மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்

 

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதை சுமார் 10 ஆயிரம் பேர் நேரில் கண்டு இறைவன்-இறைவியை தரிசித்தனர்.உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. திங்கள்கிழமை காலையில் மரவர்ணச் சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளினர். பின்னர் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர்.

இன்று அதிகாலை வெள்ளிச் சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் எழுந்தருளி, முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின் திருக்கல்யாண மண்டபத்துக்கு புறப்பாடாகினர்.மேல, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை 8.30 மணி முதல் 8.54 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது திருப்பரங்குன்றம் அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாள், அருள்மிகு சுப்பிரமணியசாமி, தெய்வானை ஆகியோர் எழுந்தருளினர்.முன்னதாக திங்கள்கிழமை இரவு இந்திர விமானத்தில் சுவாமி, பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் எழுந்தருளினர். சுவாமி, அம்மன், கிழக்கு, வடக்கு மாசி வீதிச் சந்திப்பில் லாலாஸ்ரீ ரெங்கசத்திரம் திருக்கண் மண்டபத்தில் இரவு எழுந்தருளினர்.அங்கு சுவாமி தேரில் சிறுவன் சிவகணேஷ் சிவன் வேடத்திலும், சிறுமி முத்துபாண்டி மீனாட்சி வேடத்திலும் இருந்து வில்லில் நாண் எய்து போர் புரிவது போன்ற பூஜைகள் நடைபெற்றன.

பின் சுந்தரேசுவரரிடம் மீனாட்சி அன்பு கொண்டு திருமணத்துக்கு சம்மதிப்பதற்கான பூஜையும் நடைபெற்றது. அதன்பின் மீனாட்சியம்மனுக்கு பக்தர்கள் சீர்வரிசையை வைத்து சுமந்து சென்றனர்.திருக்கல்யாணத்துக்கு பின் இரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும், யானை வாகனத்தில் சுவாமி, பிரியாவிடையும் மாசி வீதிகளில் எழுந்தருள்கின்றனர். புதன்கிழமை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.விருந்து: திருக்கல்யாணத்துக்கு வந்த பக்தர்களுக்காக வடக்கு வெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருக்கல்யாணம் முடிந்ததும் மஞ்சள், குங்குமம், கயிறு கொண்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது