2015) ஆகிய அணிகள் தலா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), அணிகள் தலா 1 தடவையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் டாசில் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது.

அந்த அணிக்கு சிம்மன்ஸ், ரோகித் சர்மா துவக்கம் தந்தனர். இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ரோகித் 7 ரன்னில் அவுட் ஆனார். சிம்மன்ஸ் (8), பாண்ட்யா (9), பட்லர் (0), போலார்டு (1) அவுட் ஆகி வெளியேறினர். நம்ம சென்னை வீரர் முருகன் அஷ்வின் வீசிய சுழலில் சிக்கிய ஸ்ரோயாஸ் கோபால் (2),ரன்னில் அவுட் ஆனார். வினய்குமார் (12), அவுட் ஆக மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. ஹர்பஜன் (45), மெக்லீனகன் (2) ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

மும்பை அணியை தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய புனேவுக்கு ரஹானே அதிரடியாக 42 பந்தில் 66 ரன்னும்,டூ பிளசிஸ் 33 பந்துகளில் 34 ரன்களும் சேர்த்தனர். டூ பிளசிஸ் அவுட்டை தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு ரஹானேவுடன் இணைந்த பீட்டர்சன் 14 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். இதனால் 14.4 ஓவரில் புனே அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது