நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டன.

சமூக வலைத் தளங்களில் நட்சத்திரக் கிரிக்கெட்டைப் புறக்கணிப்போம் என வெகுஜனங்களே வேண்டுகோள் வைக்கும் நிலை. போதாக்குறைக்கு அஜீத்தின் புறக்கணிப்பு செய்தி மீடியாவில் அதிக முக்கியத்துவம் பெற்றது


இதன் விளைவை மைதானத்தில் பார்க்க முடிந்தது. காலையில் மேட்ச் ஆரம்பித்தபோது, கேலரிப் பக்கம் தலைகளே இல்லை. பெரும்பாலும் டோனர் பாஸ் எனப்படும் ‘ஓசி’ டிக்கெட்டில் பார்க்க வந்தவர்கள்தான் அதிகம். இவர்களைத் தவிர, மீதி நட்சத்திரங்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். நாட்டுப் புறக் கலைஞர்களும் கணிசமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். பிற்பகல் வரைதான் இந்த நிலை.

மாலை நெருங்க நெருங்க, ஓரளவு பார்வையாளர்கள் திரண்டுவிட்டனர். இறுதிப் போட்டியில் சூர்யாவின் அணியும் ஜீவாவின் அணியும் விளையாடியபோது, கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் அரங்கிலிருந்ததாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது

கூட்டம் குறைவாக இருந்தாலும், நடிகர் சங்கத்துக்குக் கிடைத்த தொகை எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது என்கிறார்கள். ரூ 13 முதல் 15 கோடி வரை இந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் திரட்டிவிட்டார்கள். இதில் பெரும் தொகையை சன் டிவி கொடுத்தது.

சக்தி மசாலா, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, ராம்ராஜ் நிறுவனம், ஐசரி கணேஷ் கல்வி நிறுவனங்கள் கொடுத்த நன்கொடைகள் அனைத்தும் சேர்ந்து, நடிகர் சங்கக் கட்டடத்தை முழுமையாகக் கட்டும் அளவுக்கு நடிகர் சங்கத்துக்கு பலம் சேர்த்துள்ளது.