வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சச்சினின் சத வேட்டை தொடர்கிறது..! கூடவே தோல்வி ராசியும்...!

| | 2 comments
சச்சின் ஐபிஎல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை கொச்சி அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறார். உலக கோப்பை முடிந்தவுடன் சச்சின் ஒய்வு பெற வேண்டும் என ஓதிய வாய்கள் வாவ்.. என்று வியக்கும் அளவுக்கு விளாசி தள்ளிய சச்சின் இன்னிங்க்ஸ் ன் கடைசி பந்தில் சதமடித்தார். ஆனால் பின்னர் விளையாடிய கொச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறந்த ஆட்டத்தால் அவ்வணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொச்சி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச தீர்மானித்தது.
முதலில் ஜேகப்ஸ் உடன் களம் இறங்கிய சச்சின்  அவர் சரியாக விளையாடாததால் கொஞ்சம் வேகமாக ரன் குவிக்கும் கட்டாயத்தில் இருந்தார். முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்ந்த நிலையில் ஜேகப்ஸ் அவுட் ஆனார். அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சச்சின் அந்நேரத்திர்கெல்லாம் நாற்பது ரன்களை கடந்திருந்தார். இதில் பெரேரா பந்தில் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ், ஆர் பி சிங் பந்தில் அடித்த ஸ்கொயர் பவுண்டரி என எல்லாமே கண்கொள்ளா காட்சிகள்.

சென்ற போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் அடுத்ததாக அம்பத்தி ராயுடு களம் கண்டார். அவர் வந்த வேகத்தில் மளமள என ரன் குவிக்க ஆரம்பித்தார். ஸ்கோர் வேகமாக ஏற தொடங்கியது.ராயுடு நான்கு சிக்ஸர்கள் அடித்தார். சச்சின்-ராயுடு இணை 50 ரன்களை கடந்த போது அதில் சச்சினின் பங்களிப்பு வெறும் 12 ரன்கள் தான்.

சச்சின் அரை சதத்தை கடந்து தனக்கே உரிய பாணியில் சற்று நேரம் இளைப்பாற பொறுமையாக விளையாடினார். அந்த நேரத்தில் அருமையாக விளையாடி ராயுடு இருபத்தி சொச்சம் பந்துகளில் அரை சதம் கண்டார் (28?). அது வரை பொறுமையாக விளையாடி வந்த சச்சின் அடுத்து பூதாகரமாக வெடிக்க தொடங்கினார். ராயுடு 44 ரன்கள் எடுத்திருந்த போது சச்சின் 55 ரன்கள் தான் எடுத்திருந்தார் பின்னர் ராயுடு 50 ரன்களை தொடும் போதெல்லாம் சச்சின் எண்பதை தாண்டி நின்று கொண்டிருக்கிறார்.

வினய் குமாரின் ஒரே ஓவரில் ராயுடு இரண்டு சிக்ஸர்கள் அடிக்க, சச்சினோ அதே ஓவரில் தனது ட்ரேட்மார்க் ஸ்வீப் ஷாட்டை அடித்து 4 ரன் சேர்த்தார். பின்னர் லெக் சைடில் கால்களை தூக்கி பந்தை லாவகமாக எல்லைக்கோட்டை தாண்டி விழுமாறு அடிக்கும் அந்த சிறு வயது சச்சினும் நமக்கு காண கிடைத்தார். பின்னர் தோனி ஸ்டைலில் ஒரு காலை அகற்றி பந்தை சிக்ஸர்க்கு சச்சின் விரட்டியது பார்க்க ஒரு மாதிரி இருந்தது.(சச்சின் ஸ்டைலாக விளையாடுவதை பார்த்தே பழகி விட்டது).

சரி எப்படியும் இன்று சச்சின் சதம் போட்டு விடுவார் நாம் பதிவு எழுதலாம் என்று இருந்தேன். ஆனால் நான் என் நண்பர்களுடன் சேர்ந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தேன். நான் பதிவு எழுத ஆரம்பிக்க போதாத காலம் , ஒருவேளை அதற்கு பின்னர் சச்சின் அவுட் ஆனால் நான் அவசர குடுக்கையாக பதிவு எழுத ஆரம்பித்ததால் தான் சச்சின் அவுட் ஆனார் என்று அவர்கள் பேசும் அற்ப காரணங்களுக்கு இடங்கொடாமல் பொறுமையாய் ஆட்டத்தை ரசித்து கொண்டிருந்தேன்,சச்சின் சற்றும் பொறுக்காமல் ரன்னை ஏற்றி கொண்டிருந்தார்.

சச்சின் நூறை நெருங்கும் நிலைமையை புரிந்து கொண்ட ராயுடு சச்சினுக்கு சிங்கில்ஸ் ஆடினார். சச்சினும் இடை இடையில் தனது நுணுக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை ஏற்றி கொண்டே இருந்தார்.

18 வது ஓவரில் இருந்தே சச்சின் எப்போது சதம் அடிப்பார் என்று ஆர்வம் தொற்றிக்கொண்டது. பெரேரா பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்து சச்சின் 85 ஐ தாண்டி விட்டார்.

19 வது ஓவரில் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் அவசரமாக ஒரு ரன் ஓட பீல்டர் ஸ்டம்பை நோக்கி எறிந்த பந்து ஸ்டம்பில் படாது விலகி செல்ல மீண்டும் ஒரு ரன் ஓடினார். நல்ல வேலைக்கு அடுத்த ஓவரின முதல் பந்திலியே ராயுடு சின்கிள் எடுத்தார். ஐந்து பந்துகள் பத்து ரன்கள். சச்சின் ஃபோர் அடித்து 95ற்கு சென்றார். பின்னர் அடுத்த பந்தில் ராயுடு தனது விக்கெட்டை சச்சினுக்காக கொடுத்த போது பாவமாக இருந்தது(பெயருக்கு ஏற்றாற் போல் அவர் அம்பத்தி சொச்சத்தில் அவுட் ஆனார்). ஆனாலும் ராயுடு எல்லாம் இந்திய அணியில் இன்னும் ஏன் சேர்க்கப்படவே இல்லை என்பது தெரியவில்லை மனிதர் என்னமாய் பந்தை விரட்டி விரட்டி அடிக்கிறார்.

அடுத்து பொல்லார்டு வந்தார், மும்பை மைதானத்தினர் என்ன நடக்க போகிறதோ என்று மயான அமைதியில் கிடக்க ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து 99ற்கு தாவினார் சச்சின். கடைசி பந்தில் சின்கிள் எடுத்து சதத்தை பூர்த்தி செய்ததும் என்னமோ நாமே நூறு ரன்கள் அடித்தது மாதிரியான உணர்வு வருவதை எல்லாம் தடுக்க முடிவதில்லை.

பின்னர் ஆடத் தொடங்கிய கொச்சி அணியின் ப்ரேண்டான் மெக்குல்லம் மற்றும் ஜெயவர்தனே இணை தொடக்கம் முதலே ரன் விகிதத்தை சரியாக கடை பிடித்து ஆடி வெற்றி பெற்றது.

மலிங்கா இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கி விட்டார் அதுவுமில்லாமல் அவர்களின் தேவைப்படும் ரன் விகிதம் எடுக்கப்பட்ட ரன்களின் விகிதத்துடன் எப்போதும் ஒத்தே இருந்தது.

பொல்லார்டு பிடிவாதமாக சென்று ஒரு பந்தை பவுண்டரிக்கு தள்ள கூட்டம் அவரை கரித்து கொட்டியது. ஆனால் அடுத்த பந்தில் மனிதர் என்னமாய் ஐந்து ரன்களை சேமித்தார். சிக்சருக்கு செல்ல வேண்டிய பந்தைத் தடுத்து விழுந்த வேகத்தில் மீண்டெழுந்து அப்பப்பா... உடனே அதே கூட்டம் அவரை புகழ்ந்து தள்ளியது வேறு விஷயம். நம்மவர்கள் எப்போதும் அப்படித்தானே.

ஜெயவர்தனே 56 ரன்களும் மெக் குல்லம் 81 ரன்களும் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இது என்ன இந்திய அணியா? தோற்றதும் கவலைப்படுவதற்கு மும்பை தானே சச்சின் விருந்து கிடைத்தால் சரி என்று தேற்றினாலும் சச்சின் சதமடித்து தோற்றதால் நண்பர்களின் அந்த
"சச்சின் சதமடிச்சா டீம் ஜெயிக்காது" வாதம் மீண்டும் களை கட்டியது.

"சச்" ஆட்டங்கள் தொடரட்டும்...

பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்.. மனதை தேற்றுவதற்கு உதவும்...! 

2 கருத்துகள்:

  1. Ambati Rayudu played for ICL.. So he neer enter into Indian national Team.. not only to him for ICL players can't get into Team India

    பதிலளிநீக்கு
  2. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...